Saturday, July 30, 2016

எச்சரிக்கை. தாக்குதல் தொடங்குகிறது





இந்த வாரம் எனக்கு பயண வாரம்.  சனிக்கிழமை கடலூர், திங்கள் நெய்வேலி, புதன் திருக்கோயிலூர், வெள்ளி விழுப்புரம், நேற்று செய்யாறு, நேற்றே மீண்டும் புறப்பட்டு இப்போது பாலக்காடு பக்கத்தில் என்று  என்று பயணங்களில்தான் பெரும்பாலான நேரம் கழிந்தது,

பயண வாரம் படிப்பு வாரமாகவும் மாறி விட்டதால் சமீபத்தில் படித்த நூல்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்டே இருக்கப் போகிறேன். 

இதோ தாக்குதல் தொடங்கி விட்டது



வாழ்க்கை வரலாற்றை கச்சிதமாக எழுதிட . . . .


 
நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி எழுதப்பட்ட ஒரு வாழ்க்கை வரலாறு நூல் மிகவும் ஏமாற்றமளித்தது என்று சில மாதங்கள் முன்பு எழுதியிருந்தேன்.

அதற்கு மாறாக இந்த வாரம் படித்த ஒரு வாழ்க்கை வரலாறு நூல், மனதுக்கு நிறைவாகவும் ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை எப்படி கச்சிதமாக எழுத வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் இருந்தது.

நூல்                       :  செகாவ் வாழ்கிறார்
ஆசிரியர்                      எஸ்.ராமகிருஷ்ணன்,
வெளியீடு                     உயிர்மை பதிப்பகம்
                              சென்னை – 600018
விலை                       ரூபாய் 150.00

உலகப் புகழ் பெற்ற சிறுகதைப் படைப்பாளி ஆன்டன் செகாவ் பற்றி திரு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்.

நாற்பத்தி நான்கே ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் படைப்புலகின் தாரகையாக இன்னும் மின்னுகிற ஆன்டன் செகாவ் பற்றி பதிமூன்று அத்தியாயங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

செகாவின் துவக்க கால வாழ்க்கை, அவரது ஆரம்ப கால பணிகள், மருத்துவராக அவர் செய்த சேவை, தண்டனைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட ஷகல் தீவிற்குச் சென்ற அனுபவம், அவரது நாடக அனுபவங்கள், செகாவின் தனிப்பட்ட வாழ்க்கை, வாழ்க்கையின் பலவீனங்கள். டால்ஸ்டாய் போன்ற மூத்த எழுத்தாளர்களுடனான பரிச்சயம், அவர்கள் பற்றிய செகாவின் கருத்துக்கள், செகாவ் பற்றி அவர் காலத்திய, அவருக்கு இளைய எழுத்தாளர்களின் கருத்துக்கள், செகாவின் முக்கிய சிறுகதைகளின் சுருக்கம், செகாவ் மீது பிற எழுத்தாளர்கள் முன் வைக்கும் விமர்சனம்.  செகாவின் கடைசி நாட்கள், அவருக்கான இறுதி அஞ்சலி என்று கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது.

பெரிய வார்த்தை ஜோடனைகள் இல்லாமல் செகாவ் போலவே அவரது வாழ்க்கை வரலாற்றையும் எளிமையாக எழுதியுள்ளார் செகாவ். அவரின் சிறப்பான குணாம்சங்களை விவரிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், பலவீனங்களையும் எழுதியுள்ளது நூலின் மீது நம்பகத்தன்மை உருவாகிறது.

செகாவோடு சேர்ந்து பயணித்த, அவரது படைப்புக்களை வாசித்த உணர்வு ஏற்படுகிறது. ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் இந்த நூல் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment