Monday, July 11, 2016

இதையெல்லாம் தொடைச்சுட்டு போய்ட்டே.......

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரியருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் எழுதிய கடிதம் இது.

மோடியும் மோடி கூட்டத்தாரும் இதையெல்லாம் துடைத்து விட்டு வெட்கமே இல்லாமல் போய்க் கொண்டிருப்பார்கள் என்பதுதான் அவர்களின் மானங்கெட்ட மரபு. மோடிக்கு ஒரு மூடாத மடல்


பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம்.

பொதுவாக மூடிய உறையில் அஞ்சல் தலை ஒட்டப்பட்டு கடிதம் எழுதுவதுதான் மரபு. ஆனால் உங்களுக்கு எந்த நாட்டின் அஞ்சல் தலையை ஒட்டி, எந்த நாட்டுக்கு கடிதம் அனுப்புவது என்று குழப்பமாக இருந்ததால் இந்த மூடப்படாத அஞ்சலை எழுத நேர்ந்துவிட்டது.

தற்போது தாங்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் இருப்பதாக இந்திய மக்கள் அறிகிறார்கள். ஆப்பிரிக்காவில் இருக்கும்போது எனது சொந்த மண்ணில் இருப்பதைப் போலவே உணர்கிறேன் என்று தாங்கள் கூறிய செய்தி உடனடியாக இங்கு வந்து சேர்ந்தது. அது என்னவோ தெரியவில்லை. உங்களுக்கு இந்தியாவில் இருக்கும் போது மட்டும் இந்த உணர்வு தோன்றுவதே இல்லை.

தென்னாப்பிரிக்காவின் பீட்டர் மேரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் காந்தி நிறவெறி காரணமாக தூக்கியெறியப்பட்ட அதே ரயிலில் தாங்கள் அமர்ந்திருக்கும் புகைப்படமும் இங்குள்ள பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. தங்களது முகத்தில் என்னவொரு சாந்தம். ஆனால் அதில் காந்தியின் சத்தியம் தெரியவில்லை. சாவர்க்கரின் சாயல்தான் படிந்திருக்கிறது.

லண்டனில் வழக்குரைஞர் பட்டம் பெற்ற காந்தி சிறிது காலம் இந்தியாவில் வழக்கறிஞராக பணியாற்றிவிட்டு 1893இல் தென்னாப்பிரிக்கா சென்றார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகளை கழித்து விட்டு 1915 ஆம் ஆண்டு ஜனவரியில் தாயகம் திரும்பினார். அங்கு குடியேறியிருந்த இந்திய மக்களுக்காகவும், தென்னாப்பிரிக்க மண்ணை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷாருக்கு எதிராகவும், நிறவெறிக்கு எதிராகவும் அவர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்.

முதல் வகுப்பு பெட்டிக்கான பயணச்சீட்டு எடுத்திருந்த போதும் காந்தியை வெள்ளையர் ஒருவர் மூன்றாம் வகுப்புப் பெட்டிக்கு செல்லுமாறு வசைபாடி பீட்டர் மேரிட்ஸ் பர்க் ரயில் நிலையத்திலிருந்து வெளியே பிடித்துத் தள்ளினார். இந்தியாவில் அவர் பயணம் செய்த காலம் முழுவதும் மூன்றாம் வகுப்பு பெட்டியிலேயே பயணம் செய்தார். ஆனால் நீங்கள் உள்நாட்டில் கூட தனி விமானத்தில்தான் பறக்கிறீர்கள்.

பீட்டர் மேரிட்ஸ் பர்க் நிலையத்தில் நடந்த சம்பவம்தான் இந்திய வரலாற்றை மாற்றியமைக்க காரணமாக அமைந்தது என்று அந்த ரயில் நிலையத்திலிருந்த பதிவேட்டில் எழுதியிருக்கிறீர்கள் மோடி. கோத்ரா ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்வைத் தொடர்ந்து குஜராத்தில் நீங்கள் நடத்திய நர வேட்டை இந்திய வரலாற்றை எதிர்த் திசையில் எழுதிச்செல்ல பயன்பட்டிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட தமிழர்களை காந்தி சந்தித்தார். அவர்கள் வழியாக திருக்குறளின் மேன்மையை காந்தி புரிந்து கொண்டார். திருக்குறளை தமிழிலேயே படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ்மொழியை கற்றுக் கொள்ள அவர் ஆயுளின் கடைசி வரை ஆர்வமாக இருந்தார். ஆனால் உங்களது ஆட்சியில் கங்கை கரையில் வள்ளுவர் சிலையை வைப்பதற்கு உங்களது பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலகம் செய்ததால், வள்ளுவர் ஒரு பங்களா வாசலில் காவல்காரர் போல நிற்க வைக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தங்களுக்கு எந்த உறுத்தலும் இருக்கப் போவதில்லை.

மதுரையில் ஒரு விவசாயியைப் பார்த்து விட்டு, கிராமத்து மனிதனாக தன்னை மாற்றிக் கொண்ட காந்தி, எளிமையை ஆடையாக அணிந்து கொண்டார். ஆனால் உங்களுக்கு ஆடை வடிவமைக்கும் அந்நியருக்கு கூலி கொடுத்தே மாளவில்லை. உங்கள் தாடியை சீர் செய்வதற்கு ஆகும் செலவில் லட்சம் பேருக்கு மொட்டை அடித்துவிடலாம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க் கும் மன உறுதியோடு காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பினார். ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை வெளிநாடு சென்று திரும்பும்போதும் தேசத்தின் ஒரு பகுதியை விற்பதற்கான ஒப்பந்தத்துடன்தான் ஒப்பனை கலையாமல் வருகிறீர்கள்.

தண்டியில் காந்தி அள்ளிய ஒரு கைப்பிடி உப்புக் கூட அந்நியருக்கு எதிரான ஆயுதமாக உருவெடுத்தது. ஆனால் நீங்களோ அமெரிக்காவிற்குச் சென்று காயலாங்கடை அணு உலைகளை நிறுவும் திட்டத்தோடுதான் வருகிறீர்கள். குண்டூசி செய்யக்கூட அந்நிய முதலீட்டுக்கு ஆசைப்படுகிறீர்கள்.

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்ந்த காந்தியை நீங்கள் துப்புரவு இயக்கத்தின் சின்னமாக மட்டுமே மாற்றியமைத்துவிட்டு, தங்கள் குலசாமி கோல்வாக்கர் படத்தைப் பார்த்து மானசீகமாக வணங்கிக் கொள்கிறீர்கள்.

சுரங்கம் உட்பட பல்வேறு துறைகளில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் நெருக்கமாக செயல்பட வாய்ப்பு உண்டு என கூறியிருக்கிறீர்கள். ஆஸ்திரேலியாவைப் போல ஆப்பிரிக்காவிலும் அதானிக்கு சில சுரங்கங்களை பார்த்துவிட்டீர்கள் போலிருக்கிறது. அநேகமாக கடன் கொடுக்க ஏதாவது ஒரு வங்கியும் கூட வலையில் வந்து விழும்.

காந்தி புறப்பட்ட குஜராத்திலிருந்துதான் நீங்களும் புறப்பட்டீர்கள். ஆனால் பாதையும் பயணமும் முற்றிலும் வேறு வேறானவை. அந்த ரயில் நிலையத்தில் உங்கள் காலடி பட்ட போது காந்தியின் காலடி பட்ட அந்த இடம் சற்று அதிர்ந்திருக்கும். உங்களுக்கு அது கேட்டிருக்க வாய்ப்பில்லை. மௌன மொழியை கேட்கும் பயிற்சி உங்களுக்கு ஒருபோதும் கற்றுத்தரப்பட்டதில்லை.

திரும்பி வாருங்கள் மோடி. பூமிப்பந்தில் இன்னமும் நாடுகள் மிச்சம் இருக்கின்றன.

- மதுக்கூர் இராமலிங்கம்
(தீக்கதிர் 11-7-2016)

4 comments:

 1. A Dog Barking against the Sun

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் நாய்கள்தான். தேசத்தை பாதுகாக்கிற காவல் நாய்கள்.
   ஆனால் மோடி சூரியனா?
   அதானிக்கும் அம்பானிக்கும் அமெரிக்காவிற்கும் இந்தியாவை
   விற்கிற தரகனை அப்படி சொல்கிற நீங்கள் யார்?
   ஏதையோ தின்னும் ஏதோ ஒரு பிராணி என்று சொல்லவா அனானி?

   Delete
 2. அருமையான கடிதம் அய்யா ! ஆனா எப்படி மோடிக்கு போய்சேரும் அவர்தான் நாடுநாடா சுத்திகிட்டு இருக்காரே ?

  மஹாராஜா

  ReplyDelete
 3. இது தவறு என்று சுட்டிக்காட்ட இல்லை. இந்தியாவில் இருந்து எந்த நாட்டிற்கு கடிதம் அனுப்பினால் இந்திய தபால் தலைகளை ஓட்டினால் போதும். இது by mutual agreement between all countries.

  [[[உங்களுக்கு இந்தியாவில் இருக்கும் போது மட்டும் இந்த உணர்வு தோன்றுவதே இல்லை.]]]
  அவர் எப்ப இந்தியாவில் இருந்து இருக்கிறார். அது என்ன எல்லா பண்டார ஜனதா கட்சி பிரதமர்களும் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருக்கிறார்கள். வாஜ்பாய் இவருக்கு மூத்த அண்ணன்--உலகம் சுற்றின்தில்!

  ReplyDelete