அலுவலகப் பதிவேட்டின்படி இன்று பிறந்தநாள். கோட்டத்தின் அதிகாரபூர்வமான
இன்ட்ராநெட்டில் பிறந்தநாள் வாழ்த்து என்ற பகுதி உள்ளதால் பல தோழர்கள் வாழ்த்து
சொல்லி மகிழ்ச்சியளித்தனர். ஆனால் மனதில் வேறு ஒரு விஷயம்தான் ஓடிக்
கொண்டிருந்தது.
எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி அதன் இருபத்தி
ஐந்து ஆண்டு கால வரலாற்றை தொகுத்தது பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
அதிலிருந்து ஒரு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
வேலூர் கோட்டம் தோன்றியவுடன் உருவான
முதல் பெரிய பிரச்சினை என்பது நெய்வேலியில் உருவானது. ஊழியர் குடியிருப்பு
ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரச்சினை. இரண்டு ஊழியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட
என்.எல்.சி குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்று நிர்வாகம் நிர்ப்பந்தித்தது.
நம் தோழர்களால் அது இயலாத சூழல். அதற்கான அவசியமும் கிடையாது. என்.எல்.சி நிறுவன
அதிகாரிகளை எல்.ஐ.சி நிர்வாகம் சந்தித்து பேசியிருந்தால் இந்த பிரச்சினை எழ
வாய்ப்பே இருந்திருக்காது. கிளை
நிர்வாகமும் கோட்ட நிர்வாகமும் கடை பிடித்த அணுகுமுறை ஊழியர்களுக்கு எதிராக
இருந்தது. அது ஊழியர்களுக்கும் கள
ஊழியர்களுக்கும் இடையேயான பிரச்சினையாக சித்தரிக்கப்பட்டு பூதாகரமானது. அலுவலக
ஒழுங்கு சீர் கெட்டது. காவல்துறையை அழைக்க வேண்டியிருந்தது.
கோட்ட நிர்வாகம் அதன் பின்பு ஏராளமான
சமரசங்களை வேறு செய்து கொண்டு பாரபட்சமாகவே செயல்படுகிறோம் என்று வெளிப்படையாகவே
காட்டிக் கொண்டது. அதனால் நிலைமை இன்னும் மோசமானது. இரு தரப்பிலும் தென் மண்டல அளவில் உள்ள தலைவர்கள் வந்து சுமுக
உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அந்த உடன்பாடு சில நாட்கள் கூட
நீடிக்கவில்லை. ஏனென்றால் சில தவறான நபர்கள் தங்களின் சுய லாபத்திற்காக பிரச்சினை
செய்யவே விரும்பினார்கள்.
ஒரு ஊழியர் அடியாட்களால் தாக்கப்பட்டு
மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்குக் கூட நிலைமை மோசமானது. இப்பிரச்சினைக்காக
கோட்ட அளவில் போராட்ட இயக்கங்கள் நடந்த பின்பே நிர்வாகம் சில நடவடிக்கைகள் எடுக்க
துணிந்தன. அந்த சமயத்தில் அனைத்து ஊழியர்களும் முழுமையான ஒற்றுமையோடு இல்லை
என்பதும் நிலைமைகள் மோசமாக ஒரு காரணம். தவறான சில நபர்கள் வேறு பிரச்சினைகளில்
சிக்கிக் கொண்டு நிறுவனத்தை விட்டே வெளியேறிய பின்பே நிலைமை சீரானது. அதன்பின்பு
இன்றுவரையில் நெய்வேலியில் ஊழியர்களுக்கும் கள ஊழியர்கள் முகவர்களுக்கிடையில் நல்ல
உறவு இருந்து வருகிறது.
அடியாட்களால் தாக்கப்பட்ட அந்த ஊழியர் வேறு
யாருமில்லை. நான்தான். சம்பவம் நடந்த நாள் பத்தொன்பது ஜூலை 1989.
அன்று காலை அந்த அடியாட்கள் ஊழியர் குடியிருப்பு
இருந்த பகுதியில் உலாவுவதை பார்க்கத்தான்
செய்திருந்தேன். ஆனால் அவர்கள் வந்தது
எனக்காகத்தான் என்பது தெரியவில்லை. முதல் நாள் அலுவலகத்தில் வேறு ஒரு ஊழியருக்குத்தான் பிரச்சினை வந்தது.
அவரை அடிக்கத்தான் ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணி அலுவலகம் சென்று
எச்சரிக்கை செய்வோம் என்று வேகமாக போனால் அவர்கள் என்னை மடக்கி அடித்து
விட்டார்கள்.
பல் உடைந்து
உதடு கிழிந்தது. உதட்டில் ஐந்து தையல்கள் போடப்பட்டது. உடனடியாக என்.எல்.சி
பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். தகவல் அறிந்து என்.எல்.சி
சி.ஐ,டி.யு சங்கத்தின் அன்றையப்
பொதுச்செயலாளர் விரைந்து வந்தார். இவர் எங்கள் தோழர், நன்றாக கவனித்துக்
கொள்ளுங்கள் என்று சொல்ல என்.எல்.சி யின் ஸ்பெஷல் வார்டான ஏ வார்டில்
அனுமதித்தார்கள். அதன் பின்பும் நல்ல கவனிப்புதான். அந்த தலைவர் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்
தலைமைக்குழு உறுப்பினரும் தற்போதைய தமிழ் மாநிலச் செயலாளருமான தோழர்
ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள்தான்.
ஒரு வாரம் மருத்துவமனை வாசம். எந்த டயட்
கட்டுப்பாடும் கிடையாது. ஆனாலும் வாயில் இருந்த கட்டினால் சாப்பிட மட்டும்
முடியவில்லை. கஷ்டப்பட்டு ஸ்ட்ரா வைத்து ஜூஸ் மட்டும் குடிக்க முடிந்தது. அதன்
பிறகு ஒரு பதினைந்து நாட்கள் விடுப்பில் இருந்தேன். இத்தோடு தொழிற்சங்கத்திற்கு
தலை முழுகி விடு என்று குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் உபதேசம் செய்தார்கள்.
ஆனால் விடுப்பு முடிந்து அலுவலகம் சேர்வதற்கு முன்பு
போன இடம் வேலூர். கலந்து கொண்ட நிகழ்வு வேலூர் கோட்டச்சங்கத்தின் இரண்டாவது பொது
மாநாடுதான்.
வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. காவல்துறை காசு
கொடுத்தவர்களை விட்டு விட்டு அடியாட்கள் மீது மட்டும் பழி போட்டிருந்தது. அதிலே
ஒருவர் நெய்வேலி நிறுவனத்திற்கு சொந்தமான அமராவதி திரையரங்கில் தற்காலிக ஊழியர்.
பல தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம் ஆன நேரத்தில் இவருக்கு இந்த வழக்கு காரணமாக
நிரந்தரப் பணி கிடைக்கவில்லை. வழக்கை திரும்ப்ப் பெறக் கேட்டு வந்தார். எய்தவர்களை
விட்டு அம்பை மட்டும் ஏன் தண்டிக்க வேண்டும் என்பதால் கோட்டச்சங்கத் தலைவர்களிடம்
ஆலோசனை பெற்று சமாதானமாகப் போவதாக நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்து விட்டேன்.
என்ன பிரச்சினை வந்தாலும் கலங்காமல் சமாளித்துக்
கொள்ளலாம் என்ற மன உறுதி கொடுத்தது இந்த சம்பவம்தான். தொழிற்சங்க இயக்கத்தை வாழ்க்கைப்பாதையாக தேர்ந்தெடுக்கக் காரணமான திருப்புமுனையும் கூட. சில சமயங்களில் சோர்வு
வந்தாலும் கூட இந்த நிகழ்வை நினைத்துக்
கொள்வேன். “அதையே பாத்தாச்சு, இதெல்லாம் ஜுஜுபி” என்ற எண்ணம் வரும்.
அந்த வகையில் நான் மன உறுதியுள்ளவனாக மீண்டும்
பிறப்பெடுத்த நாள் இதுதான்.
பிறந்த நாள் வாழ்த்துகள், அதகளமான நினைவுகள் போலும், வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபணியை பிறந்த மாதத்தில் தொடங்கியிருக்கிறீர்கள்.முப்பது ஆண்டுகள்!
தற்போதைய உலகில் 10 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணியிலிருப்பது என்பது மிக பெரிய விஷயங்கள்.