Wednesday, July 20, 2016

நான் வாங்கிய கல்விக்கடன்



 
வசூல் ராஜா அம்பானியால் லெனினின் உயிர் பறி போன சூழலில் நான் வாங்கிய கல்விக்கடன் நினைவுக்கு வந்தது.

மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் பி.பி.ஏ படிக்கையில் National Loan Scholarship என்று அழைக்கப்பட்ட கல்விக்கடனுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கவும் கிடைத்தது. வருடத்திற்கு 700 ரூபாய் என மொத்தம் 2100 ரூபாய் கிடைத்தது.

நான் கல்லூரியில் படித்தது 1982 லிருந்து 1985 வரை. கல்லூரிக் கட்டணம் ஒரு செமஸ்டருக்கு 300 வீதம் ஆறு செமஸ்டருக்கு 1800 ரூபாய், முதலில் கட்டியது ஒரு முன்னூறு ரூபாய், தேர்வுக் கட்டணம் ஒரு தாளுக்கு 40 ரூபாய் என்ற அடிப்படையில் முப்பது தாள்களுக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். ஆக மொத்தம் கல்லூரிக்கென கட்டியது மூவாயிரத்து முன்னூறு ரூபாய். அதிலே இரண்டாயிரத்து நூறு ரூபாய் கல்விக்கடனாக கிடைத்து விட்டது. மீதமுள்ள தொகையும் விடுதிக்கட்டணம் (அது அதிகபட்சம் மாதம் நூறிலிருந்து நூற்றுப் பத்து ரூபாய் வரை வரும்) நெய்வேலி மதுரை போக்குவரத்துக் கட்டணம் – இவைதான் கல்லூரிப் படிப்பிற்கான செலவு. 

இப்போதைய கல்விக்கட்டணங்களைப் பார்த்தால் பெருமூச்சு வருகிறதல்லவா? எல்.கே.ஜிக்கே இப்போது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நான் சொல்ல வந்த விஷயமே வேறு.

கல்விக்கடன் வாங்கியதில் பிரச்சினையே இல்லை. திருப்பிச் செலுத்துவதில்தான் சிக்கல் வந்து விட்டது. பணம் இல்லாத சிக்கல் அல்ல. எப்படி செலுத்துவது என்பதில்தான் சிக்கல்.

எல்.ஐ.சி பணியில் சேர்ந்து ஆறு மாதம் கழித்து வேலை கன்ஃபர்ம் ஆனதும் கல்லூரித்துறை இயக்குனருக்கு "கல்விக்கடனை எப்படி செலுத்துவது" என்று வழிகாட்டுமாறு கடிதம் எழுதினேன். நாம் செலுத்தும் பணம் ஒழுங்காக நம் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் அல்லவா? அங்கிருந்து பதில் இல்லை. மூன்று மாதங்கள் முடிந்த பின்பு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினேன். அதன் பின்பும் இரண்டு கடிதங்கள். எல்லாமே பதிவுத்தபாலில் அனுப்பிய கடிதங்கள். ஆனால் எல்லாம் கல்லூரித்துறை இயக்குனர் அலுவலக குப்பைத்தொட்டிக்கு போய் விட்டது போல. விலாச மாற்றத்தைக் கூட ரொம்ப சின்சியராக தெரிவித்தெல்லாம் கடிதம் எழுதியிருக்கிறேன்.

அதன் பின்பு என் அப்பா நேரடியாக சென்னைக்கே அந்த அலுவலகத்திற்குச் சென்று எந்த கணக்கில் செலுத்த வேண்டும் என்ற விபரங்களை வாங்கி வந்தார். அந்த வருடம் வந்த போனஸ் தொகையைக் கொண்டு கல்விக்கடனை முழுமையாக ஒரே தவணையில் செலுத்தினேன். கருவூலத்தில் கட்டிய சலானின் நகலோடு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி வைத்தேன். அதற்கும் எந்த பதிலும் கிடையாது.

அதற்குப் பிறகு இரண்டு வருடம் கழித்து ஒரு கடிதம் வந்தது. "திரு ராமன் என்பவர், தான் வாங்கிய கல்விக்கடனை முழுமையாக செலுத்தி விட்டார். ஆனால் அவர் கல்லூரிப் படிப்பை முடித்து ஒரு வருடம் கழித்தே செலுத்தியதால் அபராத வட்டி செலுத்த வேண்டும். அபராத வட்டியை நிர்ணயம் செய்ய உடனடியாக ஊதியச் சான்றிதழை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்" என்பதுதான் கடிதத்தில் இருந்த வாசகங்கள்.

பயங்கரக் கோபம் வந்து விட்டது. அப்போதுதான் சங்கத்தில் சூடான கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. கற்றுக் கொண்ட அத்தனை வித்தையையும் இறக்கி, படு காட்டமான கடிதம் ஒன்றை எழுதி, பழைய கடிதங்களின் நகலை இணைத்து அபராத வட்டியெல்லாம் கட்ட முடியாது என்று ஆணித்தரமாக பதில் அனுப்பி விட்டேன். 

கல்வி அமைச்சர், முதலமைச்சர், ஆளுனர் என சகட்டுமேனிக்கு அனைவருக்கும் நகலை அனுப்பினேன். மனித உரிமை ஆணையம் என்று இருப்பது அப்போது தெரியாது. தெரிந்தால் அவர்களுக்குக் கூட அனுப்பியிருப்பேன்!

இந்த கடிதத்திற்கும் பதில் கிடையாது. அபராத வட்டி கட்டு என்றும் அதற்குப் பிறகு கடிதம் வரவில்லை. 

பின் குறிப்பு " மேலே உள்ள படம் எங்கள் கல்லூரியின் நுழைவாயில்


No comments:

Post a Comment