ஸ்டேட் வங்கி தான் அளித்த கல்விக் கடன்களை வசூலிக்கும் பொறுப்பை
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்தது பற்றி முன்பே எழுதியிருந்தேன்.
வசூல்ராஜா பாணியில் அடியாட்களை அனுப்பி மாணவர்களை மிரட்டப் போகிறார்கள் என்று
பலரும் அச்சத்தை தெரிவித்திருந்தனர். அந்த அச்சம் இப்போது நிஜமாகியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த லெனின் என்ற மாணவன் வாங்கிய கடனை உடனடியாக ஒரே தவணையில்
கட்ட வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்து ரௌடிகள் மிரட்ட, தொடர்ந்து தொலைபேசியில்
தகாத வார்த்தைகளில் பேச, அந்த மாணவன் மானத்துக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டு
இறந்து விட்டான்.
மாணவர்களின் கல்விக்கடனை வசூலிக்க ரிலையன்ஸ் மாதிரியான நிறுவனங்களுக்கு
அதிகாரம் கொடுத்த ஸ்டேட் வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா முதல்
குற்றவாளி என்றால் ரௌடிகளை வைத்து தாதா போல தொழில் நடத்திய அம்பானி இரண்டாவது
குற்றவாளி. லெனின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் இவர்கள்தான். மற்றவர்கள் எல்லாம்
அடுத்த நிலையில்தான் வருவார்கள்.
ஏழு வருடத்திலிருந்து பதினைந்து வருடம் காலம் வரை கடனை
திருப்பிக்கட்டும்படியே கல்விக்கடன் திட்டமே வரையறுக்கப் பட்டுள்ள போது
கல்விக்கடனை ஒரே தவணையில் கட்ட வேண்டும் என்று சொல்வது விதி மீறல் என்று குற்றம்
சுமத்தி, ஸ்டேட் வங்கி தங்களிடமுள்ள கல்விக்கடனை நாற்பத்தி ஐந்து சதவிகித தொகைக்கு
மட்டும்ற் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றுள்ள போது கல்விக்கடன் வாங்கியவர்களை
நாற்பத்தி ஐந்து சதவிகிதத்தை கட்டச் சொல்லலாமே என்று அர்த்தமிக்க கேள்வியை
எழுப்புகிறார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளர்
தோழர் சி.பி.கிருஷணன்.
இக்கேள்விக்கு நிச்சயமாக மத்திய அரசோ, ஸ்டேட் வங்கி நிர்வாகமோ பதில்
சொல்லாது.
மல்லய்யாக்கள் உல்லாசமாய் இங்கிலாந்தில் பவனி வர லெனின் போன்ற ஏழைகள்தான்
மானத்திற்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்கின்றனர். மல்லய்யாக்களிடம் காண்பிக்க
முடியாத வீரத்தை வங்கி உயர் நிர்வாகம் ஏழை விவசாயிகளிடமும் ஏழை மாணவர்களிடமும்
காண்பிக்கிறது.
பல லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை கட்டாமல் ஏமாற்றி வருகிற மோசடிப்
பேர்வழியான அம்பானி மாதிரி ஆட்களை கல்விக் கடனை வசூலிக்க அனுமதித்தது என்பது
கொடூரமான முடிவு. லெனின் மரணத்துக்கு காரணமான ஆட்களை கைது செய்து செய்வது முதல்
நடவடிக்கை என்றால் இது போன்ற திட்டங்களை
ரத்து செய்வதே இரண்டாவது நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
பின் குறிப்பு : மேலேயுள்ள படம் லெனினின் தந்தை திரு கதிரேசன் அவர்களை
வங்கி ஊழியர், இன்சூரன்ஸ் ஊழியர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய
அமைப்புக்களின் பொறுப்பாளர்கள் நேற்று சந்தித்து ஆறுதல கூறியபோது எடுத்தது.
பின் குறிப்பு 2 : மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் இச்சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார். இச்செய்தியை தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. ஆனால் "ரிலையன்ஸ்" என்று எழுதுவதற்குப் பதிலாக "தனியார் நிதி நிறுவனம்" என்று வெளியிட்டு தனது ஊடக அறத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளது. நிச்சயம் இதற்கு ரிலையன்ஸ் "பதில் மரியாதை" கொடுக்கும்.
பின் குறிப்பு 2 : மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் இச்சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார். இச்செய்தியை தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. ஆனால் "ரிலையன்ஸ்" என்று எழுதுவதற்குப் பதிலாக "தனியார் நிதி நிறுவனம்" என்று வெளியிட்டு தனது ஊடக அறத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளது. நிச்சயம் இதற்கு ரிலையன்ஸ் "பதில் மரியாதை" கொடுக்கும்.
No comments:
Post a Comment