Friday, July 22, 2016

ஊடகங்களுக்குப் பின்னே ஓளிந்திருக்கும் . . . .





முன் குறிப்பு :சில வருடங்கள் முன்பு வாங்கிய ஒரு சிறு நூல். படித்து விட்டு தருகிறேன் என்று ஒரு நண்பர் வாங்கிக் கொண்டார். படித்து விட்டு நூல் அறிமுகமும் எழுதித் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு கொடுத்தேன். புத்தகமும் வரவில்லை. நூல் அறிமுகமும் எழுதித் தரவில்லை. ஒரு வேளை அந்த நிபந்தனை போடாவிட்டால் அவர் படித்து விட்டு திருப்பி கொடுத்திருப்பாரோ என்னவோ? அதற்குப் பிறகு அந்த நூல் கண்ணில் படவேயில்லை. இந்த வருட புத்தகக் கண்காட்சியில்தான் கிடைத்தது.

நூல் அறிமுகம்.

நூல்                       ; செய்தியின்  அரசியல்
ஆசிரியர்                  ; ஆர்.விஜயசங்கர்,
வெளியீடு                 : பாரதி புத்தகாலயம்,
                              சென்னை 18
விலை                     : ரூபாய் 10.

ஃப்ரண்ட் லைன் பத்திரிக்கையின் ஆசிரியரான தோழர் ஆர்.விஜயசங்கர், ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்குப் பின்னே உள்ள அரசியலைப் பற்றி அலசியுள்ள நூல்.

“முதலில் சன் டி.வி பாருங்கள், பின் ஜெயா டிவி பாருங்கள், இவை இரண்டும் கொடுக்கும் செய்திகளின் சராசரிதான் இன்றைய உண்மைச் செய்தி என்று ஊகித்துக் கொள்ளுங்கள்!” என்று ஆரம்பிக்கிறது இந்நூல். அனைத்துச் செய்திகளுக்கும் ஐந்து சல்லடைகளே காரணியாக உள்ளது என்று அமெரிக்க சிந்தனையாளர்கள் எட்வர்ட் ஹெர்மன் மற்றும் நோம் சோம்ஸ்கி எழுதிய “ஒப்புதலை உற்பத்தி செய்தல்” ( Manufacturing Consent)  
என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளதை சுருக்கமாக மனதில் பதியும்படி எழுதியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் அளவு, முதலாளிகளின் சொத்து, அவர்களின் லாப வெறி – இவைதான் முதல் சல்லடை.

ஊடகங்களுக்கு ஆதாரமாக இருக்கிற விளம்பரங்கள். சில ஊடகங்களுக்கு விளம்பர கொடுக்காமல் போவதற்குக் காரணம், விளம்பரம் செய்யப்படும் பொருட்களை வாங்குவதற்கான வசதி அதன் வாசகர்களுக்கு இல்லாததுதான் என்று 1856 லியே ஒரு விளம்பர நிறுவன அதிகாரி சொன்ன தகவல் கிடைக்கப் பெறுகிறோம். விளம்பர நிறுவனங்கள் விரும்பாத செய்திகளை வெளியிட முடியாத நிலையையும் விளக்குகிறார்.

செய்திகளை சேகரிப்பதற்கு அரசும் காவல் துறையும் தருகிற செய்திகளை மட்டுமே நம்பியிருக்கக் கூடிய ஊடகங்கள் என்பது மூன்றாவது காரணி.

வாசகர் கடிதம் என்ற பெயரில் வருகிற எதிர்வினைகள், அரசியல், வணிக அமைப்புக்களின் மிரட்டல்கள், ஜெயலலிதா அரசு செய்வது போல அவதூறு வழக்குகள் போன்றவை செய்திகள் வெளியிடுவதை தீர்மானிக்கிற நான்காவது காரணி.

கம்யூனிச தத்துவ எதிர்ப்பு என்பது செய்தி வெளியீட்டை தீர்மானிக்கிற ஐந்தாவது காரணி. ஒரே சம்பவத்தை கம்யூனிச நாட்டில் நடந்தால் ஒரு மாதிரியாகவும் அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகளில் நடந்தால் வேறு மாதிரியாகவும் செய்திகள் வெளியிடுவதையும் உதாரணத்தோடு எழுதி உள்ளார்.

இந்த செய்தி ஏன் இப்படி வந்துள்ளது என்பதை அலசுவதற்கான ஞானத்தை இந்த சிறு நூல் அளிக்கிறது. அவதூறு வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிற தோழர் விஜயசங்கர் தனது சொந்த அனுபவத்தையும் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்ற உணர்வும் வந்தது.

ஆனால் அது சமீபத்திய சம்பவம். 2008 ல் முதலாவதாக வெளியான இந்த நூலின் 2011 ல் வெளி  வந்த மூன்றாம் பதிப்புதான் என் கையில் உள்ளது என்பதும் உடனடியாக நினைவுக்கு வந்தது. அடுத்த பதிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன். 

1 comment:

  1. ஆர்.விஜயசங்கரின் எழுத்துகளை நான் வாசித்துள்ளேன். அவருடைய நூல் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete