கோட்டச் சங்கப் பொறுப்பாளர்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது விவாதம் இந்த
வருடத்து பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் பற்றி திரும்பியது. தனியார் பள்ளி
மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களும்
பெற்றுள்ளனர். ஆனால் அவர்களை அங்கீகரிக்கத்தான் யாரும் இல்லை என்ற ஆதங்கத்தை
துணைத்தலைவர் தோழர் தசரதன் பகிர்ந்து கொண்டார். மற்றவர்கள் அங்கீகரிக்காவிட்டால்
என்ன, நாம் செய்வோமே, ஒரு துவக்கமாக நமது கோட்டச்சங்கம் இருக்கலாமே என்று நான் ஒரு
முன்மொழிவைக் கூற அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். அரசுப் பள்ளி மாணவர்களை
கௌரவிக்கும் பணியை இந்த ஆண்டே துவக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
எங்களது வேலூர் கோட்டம் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம்
மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இந்த
ஐந்து பகுதிகளிலும் அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடம்
பெற்றவர்களை கௌரவிப்பது என்று முடிவெடுத்தோம். 18.06.2016 அன்று புதுச்சேரியிலும் 25.06.2016 அன்று வேலூரிலும் எங்களது மகளிர் மாநாடு நடைபெற இருந்ததால்
அந்நிகழ்ச்சியின் போதே இம்மாணவர்களை கௌரவிக்கலாம் என்றும் முடிவு செய்தோம்.
அந்தந்த மாவட்ட தலைநகர்களில் இருந்த கிளைச்சங்கங்கள் அதற்கான தகவல்களை
திரட்டித் தந்தனர். அந்த மதிப்பெண்களைப் பார்க்கையில் உண்மையிலேயே பிரமித்துப்
போனோம். வேலூர் மாவட்டத்தில் முதல் இடத்தில் இருவர், இரண்டாம் இடத்தில் இருவர்,
மூன்றாம் இடத்தில் ஒருவர் என மொத்தம் ஐவர், மற்ற மாவட்டங்களில் தலா மூவர் என
மொத்தம் பதினேழு பேர் தேர்வானார்கள்.
இந்த பதினேழு பேரில் இருவரின் மதிப்பெண்கள் 1170 க்கும் மேல். நால்வர் 1160 க்கு மேலும் ஏழு பேர் 1150 க்கு மேலும் மீதமுள்ள நால்வர் 1125 லிருந்து 1150
வரை மதிப்பெண்கள் வாங்கியிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஒண்ணுபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மூன்று
மாணவிகளே மாவட்டத்தின் முதல் மூன்று இடத்தையும் பெற்றிருந்தனர். இந்த பதினேழு
பேரில் பதினான்கு பேர் மாணவிகள் என்பது இன்னொரு சிறப்பு. மகளிர் மாநாட்டில்
அவர்களை கௌரவிப்பது என்பது பொருத்தமாக இருந்தது.
இவர்கள் பெற்ற மதிப்பெண்களைப் பார்க்கையில் இவர்களின் சாதனை உண்மையிலேயே
மகத்தானது. பிராய்லர் பள்ளிகளின் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை விட போதுமான
வசதிகள் இல்லாத அரசுப்பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மேலானதுதான்.
தங்களின் அயறாத உழைப்பு காரணமாக அரசுப் பள்ளிகளிலும் சாதனைகள் சாத்தியமே
என்பதை நிரூபித்த மாணவ, மாணவியர், அவர்களின் பின்னே நின்று ஊக்குவித்த ஆசிரியர்கள்
என அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
புதுவை மகளிர் மாநாட்டிற்கு முன்பாக விழுப்புரம் மாவட்ட தகவல்கள்
கிடைக்காததால் அம்மாவட்ட மாணவர்களை மட்டும் பின்னொரு நாளில் கௌரவிக்கவுள்ளோம். ஒரே
ஒரு மாணவி தவிர மற்ற அனைவரும் நேரில் வந்திருந்தனர்.
அனைவருக்கும் சால்வை போர்த்தி அவர்கள் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு ஷீல்ட்
வழங்கினோம். புதுவை மற்றும் வேலூர் மகளிர் மாநாடுகளில் பங்கேற்ற தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் தோழர் ஆர்.சர்வமங்களா மாணவர்களை கௌரவித்தார்.
எளிய பரிசுதான். ஆனாலும் அளவிட முடியாத அன்பின் அடையாளம்.
No comments:
Post a Comment