Monday, July 4, 2016

மாதர் சங்கம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது?






அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அறிக்கை கீழே உள்ளது. அதனை மின்னஞ்சலில் அனுப்பிய பத்திரிக்கையாளர் விமலா வித்யா எழுதியதை முதலில் பதிவு செய்கிறேன்.
 ----------------------------------------------------------------
மதுரைமாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விமலாதேவி-(திலீப்குமார்) கொலை வழக்கில் நம் அன்பு தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் மகள் உ .நிர்மலா ராணி அவர்கள் உயர் நீதி மன்றத்தில் வாதாடி/ போராடி பெற்ற தீர்ப்பு இது .

வழக்கில் தமிழ் நாடு பூராவும் நடை பெற்ற 47 கொலை வழக்குகளை மேற்கோள் காட்டி தோழர் நிர்மலா ராணி அவர்கள் வாதாடினார்- மறுக்க முடியாத ஆதாரங்களை முன் வைத்ததினால் இந்த தீர்ப்பு கிடைத்தது-

மண்மீத் சிங் VS ஹரியானா மாநிலம் வழக்கை ஆதாரம் காட்டி வாதாடினார்-

போலீஸ் துறை கடைபிடிக்க வேண்டிய கட்டாய வழிகாட்டல்கள் இந்த தீர்ப்பினால்தான் நமக்கு கிடைத்து உள்ளன-

வழி காட்டும் கட்டளைகளை கடை பிடிக்காத போலீஸ்காரர்கள் பெயர்-பதவியுடம் புகார் செய்யுங்கள்-

--மூன்று தீர்ப்புகளும் வேறு வேறானவைகள்- ஒரே விஷயம் சம்பந்த பட்டது-

அன்பு கூர்ந்து இவைகளை பயன் படுத்துங்கள்-
---விமலா வித்யா-நாமக்கல்
---------------------------------------------------------- 

இதிலே குறிப்பிடப்பட்டுள்ள நாற்பத்தி ஏழு ஆணவக் கொலைகளின் விபரங்களை படிக்கிற போது ஒரு முக்கியமான அம்சம் தென்பட்டது. தலித் ஆண்கள் மற்ற ஜாதிப் பெண்களை மயக்கி திருமணம் செய்து கொள்கிறார்கள், இது வெறும் நாடகக் காதல் என்று மருத்துவர் ஐயா வகையறாக்கள் ஓரு விஷமப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து உள்ளார்களே, அந்த பிரச்சாரம் தகர்ந்து போகிறது.

இந்த ஆறு வருடங்களில் கொல்லப்பட்ட தலித் ஆண்கள் ஆறு பேர் என்றால் தங்களின் ஜாதிப் பெருமைக்காக ஆதிக்க சக்திகள் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பெண்களைக் கொன்றுள்ளார்கள். இன்னும் ஒரு பதினோரு ஆணவக் கொலைகளில் தம்பதிகளில் யாரும் தலித் கிடையாது. இரண்டு தலித் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற கொலைகளில் ஜாதி பற்றிய விபரம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. இந்த விபரங்கள் நீதியரசர் திரு வி.ராமசுப்ரமணியன் அவர்கள் 13.04.2016 அன்று வழங்கியுள்ள தீர்ப்பின் ஒரு பகுதிதான். பிடிஃஎப் வடிவத்தில் அத்தீர்ப்பு உள்ளதால் என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. விபரம் வேண்டுவோர் மின்னஞ்சல் முகவரி அளித்தால் அனுப்பி வைக்கிறேன்.

இப்போது மாதர் சங்க அறிக்கையை படியுங்கள். இந்த அமைப்பின் மீது சேற்றை வாரி இறைத்த அத்தனை நல்ல இதயங்களுக்கும் சமர்ப்பணம்!!!

------------------------------------------------------------------

சாதி ஆணவக் கொலை வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை உடனே அரசு அமல்படுத்த வேண்டும்  என்று   மாதர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 2-

தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், வழங்கப்படும் நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தவும் என தமிழக அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடந்த மார்ச் மாதம் சாதிஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் வழக்கில், சங்கரின் மனைவி கவுசல்யாவிற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்விதவைகளுக்கான ஓய்வூதியம், அகவிலைப்படி உட்பட மாதந்தோறும் ரூ.11,250ம், சங்கரின் தந்தைக்கு சத்துணவு திட்டத்தில் சமையலர் வேலையும் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது.

இது போல மதுரைமாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விமலாதேவி கொலை வழக்கில், சாதி ஆணவக் கொலைகளை தடுக்க

1, எஸ்.பி. தலைமையில் சிறப்புப் பிரிவு ஒன்று மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும்.

2 தனி ஹெல்ப்லைன் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

3. கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பு தருவதற்கு மாவட்டம் தோறும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்த வேண்டும்.

4. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதம்பதிகள் தங்குவதற்கு குறுகிய கால காப்பகங்களும், அதற்கான நிதியும் அரசு ஒதுக்க வேண்டும். உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் இந்த வழிகாட்டுதல்களை மூன்று மாதகாலத்திற்குள் அமல்படுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டது, 

ஆனால் இத்தீர்ப்பு வந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் தமிழகஅரசு இதுகுறித்து எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகளே நடைபெறவில்லை என சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நீதிமன்றம் இத்தகைய வழிகாட்டுதல்களும், உத்தரவுகளும் அளித்து உண்மையை வெளிகொண்டு வந்துள்ளது.

இனிவரும் காலங்களில், நீதிமன்றத்தீர்ப்புகளை அமல்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்துவது, நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும்.

அபிராமிக்கும் அமல்படுத்துக!

இதே போன்று, தஞ்சைமாவட்டம் சூரக்கோட்டையில் சாதி ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட அபிராமிக்கும் மாவட்ட நிர்வாகம் அரசுவேலை தருவதாக உத்தரவாதம் கொடுத்து மூன்று வருடங்களாகியும் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அபிராமிக்கு வேலை நியமனத்தை வழங்குமாறு ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இதுபோன்று சாதி ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என தமிழக அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment