Friday, July 15, 2016

நரிவேட்டையின் ஊடே சென்னையின் வரலாறு




இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தது திரு விநாயக முருகனின் “வலம்” நாவல். நாவலின் அறிமுக விழாவில் தமுஎகச மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யாவின் விமர்சன உரையும் திரு வினாயக முருகனின் ஏற்புரையுமே அதற்கு முக்கியக் காரணம். ஜெயமோகனின் "வெள்ளை யானை" நூலுக்கு எதிர்வினை என்று சொன்னது கூட ஒரு தூண்டுதலாகும். புத்தகக் கண்காட்சிக்கு போய் விட்டு வந்த இரண்டாவது நாளே ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நாவலை முழுமையாக படித்து முடிக்க அந்த பயணம் உதவிகரமாக இருந்தது. ஆனால் படித்தது பற்றி உடனடியாக  எழுதத்தான் முடியாமல் போய் விட்டது. இந்த விமர்சனம் எழுத மீண்டும் புத்தகத்தை புரட்ட வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு மனதில் பதிந்து போனது என்பதையும் இங்கே சொல்லத்தான் வேண்டும்.  






நூல் அறிமுகம்        : வலம்
ஆசிரியர்                : விநாயக முருகன்,
வெளியீடு               : உயிர்மை பதிப்பகம்
                            சென்னை
விலை                   : ரூபாய் 310

பதினாறாம் நூற்றாண்டில் நரியின் முகமும் மனிதனின் உடலும் கொண்ட நரிச்சித்தர் என்பவர்  வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தார் என்றும் அந்த இடத்தில் அணையாத விளக்கு இருக்கும் என்றும் அந்த இடமே நரிமேடு என்று அழைக்கப்பட்டது என்ற சிறிய கதையோடு தொடங்குகிறது. பின்பு பதினெட்டாம் நூற்றாண்டிற்குச் செல்கிறது கதை. கிழக்கிந்தியக் கம்பெனிக்காக செயின்ட் ஜார்ஜ் கோட்டையை உருவாக்குகிற இரண்டு வணிகர்களான பிரான்ஸிஸ்டே, ஆண்ட்ரூ கோஹன் ஆகியோர் நரிமேட்டை அழிக்க, பிரான்ஸிஸ்டேவின் மனைவிக்கு நரியின் முகத்தோடும் மனித உடலோடும் குழந்தை இறந்து பிறக்கிறது.

இந்த காட்சிகளுக்குப் பிறகுதான் கதை பத்தொன்பதாவது நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக்குப் பதிலாக இங்கிலாந்து ராணியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காலக்கட்டத்தில் தொடங்குகிறது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, வெள்ளையர் நகரமாக விரிவாகும் அடையாறு, அவர்களுக்கு பணி செய்வதற்காக உருவாகும் கறுப்பர்களின் சேரிகள், சுகாதார வசதிகளில் இரண்டிற்குமான முரண்பாடுகள் என்று அந்த கால சென்னை நகரத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர்.

நிர்வாகத் திறமையுள்ளவராக இருந்தாலும் பெண் பித்தரான கவர்னர் ராபர்ட்மாரோ, (அவர் நூலகம் அமைக்க ஆர்வம் செலுத்தினார் என்பது கன்னிமாராவை சொல்வது போல தோன்றுகிறது) அவரது மனைவி சூசன், காவல்துறை அதிகாரி ஆண்ட்ரூ கோஹன், அவன் காதலித்த, இப்போது கவர்னரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியப் பெண் கரோலின், குதிரைப்பந்தய விடுதி உரிமையாளர் வெஸ்லி, அவரது பாதுகாப்பு அதிகாரி பேட்டர்ஸன், பேட்டர்ஸனை வெறுப்பேற்றும் (ஏன் என்பது நூலில்) வெஸ்லியின் மனைவி, கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி ஜாக், (இவர்கள் இருவரும் நரி வேட்டையில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள்)  நரி வேட்டை விடுதி உரிமையாளர் மெக்கின்ஸி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் பின்னி மில் தொழிலாளி ரத்தினம், ரத்தினத்தின் அண்ணன் இசக்கி, தீண்டாமையை தீவிரமாக கடைபிடிக்கும் இரண்டு இந்திய போலீஸ்கள், ஆகியோர் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக இருந்த அயோத்தி தாச பண்டிதரும் தாஸராக நூலில் வந்து போகிறார்.

இசக்கியின் இரண்டு மகன்கள் நரிகளால் கடித்து குதறப்பட்டு கொல்லப் படுகின்றனர். அதில் ஏதோ சதி இருக்கிறது என்று சந்தேகப் படுகின்றனர். அந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு கோஹனுக்கு வருவதோடு தொடங்குகிறது கதை.

நரி வேட்டை பற்றி மிகவும் நுணுக்கமாக ஆசிரியர் விவரிக்கிறார். கதையின் பின்னணியும் அதுதானே. நரிகளின் மீது சில இடங்களில் பரிதாபமும் சில இடங்களில் மரியாதையும் வருகிறது.

கொலை பற்றிய விசாரணை தொடரும் போதே ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், ஜாதிய பேதங்கள், பஞ்சத்தின் காரணமாக நகரம் நோக்கி வரும் மக்கள், உயிர்களை காவு வாங்கும் தொற்று நோய்கள், சுகாதாரக் கேட்டை சரி செய்வதற்குப் பதிலாக நரிகளை வேட்டையாடினால் சரியாகி விடும் என்ற கருத்துள்ள அரசு. விவசாயத்தை பாதுகாக்க அனைத்து பிராணிகளும் வாழ வேண்டிய சமன்பாட்டை வலியுறுத்தும் கருத்தை அலட்சியப்படுத்தும் அரசு, ஒடுக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் நேரத்திலேயே அதை நிராகரிக்க நினைக்கிற ஆதிக்க சக்திகள், என்று பல்வேறு விஷயங்களும் அலசப் படுகிறது.

கவர்னர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு நாட்டமுள்ள குதிரைப் பந்தய மைதானத்தில் ஒரு சம்பவம் ஏற்பட்டு குதிரைகள் நரிகளால் கடித்து குதற்ப்பட்டு இறக்கின்றன. அதன் மீதான் விசாரணையில் குழந்தைகள் மரணம் குறித்த மர்ம முடிச்சு அவிழ்கிறது. கொலைகாரன் யார் என்பதை ஊகிக்க முடிந்தாலும் அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

அதையெல்லாம் நீங்கள் படித்து அறிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும். நரி வேட்டை என்ற பின்னணியை அடிப்படையாகக் கொண்டு ஆதி கால சென்னையை சுவாரஸ்யமாக வினாயக முருகன் சித்தரித்துள்ளார்.

எப்படி வரலாறு ஆண்டவர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்பாக இருக்கிறதோ, அது போலவே வரலாற்றுக்கதைகளும் அரசர்களையும் தளபதிகளையும் இளவரசிகளையும் பற்றியும் அவர்களின் வீரதீர சாகஸங்களைச் சுற்றியுமே இருக்கும். அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை பற்றியோ அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் பற்றியோ வரலாறு போலவே சரித்திரக் கதைகள் மூலமாகக் கூட எதுவுமே அறிய முடியாது (எனக்கு மிகவும் பிடித்தமான பொன்னியின் செல்வன் உட்பட) . இந்த விஷயத்தில் “வலம்” மாறுபடுகிறது. மக்களின் அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பேசுகிற வரலாற்றுப் பின்னணி கொண்ட கதை. அந்த ஒரு காரணத்திற்காகவே வாங்கிப் படிக்க வேண்டும்.

பின் குறிப்பு 1 : இவரது முந்தைய நாவலுக்கு பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன் பாலியல் தொடர்பான விஷயங்களில் பின்னி எடுக்கிறார் என்று ரொம்ப அழுத்தமாக எழுதியிருந்ததால் அதனை வாங்க கொஞ்சம் தயக்கம் இருந்தது. அப்படிப்பட்ட  விஷயங்கள் இந்த நூலிலும் இருந்தாலும் அது குறித்த மார்க்கெடிங் அறிமுகம் எதையும் மனுஷ்யபுத்திரன் கொடுக்காததாலோ அல்லது அவர் கொடுத்து நான் படிக்காததாலோ இந்த நூலை வாங்குவதில் தயக்கம் ஏற்படவில்லை என்பதையும் பதிவு செய்யத்தான் வேண்டும்.

பின் குறிப்பு 2 : இந்த நாவலை படித்த நாளன்று பயணத்தின் இரவு வேளையில் காரின் குறுக்கே ஓடிய நாய்கள் அன்றென்னவோ நரிகள் போலவே காட்சியளித்தது. ஆனால் நான் பேட்டர்ஸனோ ஜாக்கோ இல்லாததால் வேட்டையாடும் உணர்வும் வரவில்லை.

No comments:

Post a Comment