Wednesday, August 7, 2019

எங்களின் கனவு காஷ்மீர் -ஷேக் அப்துல்லா



1951 நவம்பர் 5 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் நிர்ணய சபையில் காஷ்மீரின் தந்தை என்று போற்றப்படும் ஷேக் அப்துல்லா நிகழ்த்திய உரையின் பகுதிகள்
நம்முடைய நீண்ட காலப் போராட்டங்களின் பின்னணி யோடு நம்முடைய சுதந்திரத்திற்கான இயக்கம் இணைகிறது. நாம் சகலபகுதி மக்களின் சகோத ரத்துவத்திற்காகவும் பொதுவான நோக்கத்திற்காகவும் தியா கத்திற்காகவும் நம்முடைய ஒற்றுமையை பலப்படுத்து வோம். இதற்கு எதிராக மத ரீதியான சக்திகள் முஸ்லிம் லீக் மற்றும் அதன் வட்டாரங்களிலிருந்தும், அதேபோல இந்து வகுப்புவாத சக்திகளும் நமது மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தும்  நமக்கெதிராக தூண்டப்படுகிறார் கள். எல்லையில்லாத அதிகாரம் கொண்ட கூட்டமும் மறுபுறம் பணக்கார விவசாய சக்திகளும் அரசின் அதிகாரவர்க்கங்க ளுடனும் வகுப்புவாத சக்திகளுடனும் கைகோர்த்துக் கொண்டு நமக்கு எதிராக தாக்குதல் தொடுக்கின்றனர்.  இந்த அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டதன் மூலம், அதிகாரத்திற்கான நமது போராட்டம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இதன் மூலமாக நமது நோக்கமான ‘புதிய காஷ்மீர்’ நிஜமாகியுள்ளது. இது நிச்சயமாக காஷ்மீரத்து உழைப்பாளிகளை எழுச்சியூட்டும். 
ஜம்மு- காஷ்மீர் எல்லையோர பகுதிகளான பூன்ஞ், ஷெனாய் இளகாஸ் உள்ளிட்டவை பொதுவாக ஜம்மு-காஷ்மீர் என்று அறியப்படுகிறது. நம்முடைய வலுவான ஒற்றுமையால் சமத்துவம் மற்றும் சுயநிர்ணய உரிமையும் பூர்த்தியடையும். நீண்ட காலமாக அனுபவித்து வந்த அடக்கு முறைகளும் வறுமையும் இருட்டும் புறக்கணிப்புக்களும் ஒழிக்கப்பட்டு நாமும் நமது குழந்தைகளும் ஒரு ஒளி மயமான எதிர்காலத்திற்குள் நுழைகிறோம். இந்த அழகான  பள்ளத்தாக்கு சுதந்திரத்தால் ஆட்சி செய்யப்படும். கிழக்கு மற்றும் உலகின் பல பகுதியிலிருந்து வரலாற்று ரீதியாக புலம் பெயர்ந்த அறிவுப்பூர்வமான, நேர்மையான, கடின உழைப்பிற்கும் பெயர் போன மக்களால் இந்த மண் ஆசியா வின் பொன்விளையும் பூமியாகவும் உருவாக நாம் முன்மொழிந்துள்ள இந்த அரசியலமைப்பு அவர்களுக்கு தீர்மானகரமானதாக விளங்கும். 1791 பிரான்ஸ்  அரசியலமைப்பு சட்டத்தின் 3வது பிரிவு குறிப்பிட்டுள்ள வாசகத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். “இறையாண்மைக்கான அனைத்து  ஆதாரங்களின் அடிப்படைகளும் இந்த தேசத்திலேயே குடிகொண்டிருக்கிறது. இறையாண்மை ஒன்றுதான் பிரிக்க முடியாதது. மாற்றித்தர இயலாதது. பாதுகாப்பானது. அது தேசத்தை சார்ந்தே நிற்கிறது”.
நமது முதல் முக்கியப் பணியான அரசியல்சட்டத்தை உருவாக்குவதை எடுத்துக்கொள்ளோம். உலகின்  உயர்ந்த பட்ச ஜனநாயக கோட்பாடுகளின் வழிகாட்டுதல் அடிப்படை யில் நமது அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். அனைத்து முற்போக்கு அரசியலமைப்புச் சட்டங்களில் இழைந்தோடியுள்ள சமூக நீதி மற்றும் சுதந்திரம், சமத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது பணிகள்  இருத்தல் வேண்டும். நமது அரசியல் வடிவமைப்பானது உலக ஜனநாயக நாடுகளில் வழக்கத்தில் உள்ள சட்ட ஆட்சியின் புரிதல் அடிப்படையில் இருக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் ஆட்சியாளர்கள் நீதித் துறையில் செல்வாக்கு செலுத்தாமல் சுதந்திரமாக செயல்படும் வகையிலும் இருத்தல் வேண்டும். தனிநபரின் பேச்சுரிமையும், அமைப்புக்களாக செயல்படவும், ஜனநாயக இயக்கங்களை மேற்கொள்வதற்கும் முழு சுதந்திரத்தை நமது அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்த வேண்டும். பத்திரிகை சுதந்திரமும் விமர்சனங்களும் அரசியல மைப்பில் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும்.
தற்போதைய நம்முடைய அரசியலமைப்பின் நோக்கமா னது  இந்தியாவைச் சார்ந்துள்ளது என்பதில் உங்களுக்கு எவ்வித சந்தேகமும் இருக்கக் கூடாது. நாம் கைவிடப்பட்ட நிலையில் நமக்கு ஆதரவுக் கரம் நீட்டிய நல்லெண்ணம் கொண்ட இந்திய மக்களுடனும் இந்திய அரசுடனும் நாம் இணைந்துள்ளோம் என்பதில் மிகப் பெருமை கொள்வோம். இந்திய அரசியலமைப்பானது கூட்டாட்சி முறையில் மாகா ணங்களுக்கு  அதிகாரங்களை வழங்கியுள்ளது.  நம்மைப் பொறுத்தளவிலும் மாகாணங்களுக்கு வேறுபட்டு நமக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும். இந்த அதிகார வரம்பில் பாதுகாப்புத்துறை, அயல் உறவுத்துறை மற்றும் தொலைத் தொடர்பு போன்ற விவகாரங்கள் இடம்பெறாது என்பதை இணைப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது. நாம் விரும்புகிற வகையில் நமது அரசியலமைப்பை உருவாக்கிட நமக்கு முழு சுதந்திரம் உள்ளது. நம்முடைய மக்களின் நல்லதோர் வாழ்க்கைக்காகவும் எதிர்காலத்திற்காகவும் பொது நோக்கத் திற்காக நல்ல பங்காளிகளாக இருப்போம்.
ஜம்மு - காஷ்மீர் மக்களை மிகவும் வாட்டி வதைக்கிற ஒரு நோய் உண்டுஎன்றால் அது வறுமையாகும். அவர்களுடைய பொருளாதார, சமூக நீதியை உத்தரவாதப்படுத்தி அவர்களு டைய வாழ்க்கையைப் பாதுகாக்க முடியாவிட்டால், அவர்க ளுடைய அரசியல் சுதந்திரத்தால் எந்த பலனும் ஏற்படாது. இந்த நிலையை சரிசெய்வதற்கான முறையில் பொரு ளாதார அமைப்புக்களும் உருவாக்கப்படும் . இதற்கான முறையில் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான கொள்கையினை நீங்கள் வடிவமைக்க வேண்டும்.
ஜம்மு - காஷ்மீரின் எதிர்கால அரசியல் வடிவம் குறித்து முடிவு செய்யும் போது நம்முடைய மாநிலத்தில் வசித்து வரும் பல்வேறு உப தேசிய இனக்குழுக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கலாச்சார ரீதியாக வேறுபட்டாலும் வரலாறு  நம்மை ஒன்றாகப் பிணைத்திருக்கிறது. தங்களு டைய சந்தோசத்தையும் துக்கத்தையும் ஒவ்வொருக் கொருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த ஒற்றுமையை உத்தரவாதப்படுத்த வேண்டும்.   நமது மாநிலத்தின் வரலாறு கொடுமையானது. பழைய நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் பாதை  மேலும் மோசமான ஆட்சிக்கு கொண்டு சென்றது. இந்த பிராந்தியத்தின் மொத்த நிலத்தின் மீதும் மகாராஜா தனது உரிமையை எடுத்துக் கொண்டார்.  பிரிட்டிஷாருக்கு மகாராஜா வழங்கிய தொகை யினை சரி செய்வதற்காக மக்கள் மீது கடுமையாக வரிச் சுமையினை சுமத்தினார். இத்தகைய சர்வாதிகார ஆட்சி யினால் மக்களின் வாழ்க்கைத் தரம் சீர்குலைந்தது. எங்கும் வறுமை தலைவிரித்தாடியது. 1848ல் நான்காயிரத்திற்கும் அதிகமான கைவினைஞர்கள் லாகூருக்கு நிரந்தரமாக இடம்பெயர்ந்தனர். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திடமும், மன்னரின் சர்வாதிகார ஆட்சியிடமும் சிக்கித் தவிக்கும் தாயகத்தின் இந்த கொடுமையான நிலைமையினை கண்டு உள்ளம் நொந்து நம்முடைய காஷ்மீர் மண்ணின் புகழ்பெற்ற கவிஞர் இக்பால் தனது கவிதைகளில் வெளிப்படுத்தினார். அவருடைய அந்த உணர்வுகள் ஒவ்வொரு காஷ்மீர் மக்க ளின் உள்ளங்களிலும் எதிரொலிக்கும்:
“ஓ  காற்றே,
நீ ஜெனிவாவை கடந்து செல்வாயானால்
இந்த செய்தியினை அந்த நாட்டின் மக்களுக்கு,
உலக மக்களுக்கு கொண்டு செல்.
அவர்கள் விவசாயியினை விற்றார்கள்.
அவனது விளைநிலத்தையும் விற்றார்கள். 
அவன் சொத்தையும் விற்றார்கள்.
அவன் தலைக்கு மேல் உள்ள கூரையையும் விற்றார்கள்.
உண்மையில் தேசம் முழுமையும்
அற்பமான விலைக்கு விற்றார்கள் என்று சொல்”

1846ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டு தற்போதைய ஆட்சியாளர்கள் வரை 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சோகமானதும்  கடுமையானதுமான நூற்றாண்டு காஷ்மீர் மக்களின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டதோடு அவர்களை நாகரிக சமூகத்தின் உப்பங்குழியிலும் தள்ளி விட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் சில மாநிலங்களில் இதுபோன்று இருத்த போதிலும் அம்மக்களின் துயர் துடைக்க சிற்சில சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் காஷ்மீரிலோ ஆட்சியாளர்களின் அறிவற்ற, முழுமையற்ற ஆட்சியால் மக்களின் வாழ்க்கை ஆழமான வறுமைக்கும் சீரழிவிற்கும் சென்றது. இந்த நிலைமைகள் மேலும் மோசமடைந்து சகிக்க முடியாத நிலையில் ஆட்சியா ளர்களின் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் சில முயற்சி களை மேற்கொள்ள தீர்மானித்தனர். 
1947ல் இந்தியா சுதந்திரமடைந்து சாதனை படைத்த தோடு தன்னுடைய வரலாற்று நீரோட்டத்திற்கு சென்ற டைந்தது. பிரிட்டிஷ் பேரரசு அதிகாரத்திலிருந்து அகற்றப் பட்டவுடன், இந்தியாவின்  பிரதேச அரசர்களின்  உரிமைகள் நிச்சயமாக பறிக்கப்படும். மக்களது சுயாட்சிக்கான இந்த நடவடிக்கை, கொடும் அரசர்களிடமிருந்து மக்களை  விடுதலை செய்யும். அதிகார மாற்றத்திற்கான பேச்சு வார்த்தைகள், உடன்படிக்கைகள் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது விசயமாக அமைச்சரவை மட்டத்தில் கடினமான சூழ்நிலைகள் நிலவுகிறது. அதிகாரப் பகிர்வு பற்றிய பிரிட்டிஷ் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் இந்திய தேசிய காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் பேசுவதால் அரசர்களின் சார்பாக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை மக்கள் முற்றிலுமாக நிராகரிப்பார்கள்.  நம்முடைய காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தளவிலும் ஏற்கனவே 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 10ல் தேசிய மாநாட்டுக் கட்சி தெளிவாகத் தெரிவித்துள்ளதன்படி, தற்போதைய அரசர்கள் ஆட்சி உரிமை கோரி தொடர்வதை கடுமையாக எதிர்ப்பதோடு; பிரிட்டிஷ் இந்தியாவின் சகோதரர்களுக்கும்  இரு மக்களிடையே இணைப்பிற்கும் இடையே சுவர்எழுப்பும் எந்தவொரு உடன்பாட்டிற்கோ அல்லது ஒப்புதலுக்கோ இடம் தரமாட்டோம்.
தமிழில் : எஸ்.ஏ.மாணிக்கம்

நன்றி - தீக்கதிர் 07.08.2019 

No comments:

Post a Comment