Friday, August 16, 2019

கண்டிப்பாக சந்தேகிப்போம் மோடி




“செல்வம் ஈட்டுபவர்களை சந்தேகிக்க வேண்டாம் என்றும் செல்வம் ஈட்டப்பட்டால்தான் செல்வப் பகிர்வு நடைபெறும்”

என்று மோடி கூறியுள்ளார்.

அப்பட்டமான அயோக்கியத்தனமான வாதம் இது. யதார்த்தத்திற்கு முற்றிலும் முரணானதும் கூட.

செல்வந்தர்களிடம் அச்செல்வம் எந்த வழியில் சேர்கிறது என்பதை சந்தேகிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதே!

உழைப்பின் அடிப்படையில் செல்வம் பெருகினால் யாரும் சந்தேகிக்கப் போவதில்லை. நீங்கள் யாருக்காக எருமைக் கண்ணீர் (முதலை என்று சொன்னால் வேறு விஷயம் நினைவுக்கு வருவதால் மாறுதலுக்காக எருமையை பயன்படுத்தியுள்ளேன்) வடிக்கிறீர்கள் என்பது எல்லோருக்குமே நன்றாக புரிகிறது.

உங்கள் நண்பர்களாக உள்ள அதானி, அம்பானி உள்ளிட்ட பெரு முதலாளிகளின் செல்வம் நீங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல மடங்கு பெருகியுள்ளது. அதெல்லாம் முழுக்க முழுக்க அவர்களின் கடின உழைப்பால் பெருகிய செல்வமா?

உங்கள் நண்பர்களின் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக எத்தனை எத்தனை ஏற்பாடுகளை நீங்கள் செய்து தந்துள்ளீர்கள்? உங்கள் நண்பர்கள் செல்வம் பெருகுவதற்காக அரசு நிறுவனங்களுக்கு வருவாய் வரும் வழியை அடைக்க வேறு செய்கிறீர்கள்.

முகேஷ் அம்பானியின் ஜியோ கொழிப்பதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சீரழிக்கிறீர்கள்.

தம்பி அம்பானிக்காக ரபேல் விவகாரத்தில் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தை நட்டாற்றில் தவிக்க விட்டீர்கள்.

அதானி கல்லா கட்டுவதற்காகவே விமான நிலையங்களின் விரிவாக்கம் நடைபெறுகிறது. ஒருவருக்கு இரண்டு என்ற விதியைக் கூட காற்றில் பறக்க விட்டுள்ளீர்கள்.

கார்ப்பரேட் வரியை குறைப்பீர்கள். இறக்குமதி வரியைக் குறைப்பீர்கள். வங்கி வாராக்கடனை தள்ளுபடி செய்வீர்கள்.

செல்வத்தை ஈட்டுபவர்களை சந்தேகித்து ஆராய்ந்தால் நாற்றம் அடிக்கிறது. ஊழல் நாற்றம், அதிகார துஷ்பிரயோக நாற்றம், அந்த நாற்றத்தை வாசனை திரவியம் போட்டு மறைப்பதற்கான முயற்சிதான் உங்கள் உபதேசம்.

அவர்கள் செல்வம் ஈட்டினால்தான் செல்வப் பகிர்வு நடக்கும் என்பது நீங்கள் உதிர்த்த இரண்டாவது முத்து.

ஆமாம் யாரோடு அந்த செல்வத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்?

மக்களோடோ?

உங்களோடுதான் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவிற்கு கிடைத்த கொழுத்த நிதியே சொல்கிறதே.

உங்கள் தொடர்பான அத்தனையையும் சந்தேகப்படுவோம்.

ஏனென்றால்

உங்களிடத்தில் இதுவரையிலும் நேர்மை இருந்ததில்லை.
இனியும் இருக்கப் போவதில்லை.

No comments:

Post a Comment