Saturday, July 9, 2016

எரிச்சலூட்டும் ஒரு கடிதம் - யாருக்கு???

கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு முக்கியமான கடிதம். இந்த கடிதத்தை படிக்கிற போது சிலருக்கு எரிச்சல் வரலாம். அப்படி யாருக்கெல்லாம் எரிச்சல் வருகிறதோ அவர்கள் எல்லாம் யார் என்பதை சுலபமாக வரையறுத்து விடலாம்.

திருடர்களாகவும் மோசடிப் பேர்வழிகளாகவும் இருந்தாலும் கூட தொழிலதிபர்கள் என்ற பெயரில் உலா வருபவர்கள், அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் அரசியல்வாதிகள், அவர்கள் வீசும் எலும்புத் துண்டுகளில் பிழைப்பு நடத்துபவர்கள் ஆகியோருக்கு கண்டிப்பாக எரிச்சல் வரும். 

மக்கள் மீது உண்மையான நேசம் உள்ளவர்கள் இக்கடிதத்தின் மீது மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். 

நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் என்பதை இக்கடிதத்தை படிக்கையில் உங்களுக்கு ஏற்படும் உணர்வே சொல்லி விடும்.

சொல்லுங்கள் உங்கள் எரிச்சல் கடிதம் எழுதிய தோழர் யெச்சூரி மீதா?

அல்லது கோட் சூட் போட்டு வலம் வரும் கொள்ளையர்கள் மீதா?
 
அன்புள்ள பிரதமர் அவர்களே,

நமது நாட்டின் மிகப்பெரும்பாலான மக்களின் எதிர்கால வாழ்வாதாரப் பாதுகாப்பாக, அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருக்கிற பணம் சூறையாடப்பட்டிருப்பது தொடர்பான மிகக் கடுமையான - அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை குறித்து தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தங்களது உடனடிக் கவனமும் தலையீடும் தேவை என்று கருதுகிறேன்.இந்திய ரிசர்வ் வங்கியின் `நிதி நிலைத்தன்மை’ தொடர்பான சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை, நமது வங்கித் துறையின் பரிதாபகரமான - முடக்கப்படும் அபாயம் நிறைந்த நிலைமையை மீண்டும் ஒருமுறை பளிச்சென வெளிக்காட்டியிருக்கிறது. 2016 மார்ச் இறுதி வாக்கில், செயல்படா சொத்துக்களின் மொத்த மதிப்பு (வராக்கடன்கள்) என்பது, பட்டியலிடப்பட்ட அனைத்து வணிக வங்கிகளின் கணக்கையும் சேர்த்து ரூ.5,60,822 கோடி ஆகும். இது, இந்த வங்கிகள் அளித்துள்ள ரூ.72,73,927 கோடி கடனின் முன்தொகையாக கருதப்படுகிற - முற்றிலும் வராக்கடனாக வரையறுக்கப்பட்டுள்ள 7.71 சதவீதத்தொகையே ஆகும். இத்துடன் கூடுதலாக, 4.05 சதவீதம் அளவிற்கு முன்தொகை என்ற பெயரில் ரூ.2,94,729 கோடி வராக்கடனும் நிற்கிறது.இதன் பொருள் என்னவென்றால் நமது வங்கிகளால் அளிக்கப்பட்டுள்ள 8 லட்சத்து 50ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம் (ரூ.8,55,551 கோடி), கடன் வாங்கியவர்களால் இன்னும் திருப்பித் தரப்படவில்லை என்பதாகும். இதுதொடர்பாக உங்களது அரசாங்கம் ஏற்கெனவே எடுத்துள்ள நடவடிக்கைகள், அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, இந்தப் பணம் மிக விரைவில் வங்கிகளுக்கு திரும்பக் கிடைத்துவிடும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருக்கிற இந்தக் கடன்காரர்களால் முறைகேடாக புழங்கப்பட்டு வரும் இந்த மிகப்பெரிய தொகையானது ஒவ்வொரு இந்தியரின் சேமிப்புப் பணம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தேவை இல்லை.2014 ஜூலை 1 அன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி சஷி காந்த் சர்மா, “மேற்கண்ட வராக்கடன்களில் ஒரு கணிசமான தொகையானது இந்திய வங்கித் துறையிடமிருந்து முன்தொகை என்ற பெயரில் மோசடியான முறையில் பெறப்பட்டதே என்று கருதப்படுகிறது. இதில் பெரும்பாலான தொகைகள் வெளிநாடுகளுக்கு கைமாற்றப்பட்டுவிட்டன என்றும், அதை ஒரு போதும் திரும்பப் பெற முடியாது என்றும் நம்பப்படுகிறது” என்று கூறினார். (பிசினஸ் ஸ்டாண்டர்டு, ஜூலை 2)

தங்களது தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த கறுப்புப் பணத்தையும் இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டுவருவேன் என்று பரபரப்பான வாக்குறுதிகளை அளித்தீர்கள். அது மட்டுமல்ல, பிரதமராக பதவியேற்ற உடனேயே ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையில் டெபாசிட் செய்வேன் என்றும் உறுதியளித்தீர்கள். நீங்கள் வெளிநாடுகளிலிருந்து கறுப்புப் பணத்தை கொண்டுவருவதாகச் சொன்ன வாக்குறுதியைக் கூட விடுங்கள்; இந்த நாட்டின் முதன்மையான தணிக்கை அதிகாரி, இந்தப் பணமெல்லாம் வெளிநாடுகளுக்கு கைமாற்றப்பட்டுவிட்டது என்றும் அதை இனிமேல் திரும்பப்பெற முடியாது என்றும் கருதுகிறார் என்றால், உங்களது கண்காணிப்பின் கீழேயே இருக்கும் வங்கித்துறையின் அந்தப் பணம் எங்கே போனது?

நமது பொதுத்துறையின் வங்கிகளின் சொத்துக்களின் மதிப்பு என்பது 2016 மார்ச் நிலவரப்படி வெறும் 14.5 சதவீதம் என்ற விகிதத்திலேயே கடுமையாக அழுத்தத்தின் பிடியில் சிக்கி நெருக்கடியில் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் சொத்துக்களில் சந்தேகத்திற்கு இடமானவையாகவும் முற்றிலும் இழப்பு என்று கருதப்படுபவையாகவும் இருப்பவற்றின் மதிப்பு மட்டும் ரூ.1,85,840 கோடி ஆகும். இந்த வகையில் அனைத்து தேசியமய வங்கிகளின் நிகர இழப்பு ஒவ்வொரு வங்கிக்கும் ரூ.20,590 கோடி ஆகும். உண்மையில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த சந்தை மதிப்பு என்பது, அவற்றால் அளிக்கப்பட்டுள்ள கடன்களில் வராக்கடன்களாக உள்ள தொகையின் மதிப்பை விட மிகக்குறைவானதே ஆகும். இது மிக மிகக் கடுமையான, ஆபத்தான நிலைமையாகும்.இத்தகைய பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்களிடம் ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன்வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிற முதன்மையான பத்து பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் எவை என்பது உங்களுக்குத் தெரியும். 

கடந்த ஆண்டின் அறிக்கையின்படி அதானி குழுமம் ரூ.96,031 கோடி கடன் வைத்துள்ளது. எஸ்ஸார் குழுமம் ரூ.1,00,100 கோடி, ஜிஎம்ஆர் குழுமம் ரூ.47,976 கோடி, ஜிவிகே குழுமம் ரூ.33,933 கோடி, ஜேபி குழுமம் ரூ.75,163 கோடி, ஜேஎஸ்டபிள்யு குழுமம் ரூ.58,171 கோடி, லான்கோ குழுமம் ரூ.47,102 கோடி, ரிலையன்ஸ் குழுமம் ரூ. 1,25,000 கோடி, வேதாந்தா குழுமம் ரூ.1,00,300 கோடி மற்றும் வீடியோ கான் குழுமம் ரூ.45,405 கோடி என கடன் வைத்துள்ளன. (கிரெடிட் சுய்ஸ்ஸி அறிக்கை)இந்திய ரிசர்வ் வங்கியின் தகவலின்படி, அனைத்து வங்கிகளின் மொத்த வராக்கடன்களில் முதன்மையான 100 கடனாளிகள் வாங்கியிருக்கிற கடன்களின் மொத்தத் தொகையின் விகிதமானது கடந்த 2015 மார்ச்சில் இருந்ததைவிட தற்போது 2016 மார்ச் நிலவரத்தின்படி 0.07 சதவீதம் அதிகரித்து 19.3 சதவீதமாக உள்ளது.கடந்த ஓராண்டில் மட்டும் இத்தகைய வராக்கடன்கள் 80சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளன. ஆனால் வராக்கடன்களை வசூலிப்பதற்காக மிகப்பெரும் முயற்சிகள் செய்வதாகக் கூறி வரும் உங்களது அரசாங்கம், இந்தத் தொகைகளை வசூலிப்பதில் எந்தவிதமான முன்னேற்றமும் காட்டாதது கவலையளிக்கிறது.2015-16ம் நிதியாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளால் வசூலிக்கப்பட்டுள்ள கடன் தொகை என்பது ரூ.1.28லட்சம் கோடி மட்டுமே ஆகும். இதில் தள்ளுபடி செய்யப்பட்ட 46சதவீத கடன்தொகையும் அடங்கும். 2014-15ம் நிதியாண்டிலும் ரூ.1.27லட்சம் கோடி கடன் மட்டுமே வசூலிக்கப்பட்டது. இது, 

மேற்படி கடன்காரர்களிடமிருந்து பொதுப்பணத்தை வசூலிப்பதில் உங்களது அரசாங்கம் உறுதியாக இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறது.இந்த விபரங்கள் எல்லாம் எங்களது கவனத்திற்கு வந்திருப்பது எப்படி என்றால், ரகுராம் ராஜன் தலைமையிலான இந்திய ரிசர்வ் வங்கியால் மிகவும் தீவிரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட சொத்து மதிப்பு பரிசீலனையின் விளைவாகத்தான். உங்களது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களால் இடைவிடாமல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், திரு ரகுராம் ராஜன் எதிர்வரும் செப்டம்பரில் ஆளுநர் பதவியைவிட்டுச் செல்கிறார். 

அவர் துவக்கி வைத்த மேற்கண்ட சொத்து மதிப்பு பரிசீலனை நடவடிக்கையானது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கியமான பதவியை வகிக்கும் நிர்வாகி ஒருவர் கண்முன்பே கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டபோது நீங்கள் மவுனம் காத்தீர்கள்; இது, மேற்கண்ட வராக்கடன்கள் மற்றும் மோசமான கடன்களை வசூலிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறைவு பெறுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றே பலரையும் கருதச் செய்தது. இதில் எந்தவிளக்கமும் தேவைப்படவில்லை; என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது, உங்களது அரசாங்கம் “சலுகை சார் முதலாளித்துவத்தை” மிகத் தெளிவாக, மிகத் துரிதமாக வளர்த்துவிடுகிறது; பாதுகாக்கிறது.சமீபத்திய ஊடகச் செய்திகள் வேறு சில தகவல்களையும் வெளியிட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் அடித்தளமாக இருக்கும் மூலதனத்திலிருந்து ரூ.3லட்சம் கோடி முதல் ரூ.4லட்சம் கோடி வரையிலான பணத்தை எடுத்து பொதுத்துறை வங்கிகளுக்கு மறு மூலதனமாக கொடுத்துவிடுவது என்று ஒரு திட்டத்தை உங்களது அலுவலகம் தயாரித்திருக்கிறது என்கின்றன அந்தச் செய்திகள். இது மிகவும் ஆபத்தான யோசனை. 

இது இந்திய ரிசர்வ் வங்கியின் மூலதன பலத்தை வீழ்த்திவிடும்; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார அதிர்வுகளை ரிசர்வ் வங்கி தாங்க முடியாமல் நிலைகுலையச் செய்துவிடும்.இந்திய ரிசர்வ் வங்கி என்பது ஒரு சக்திமிக்க சுயேட்சையான நிறுவனமாக இருந்து வருகிறது. தற்போது மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால் இந்தியாவின் மைய வங்கியானது அரசாங்கத்தின் ஒரு கருவியாகவே மாறிவிடும்.மேலும், வங்கிகளின் உரிமையாளர் போல மாறிவிடும். அப்படியானால் ரிசர்வ் வங்கியானது தானே வங்கியை நடத்துபவராகவும், அதைக் கண்காணிப்பவராகவும் மாற வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த யோசனை முதன்முதலாக நடப்பாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை. பெங்களூரில் கடந்த மாதம் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவின்போது திரு. ரகுராம் ராஜன் கூறினார்: “பொருளாதார ஆய்வறிக்கையானது, பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி மூலதனம் அளிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகிறது. இது வெளிப்படைத்தன்மை இல்லாத நடைமுறைகளுக்கே வழிவகுக்கும்; வங்கிகளை கண்காணித்து ஒழுங்காற்று செய்யும் பணியைச் செய்ய வேண்டிய ரிசர்வ் வங்கி மீண்டும் வங்கிகளின் உரிமையாளர் போல நேரடி வணிகத்தில் ஈடுபடுவதற்கே வழி வகுக்கும். இது வங்கிகளின் நலன்களுக்கு இடையிலான மோதலுக்கே வழிவகுக்கும்“. (இந்திய ரிசர்வ் வங்கி இணையதளம்).

இத்தகைய மோதலைத் தவிர்க்கும் நோக்கத்துடன்தான், மால்கம் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில், 2007ம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் கைவசம் இருந்த பாரத ஸ்டேட் வங்கியின் 59.7சதவீத பங்குகளை ரூ.35,531 கோடி பணம் கொடுத்து இந்திய அரசு வாங்கியது என்பது நினைவுகூரத்தக்கது.அதுமட்டுமல்ல, பொருளாதார ஆய்வறிக்கையில் மேற்கண்ட யோசனையை முன்மொழியும்போதே முதன்மைப் பொருளாதார ஆலோசகர் திட்டவட்டமாக ஒரு எச்சரிக்கையினையும் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு இடையே கூட்டாக, ஒத்துழைப்புடன் முடிவு மேற்கொள்ளப்பட்டு செயலாக்கப்பட வேண்டும் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மூலதனத்தை எடுத்து வங்கிகளுக்கு மறு மூலதனமாக அளிக்கும்போது ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தையும் சுயேட்சைத் தன்மையையும் அதன் ஒருமைப்பாட்டையும் பலமான நிதி நிலைமையையும் உறுதிப்படுத்திக் கொண்டுதான் எந்த நடவடிக்கையிலும் இறங்க வேண்டும்” என்று அவர் கூறினார். (பொருளாதார ஆய்வறிக்கை 2015-16).எனவே ரிசர்வ் வங்கியின் மூலதன அடித்தளத்தைத் தகர்க்கும் விதத்தில் அதிலிருந்து பெரும் மூலதனத்தை எடுத்து வங்கிகளில் மறு முதலீடு செய்வது என்பதைப் பொறுத்தவரை முதன்மை பொருளாதார ஆலோசகரின் எச்சரிக்கை இருக்கிறது; ரிசர்வ் வங்கியின் ஆளுநரே அதைக் கடுமையாக எதிர்க்கிறார்; இத்தகைய பின்னணியில் அந்த யோசனை உடனடியாக கைவிடப்பட வேண்டியது அவசியம். அரசாங்கமானது தனது நிதிப்பற்றாக்குறையை தொடர்ந்து பேணுவதற்கு ரிசர்வ் வங்கியின் மூலதன அடித்தளத்தை அரிக்கும் இந்த யோசனையைக் கைவிட்டு, அதற்கு மாறாக வெளிப்படைத்தன்மை மிக்க வழியினைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.

எப்படியிருப்பினும், திரும்பச் செலுத்தப்படாத மிகப்பெரும் கடன்களை வசூலிப்பதற்கு எந்தவொரு திட்டத்தையும் தீட்டாமல், அதைச் செயல்படுத்தாமல் வங்கிகளில் மறு மூலதனம் போடும் எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படக்கூடாது. உங்களது அரசாங்கம், வாங்கிய கடன்களை உடனே திரும்பச் செலுத்துமாறு பெரும் வர்த்தக நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எந்தவொரு நிர்ப்பந்தத்தையும் அளிக்கவில்லை. அவர்கள் தங்களது ஆடம்பரமான சுகபோகமான வாழ்வில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது தனிப்பட்ட செல்வம் என்பது சற்றும் பாதிக்கப்படாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசாங்கத்திடம் விதவிதமான சலுகைகளை அனுபவித்துக் கொழுத்துப் பெருத்துக் கொண்டிருக்கும் பெரும் முதலாளிகள் மகிழ்ச்சியில் திளைக்கும்போது, உங்களது அரசாங்கம் ஏழை விவசாயிகளிடம் தனது கொடுங்கரத்தை நீட்டுகிறது. அந்த விவசாயிகள், தொடர்ச்சியாக இரண்டு மிகப்பெரும் வறட்சிகளில் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கிறார்கள்; அவர்களது உணவுப் பாத்திரங்கள் சோறின்றிக் காலியாகக் கிடக்கின்றன; அவர்களது கால்நடைகள் கவனிப்பாரின்றி, சாவின் பிடியில் சிக்கியிருக்கின்றன; அவர்கள் வங்கியில் வாங்கிய சில ஆயிரம் ரூபாய் கடன்களை திரும்பச் செலுத்தவில்லை என்பதற்காக உங்களது அரசாங்கம் இடைவிடாமல் துரத்துகிறது!

இந்த நாட்டின் பிரதமர் என்கிற முறையில் உங்களை கேட்டுக் கொள்கிறேன்; நாட்டின் முதன்மையான நூறு கடன்காரர்கள் பாக்கி வைத்திருக்கிற தொகையை உடனடியாக வசூலிப்பதற்கான அவசரத் திட்டம் ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்துங்கள். அவர்களது பெயர்களை, அவர்கள் அளிக்க வேண்டிய கடன் தொகையுடன் குறிப்பிட்டு நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவியுங்கள்; அந்தப் பட்டியல் ஏற்கெனவே ரிசர்வ் வங்கியின் வசம் உள்ளது; உங்கள் அரசாங்கத்தின் கைகளில் உள்ளது; உச்சநீதிமன்றத்திடம் உள்ளது. இந்தக் கடன்காரர்களிடம் சிக்கியிருக்கும் பணத்தை - சொத்துக்களை திரும்ப வசூலிக்கும்வரை பொதுத்துறை வங்கிகளுக்கு நாட்டின்   பொதுப்பணத்திலிருந்து எந்தவொரு தொகையும் மூலதனம் என்ற பெயரில் அளிக்கப்படக்கூடாது. இதை செய்யத் தவறினால் உங்களது அரசாங்கம் மேற்படி சலுகைசார் முதலாளிகள் மேலும் மேலும் கொழுப்பதற்கு ஏழை இந்தியர்களின் வயிற்றில் ஓங்கி உதைக்கிறது என்றே பொருளாகும்.

எனவே மீண்டும் ஒரு முறை உங்களது கவனத்தைக் கோருகிறேன். இந்தப் பிரச்சனையில் முழு கவனத்துடன் நீங்கள் இறங்க வேண்டும். பொதுப்பணத்தைச் சூறையாடியிருக்கும் கடன்காரர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும். அவர்களிடமிருந்து அதை வசூலிப்பதற்கு செயல்திட்டத்தைத் துவக்கிட வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் மூலதனத்தை அரித்து பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் என்ற பெயரில் சீர்குலைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். முதலில் பெரும் கடன்காரர்களிடம் வசூலிப்பது, அதற்குப் பிறகு தேவையானால் மறுமுதலீடு என்ற கோட்பாட்டை உங்களது அரசாங்கம் உறுதியுடன் பின்பற்ற வேண்டும்.இதைச் செய்யத் தவறுமானால் உங்களது அரசாங்கம் சட்டவிரோதமாக பொதுப்பணத்தை சூறையாடியிருக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், சலுகைசார் முதலாளிகளை தூக்கிப்பிடிக்கிறது; பாதுகாக்கிறது என்றே அர்த்தமாகும்.

- சீத்தாராம் யெச்சூரி, 
பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)

தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்

நன்றி - தீக்கதிர் 09.07.2016

No comments:

Post a Comment