Wednesday, July 13, 2016

கோர்ட் சொன்னதை ராணுவம் கேட்குமா? மோடி கேட்பாரா?. .

ஐரோம் ஷர்மிளா பல வருடங்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

மணிப்பூர் மாநில ராஜ்பவன் முன்பு கூடிய சில பெண்கள் திடீரென தங்கள் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்று "இந்திய ராணுவமே எங்களை வன்புணர்ச்சி செய் என்ற பதாகையை பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்கள். 

இதோ இப்போது எப்படி பற்றி எரிகிறதோ அது போலவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவ்வப்போது போராட்டங்கள் வெடிக்கும். இயல்பு வாழ்க்கை முடங்கிப் போகும்.

பதவி உயர்வு பெறுவதற்காகவே ராணுவ அதிகாரிகள் அப்பாவிகள் சிலரை தீவிரவாதிகள் என்ற பெயரில் சுட்டுக் கொன்றதாக செய்திகள் வரும்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக ராணுவ வீரர்களால் இளம் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாக வரும் குற்றச்சாட்டுக்கள் வட கிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரிலும் சர்வசாதாரணம்.

 பெண்களின் பாதுகாப்பு குறித்து நியமிக்கப்பட்ட நீதியரசர் வர்மா குழு அளித்த ஒரு பரிந்துரையை அமலாக்குவது பற்றி நினைக்கக் கூட அப்போதைய மன்மோகன் அரசு தயாராக இல்லை.

மேலே சொல்லப்பட்ட  விஷயங்கள் எதுவும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை அல்ல. எல்லாமே ஒன்றுதான். 

ஜம்மு காஷ்மீர் மாநில மக்களையும் வட கிழக்கு மாநில மக்களையும் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிற கறுப்புச் சட்டமான "ராணுவ  சிறப்பு அதிகாரச் சட்டம்” தான் அது.

ARMED FORCES (SPECIAL POWERS) ACT 1958 என்ற சட்டத்தின் படி காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் ராணுவத்திற்கு அளவு கடந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் என்ன செய்தாலும் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலைமையை உருவாக்கியுள்ளது.

இச்சட்டத்தின்படி யாரை வேண்டுமானால் கொல்வதற்கான முழு உரிமையும் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு விசாரணை வளையத்திற்கு உள்ளேயும் ராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட மாட்டார்கள் என்று அளிக்கப் பட்டுள்ள அளவற்ற சுதந்திரம் அப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தியுள்ளதா?

இல்லை என்பதுதான் யதார்த்தம். அதுதான் சோகமான உண்மை. வட கிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீர் மாநிலத்திலும் அமைதி ஏற்படுவதற்கு மாறாக பதட்டத்தைத்தான் இக்கறுப்புச் சட்டம் ஏற்படுத்தியுள்ளது. யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது என்ற நிலைமை ராணுவத்தை இஷ்டம் போல செயல்பட வைத்துள்ளது.

எதிரிகளை நோக்கி பாய வேண்டிய தோட்டாக்கள் சாதாரண அப்பாவி மக்களின் மீதுதான் அடிக்கடி ஊடுறுவுகிறது. வீரம் பெண்களை வீழ்த்துவதில்தான் வெளிப்படுகிறது. அதனால்தான் இந்தியா என்ற நாட்டுக்குள் இருந்தாலும் இந்தியர்கள் என்ற உணர்வு ஏற்படுவதோ நிலைப்பதோ அரிதாகி வருகிறது. இந்தியாவின் மீது நம்பிக்கையின்மைதான் அதிகரிக்கிறது.

இச்சூழலில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

"ராணுவ  சிறப்பு அதிகாரச் சட்டம்”  விசாரணைகளிலிருந்து அளித்துள்ள விலக்கு என்பதெல்லாம் நீடிக்க முடியாது. பொறுப்பை தட்டிக் கழித்திட முடியாது. ஆயுதம் வைத்திருந்தோரை சுட்டுக் கொன்றோம் என்று சொல்ல முடியாது. ஆயுதம் வைத்துள்ளவரும் இந்தியக்குடிமகனே என்பதை மறந்து விடக் கூடாது. கொல்லப்பட்ட பின்பே அக்கொலையை நியாயப்படுத்த கொல்லப்பட்டவரின் சடலத்தின் கையில் ஆயுதம் திணிக்கப்படுகிறது. என்கவுண்டர் கொலைகள் கண்டிப்பாக உரிய சட்டபூர்வமான விசாரணைக்கு உரியது. இதிலே ராணுவத்துக்கு என சிறப்பு விலக்குகள் எதுவும் இருக்க முடியாது. அவர்கள் மீதும் கண்டிப்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜனநாயகத்திற்கு உட்பட்டதுதான் ராணுவம். சிறப்பு அதிகாரம் என்ற பெயரில் அவர்களுக்கு விலக்கு இருக்க முடியாது”

இதுதான் அத்தீர்ப்பின் சாராம்சம்.

"ராணுவ  சிறப்பு அதிகாரச் சட்டம்” என்பது முற்றிலுமாக துஷ்பிரயோகப்படுத்தப் படுகிற சட்டமாகவே பல்லாண்டுகளாக நடந்து வரும் பல்வேறு சம்பவங்கள் நிரூபித்துள்ளது.

இந்தியாவிற்கு உள்ளே இருந்தாலும் இந்தியர்கள் இல்லை என்று உணர்வது எவ்வளவு மோசமான துயரம்? அப்படிப்பட்ட உணர்வை உருவாக்குகிற ஒரு சட்டம் எப்படி ஒரு நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் பாதுகாக்க உதவிகரமாக இருக்கும்?

இக்கறுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு இதுதான் சரியான தருணம். தாங்கள் பயன்படுத்தும் தளவாடங்களை தரமில்லாமல் அன்னிய நாட்டுக் கம்பெனிகளிடம் இருந்து கொள்முதல் செய்து தருவதை எதிர்க்காத, பாதுகாப்புத் துறையில் நூறு சதவிகித அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை கண்டு கொள்ளாத முப்படைகள், "ராணுவ  சிறப்பு அதிகாரச் சட்டம்” நீடிக்க வேண்டும் என்று மட்டும் வலியுறுத்துவது வினோதமானது.

இப்போதாவது அரசு செயல்பட வேண்டும்.

அமைதியாக இருங்கள் என்று காஷ்மீர் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பது மட்டும் போதாது மிஸ்டர் மோடி. பேச்சை கைவிட்டு நடவடிக்கையில் இறங்குங்கள். நம்பிக்கை உருவானால்தான் அமைதி ஏற்படும். நம்பிக்கையை உருவாக்கும் முதல் படியாக கறுப்புச் சட்டத்தை நீக்கிடுங்கள். அச்சட்டம் மூலம் உருவான களங்கத்தை போக்கிடுங்கள்.

No comments:

Post a Comment