Saturday, July 30, 2016

பேசப்படாத “லைபாக்லை ஆண்ட்டி”



வட கிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் போட்டோ எடுத்துக் கொண்டு வருவார்கள். ஆனால் எங்கள் மதுரைக் கோட்டத் தோழரும் முன்னணி எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ், அம்மாநிலங்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து அவற்றை தமிழாக்கமும் செய்துள்ளார். அதுதான் லைபாக்லை ஆண்ட்டி.

வட கிழக்கு மாநில மக்களின் பிரச்சினைகளை, அவர்கள் மனதில் உருவான அவ நம்பிக்கைகளை, பதட்டம் நிறைந்த அவர்களின் வாழ்க்கையை இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ரத்தமும் சதையுமாக கண் முன்னே நிறுத்துகிறது. “அதிகமாக பேசப் படாத நூல்” என்று தோழர் ச.சுப்பாராவ், தனது ஆதங்கத்தை முக நூலில் வெளிப்படுத்தியிருந்தார். அது நியாயமான ஆதங்கமே. நமக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத பகுதியின் மக்களைப் பற்றிய இந்நூல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. அது நடக்காதது வருத்தமே. தோழர் ச.சுப்பாராவிற்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

பதினான்கு சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பிலிருந்து ஆறு கதைகள் பற்றி மட்டுமே நான் அறிமுகம் செய்துள்ளேன். நீங்கள் வாங்கி முழுமையாக படித்தால் மட்டுமே உங்களால் வாசிப்பனுபவத்தை பெற முடியும். 



நூல்                         லைபாக்லை ஆண்ட்டி
ஆசிரியர்                    ச.சுப்பாராவ்
வெளியீடு                   பாரதி புத்தகாலயம்
                              சென்னை 18
விலை                      ரூபாய் 90.00

“நாங்க்தூம்பாம் குஞ்சமோகன்சிங்” என்ற சாகித்ய அகாடெமி விருது பெற்ற இளம் எழுத்தாளரால் மணிப்புரி மொழியில் எழுதப்பட்ட “பிறந்த மண்” என்ற சிறுகதை தாங்கள் பிறந்த மண்ணிலிருந்து அரசியல் காரணமாக புலம் பெயர வேண்டியுள்ள ஒரு குடும்பத்தின் வலியை அழுத்தமாக சொல்கிறது.

லாரிகளில் அடுக்கி வைக்கப்பட்ட தானிய மூட்டைகளிலிருந்து  குத்தூசி மூலம் ஓட்டை போட்டு அதில் கிடைப்பதையே ஜீவனமாக கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஒரு சிறுவன் மூட்டைகள் சரிகையில் சிக்கி நசுங்கி இறந்து போகிறான். அந்த துயரத்திற்குப் பிறகும் அவனது தாய் வாழ்வதற்காக சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவல நிலையை  “பாபேந்திர நலீத் சைக்கியா” வின் அஸ்ஸாமியக் கதையான “மற்றொரு மோதி” சித்தரிக்கிறது.

விவசாயக்கடன் வாங்குவதற்காக படுகிற அவஸ்தையை, அது கடைசி வரை கைகூடாத கையறு நிலையை, அரசு அலுவலகங்களில் நடைபெறும் கூத்துக்களை மேகாலய மாநில எழுத்தாளர் “திரு டா என் னின் இனிய பயணம்” சொல்கிறது. மேகாலய மக்களின் மொழியான காசி மொழிக்கு வரி வடிவம் கிடையாது என்பது கூடுதல் செய்தி.

வங்காள மக்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையே சில விஷமிகள் தூண்டிய கலவரத்தால் அருகாமை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இடையே உருவாகும் பகைமையும் அது சொந்த பாட்டி, பேரனாக வாழ்பவர்களை பாதிக்கவில்லை என்பதையும் அந்த பந்தம் இறப்பில் கொண்டு போய் முடிகிறது என்பதை தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட திரிபுரா மாநில அமைச்சர் “பிமன் சின்ஹா” எழுதிய “பாசனின் பாட்டி” கண்ணீர் மல்க பதிவு செய்கிறது.

ஒரே அறையில் வசிக்கும் இரண்டு தொழிலாளர்கள், ஒருவர் மற்றவரை கொன்று விடுவாரோ என்ற அச்சத்தை உருவாக்கிய நாகா- குக்கி இன மோதலின் பின்னணியையும் அடுத்தவர் மீதான அவ நம்பிக்கையோடே வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சோகத்தையும் “கெய்ஷம் பிரியோகுமார்”  எழுதிய “ஓர் இரவு” மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்பை அளித்த “லைபாக்லை ஆண்ட்டி” போராட்டத்தின் மீது நம்பிக்கையுள்ள மனுஷியைப் பற்றியது.  “நாங்க்தூம்பாம் குஞ்சமோகன்சிங்” எழுதிய சிறுகதையில் வரும் லைபாக்லை ஆண்ட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தில் தனது மகன் கைதானதை பெருமிதமாகக் கருதுவார். சாதாரண மக்களை அரசு எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதையும் அவர்களின் போராட்டத்தை எப்படி நசுக்குகிறது என்பதையும் ஒரு மருத்துவர் வாயிலாக, மருத்துவமனை பின்னணியில் சொல்கிறது இக்கதை. சிகிச்சையில் இருக்கும் லைபாக்லை ஆண்டியை கைது செய்து ஜீப்பில் ஏற்றுகையில் அங்கே சூழும் மக்கள் எழுப்புகிற முழக்கத்தை நாமும் எழுப்புகிற அளவிற்கு உணர்ச்சி வசப்படுவோம்.

இன்குலாப் ஜிந்தாபாத் . . . .   இன்குலாப் ஜிந்தாபாத் . . . . 

1 comment:

  1. அவசியம் வாங்கிப் படிப்பேன் நண்பரே

    ReplyDelete