Friday, August 30, 2019

லாப வெறி பற்ற வைத்த தீ


எரியும் நுரையீரல் : லாப வெறி பற்ற வைத்த தீ









அமேசான் மழைக்காடுகள் கிட்டத்தட்ட இருபது நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது.  உலகம் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடில் 25 % ஐ உள் வாங்கி, 20 % ஆக்சிஜனை வெளியிடக் கூடியதாய் அமேசான் மழைக்காடுகள் உள்ளதால் உலகின் நுரையீரல் என்றே அது வர்ணிக்கப்படுகிறது.

பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்வடார், பொலிவியா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய ஒன்பது தென் அமெரிக்க நாடுகளில் 6.7 மில்லியன் சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது அமேசான் மழைக்காடுகள். இதிலே அறுபது சதவிகிதம் பிரேசில் உள்ளது. இப்போது காட்டுத்தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதும் பிரேசிலில்தான்.

பெரும்பாலான உலக மக்கள் கண்டறியாத அரிய வகை விலங்கினங்கள், பறவைகள், பூச்சியினங்கள் கொண்ட, அமேசான் மழைக்காட்டில் நீண்ட வாழ்நாள் கொண்ட பெரு மரங்களுக்கும் பஞ்சமில்லை. அவையெல்லாம் பற்றி எரிவதையும் பாம்புகளும் பறவைகளும் கருகிய கட்டைகளாக கிடப்பதைப் பார்த்து பதறாதவர்கள் இருக்க முடியாது.

காட்டுத் தீ என்பது இயற்கையில் நடைபெறக் கூடியதுதான். ஆனால் இப்போது பிரேசிலில் ஏற்பட்டுள்ளது இயற்கையானதா? இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 70,000 காட்டுத்தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளதென்ற தகவலும் கடந்த ஆண்டை விட 83 % அதிகம் என்பதும் இந்த கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடைந்தெடுத்த பிற்போக்குவாதியான போல்சனரோ, தான் பதவியேற்ற உடனேயே அமேசான் மழைக்காடுகளில் உள்ள கனிம வளத்தை பயன்படுத்த காடுகளை அழிக்கப் போவதாகவும் சுற்றுச் சூழல் குறித்த உலக உடன்பாடுகளிலிருந்து வெளியேறப் போவதாகவும் அறிவித்தார் என்பதையும் இப்போதைய காட்டுத் தீயோடு இணைத்துப் பார்த்தால் தீ பரவுவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்  என்பது புரியும்.

தங்களின் லாபம் பெருகுவதற்காக கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்களை சூறையாடவோ அதன் மூலம் மனித இனமோ அல்லது மற்ற உயிரினங்களோ அழிவதைப் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள் என்பதற்கான இன்னொரு உதாரணமாக அமேசான் மழைக்காட்டுத் தீ திகழ்கிறது.

இப்பிரச்சினை பிரேசில் நாட்டோடு முடிகிற ஒன்றல்ல. புவி வெப்பமயமாதல் காரணமாக தட்ப வெப்ப நிலைகளில் பெரும் மாற்றம் நிலவிக் கொண்டு வருகிறது. துருவப் பிரதேசங்களில் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச் சூழல் அனுமதிக்கப்பட்டால் எதிர்காலத்தில் இந்த பூமியின் இருப்பே கேள்விக்குறியாக மாறி விடும்.

No comments:

Post a Comment