நூல் அறிமுகம்
நூல் :
வீழ்ச்சி
ஆசிரியர் :
சுகுமாரன்
வெளியீடு : பாரதி
புத்தகாலயம்
சென்னை –
18
விலை : ரூபாய் 210.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுடைய தொழிற்சங்க வரலாற்றை அப்படியே சொல்லாமல் சில
கற்பனை கதாபாத்திரங்களோடு இணைத்து
ஆசிரியர்களை அணி திரட்டுவதில் உள்ள சிரமங்களை சொல்கின்ற நூல்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி
ஆசிரியரான தங்கதுரை என்ற கதாபாத்திரம் மூலமாக எழுபதுகளின் இறுதியிலிருந்து
இரண்டாயிரங்களின் முற்பகுதி வரையிலான ஆசிரியர் அமைப்புக்களின் இயக்கங்களை
விவரிக்கிறது இந்நூல். முப்பதாண்டு கால தமிழக அரசியலை புரிந்து கொள்ளவும் உதவும்
நூல் இது.
பஞ்சாயத்து ஒன்றியங்களின் கட்டுப்பாட்டிலிருந்த போது ஆசிரியர்கள் சந்தித்த
பிரச்சினைகள், ஊதியம் கிடைப்பதற்குக் கூட பி.டி.ஓ அலுவலகங்களில் தொங்கிக்
கொண்டிருக்க வேண்டிய அவலம், அரசின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்பதற்காக
நடைபெற்ற வேலை நிறுத்தம், அதற்கு ஆசிரியர்களை திரட்ட பட்ட பாடு, தங்களின்
வாழ்க்கைக்கான கோரிக்கையாக இருந்தாலும் போராட்டத்திலிருந்து ஒதுங்கி நின்றவர்கள்
ஆகியவையெல்லாம் மிகவும் சிறப்பான முறையில் எழுதப்பட்டுள்ளது.
அதே போல ஆசிரியர் இயக்கங்களுக்கு இடையேயான முரண்பாடுகள், அமைப்புக்கள்
பிளவு படுவது, பிறகு அவையே கூட்டியக்கம் காண்பது போன்ற நிலைமைகளும் விபரமாகவே
சொல்லப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு துளி மையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அராஜக சம்பவம்
வரை நூல் செல்கிறது. போராட்டம் நிச்சயம் ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கையோடு நாவல்
முடிகிறது.
ஒரு தொழிற்சங்க இயக்கத்தை கட்டமைப்பதும் கோரிக்கைகளை உருவாக்கி
உறுப்பினர்களை போராட்டப் பாதைக்கு அழைத்துச் செல்வதும் எவ்வளவு முயற்சி
தேவைப்படுகிற ஒன்று என்பதை விளக்குகிறது இந்த நூல். போராட்டத்தின் வெற்றியைச்
சுவைக்க போராட்டத்திலிருந்து விலகி நிற்பவர்கள்தான் எப்போதும் முந்துகிறார்கள்
என்ற உண்மையையும் இந்நூல் பட்டவர்த்தனமாய் போட்டு உடைக்கிறது.
ஆசிரியர்கள், அவர்கள் பள்ளியின், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை நேர்மையுடன்
அர்ப்பணித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிற இந்நூல் மீது
எனக்கொரு வருத்தமுண்டு.
இந்த நூலில் தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி.
ஜெயலலிதா ஆகியோரின் பெயர்கள் மாற்றப்படவில்லை, அவர்கள் அப்படியே வருகின்றனர். அது
போலவே அமைச்சர்கள் அரங்கநாயகமும் நெடுஞ்செழியனும். சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ
கட்சிகளின் மாநிலச் செயலாளர்களாக இருந்த தோழர்கள் ஏ.நல்லசிவன், பா.மாணிக்கம் ஆகியோரின்
பெயர்களும் கூட மாற்றப்படவில்லை.
அது போலவே ஆசிரியர் அமைப்புக்களின் தலைவர்களாக இருந்த ஜே.எஸ்.ராஜு,
ஈஸ்வரன், மீனாட்சி சுந்தரம், ந.இறையவன், அப்துல் மஜீத், செ.நடேசன், மா.ச.முனுசாமி,
மாயவன் ஆகியோர்களின் பெயர்களில் எந்த மாற்றமும் இல்லை. அரசு ஊழியர் சங்கத்
தலைவர்களான எம்.ஆர்.அப்பன், என்.எல்.சீதரன் ஆகியோரின் பெயர்களிலும் கூட.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆளுங்கட்சியின் ஜால்ராவாக
மாறியதால் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உருவானதையும் பின்பு
பொதுச்செயலாளருக்கான தேர்தலில் செ.நடேசனிடம் தோற்றுப் போன அப்துல் மஜீத் தமிழக
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை உருவாக்கிய விபரமெல்லாம் கூட மிகச் சரியாக
சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் அரசு ஊழியர் பணி நீக்கத்தை எதிர்த்து சி.ஐ.டி.யு உச்ச நீதிமன்றம்
சென்றதை சரியாக எழுதிய ஆசிரியர், வழக்கு தொடுத்த தோழர் டி.கே.ரங்கராஜன் பெயரை
மட்டும் மாற்றி சி.ஐ.டி.யு அமைப்புக்கு சம்பந்தமில்லாத ஒரு பெயரை எழுதியுள்ளார்.
இது அறியாமல் செய்த பிழையா இல்லை தோழர் டி.கே.ரங்கராஜன் பெயரை இருட்டடிப்பு
செய்யும் முயற்சியா என்று தெரியவில்லை.
அறியாமல் நிகழ்ந்த தவறென்றால் நூல் அடுத்த பதிப்பு காண்கையில் திருத்திக்
கொள்ள வேண்டும்.
உள் நோக்கத்துடன்தான் மாற்றப்பட்டது என்றால்
வருந்துகிறேன். இது நேர்மையல்ல.
பாரதி புத்தகாலயம் உங்கள் கட்சியுடையதுதானே. அவர்களே அதை மாற்றி இருக்கலாமே
ReplyDelete