Sunday, August 4, 2019

எத்தனை சடலம் சுமப்பீர் ராமரே?




உமக்கொரு கோயிலென்று
ஊரை ஏமாற்றி
ஆட்சியை அபகரித்த
பொய்யர்  கூட்டம்

உம் பெயரை
சொல்லச் சொல்லி
கட்டி வைத்து அடிக்கிறது,
உயிரோடு கொளுத்துகிறது.

“இன்று போய் நாளை வா”
என எதிரிக்கும்  இரங்குபவனாய்
எங்கள் மொழிக் கவிஞன்
கம்பன் வடித்த
 வரிகளை படித்திருந்தால்
இதயத்தில் இரக்கம் சுரந்திருக்கும்!

தவம் செய்த சம்புகனின்
தலை கொய்த காதையையும்
நிறை வயிற்று மனைவியை
கானகம் துரத்திய களங்கத்தையும்
உதாரணமாய்
உயர்த்திப் பிடித்தால்

அங்கே அன்பிற்கிடமேது?
அமைதிக்கும்தான் இடமேது?

நாற்காலிக் கனவோடு
ஒப்புக்காய் உன் பெயரை
நாவில் மட்டும் உச்சரிக்கும்
மனிதம் மறந்த கூட்டம்
இன்னும் ஐந்தாண்டுகளில்
கொத்து கொத்தாய்
கொன்று போடும்.

மணி முடி துறந்ததாய்
சொல்லப்படும் உன் மடிதான்
இனி சடலங்களின் தாய் மடி

எத்தனைதான்  சுமப்பீரோ?
எத்தனை நாள் சுமப்பீரோ?

(தோழர் ரவி பாலேட் அவர்களின் ஓவியத்தால் தூண்டப்பட்டு எழுதிய கவிதை)

3 comments:

  1. Both are good and nice.simply conveying emotions.

    ReplyDelete
  2. 300 ஆண்டுகள் ஆண்டு, முன்பு இங்கே நம் பாரத சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்ற கதைகளை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இந்த பதிவை திரும்ப பெறுவீர்கள். ஸ்ரீ நாத். என் பதிவை தயவுசெய்து போஸ்ட் செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றை சரியாக புரிந்து கொண்டிருப்பதால்தான் இப்பதிவு. நிகழ்கால கொடூரங்களை புரிந்து கொள்ளுங்கள். நீங்களும் என் பக்கம் நிற்பீர்கள்

      Delete