Saturday, July 2, 2016

ஞானியின் நல்லதோர் உரைவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் விருது விழாவில் பத்திரிக்கையாளர் ஞானி பேசிய உரை வாட்ஸப்பில் வந்தது. சிறப்பாக இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய அயோத்திதாசர் ஆதவன் விருது பெறும் எழுத்தாளர் ஞாநியின் ஏற்புரை:

மேடையிலும் அரங்கிலும் இருக்கும் எல்லா தோழர்களுக்கும், என் அன்பான வணக்கங்கள். விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அயோத்திதாசர் ஆதவன் விருதை எனக்கு வழங்க விரும்புவதை, தோழர் ரவிகுமார் தெரிவித்தபோது, நான் முதலில் சற்று தயங்கினேன். காரணம் கடந்த 40 வருடங்களில் பல்வேறு தருணங்களில், அரசு அமைப்புகள் முதல் தனியார் அமைப்புகள் வரை எனக்கு ஏதேனும் விருது கொடுக்க முன்வந்தபோதெல்லாம், அவற்றை மறுத்தே வந்திருக்கிறேன். நான் விருதுக்கு தகுதியானவனா என்ற சந்தேகம் தவிர, அங்கீகரிக்கும் அமைப்புகள் பற்றியும் ஏதாவது கேள்வி மனதில் இருக்கும். முதல் தயக்கத்துக்குப் பின் நான் இந்த விருதைப் பெற ஒப்புக் கொண்டேன். ஏன் என்பதை சொல்லியாக வேண்டும்.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால், இப்போதை விட சாதி ஆதிக்கம் மிகச் கொடூரமாக இருந்த காலம். உயர்சாதி என்று விதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் 1907ல் பிறந்தார் என் தந்தை. அதுதான் அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன்இதழைத்தொடங்கிய வருடம். என் தந்தை தன் இருபதாவது வயதில் சில மாதங்கள் கிராம முன்சீப் வேலையைப் பார்த்தார். அப்போது அவரிடம் சின்னப் பையன் என்ற ஒரு தலித் தலையாரி துணை வேலை பார்த்தார். இருவரும் நெருங்கிப் பழகுவதை சனாதனிகள் ஏற்கவில்லை. இதைப் பற்றி பின்னாளில் அப்பாவிடம் நான் பேசும்போது சொன்னார். நான் சின்னப் பையனுடன் இயல்பாக வேலை பார்த்தது பெரிய விஷயம் அல்ல. என்னுடன் இயல்பாக இருக்க முடியும் என்று, சின்னப் பையன் மெல்ல மெல்ல என்னை நம்பியதுதான் பெரிய விஷயம்.என்றார். அதே பார்வையில்தான் இன்று நான் இந்த விருதை, எனக்குத் தரப்படும் மிகப் பெரிய அங்கீகாரமாக ஏற்கிறேன்.தலித் அல்லாத அமைப்புகள், ஒரு தலித்துக்கு அங்கீகாரம் தருவது அவசியம். ஆனால் பல சமயங்களில் அது ஏதோ சலுகை போலவே கையாளப்படுகிறது. அதை விடவும் ஒரு தலித் அமைப்பு, தலித் அல்லாதவரின் செயல்பாட்டை அங்கீகரிப்பதைப் பல மடங்கு பெரியதாக நான் கருதுகிறேன்.

 விடுதலைச் சிறுத்தைகளை- ஒரு தலித் அமைப்பு - தலித் இயக்கம் என்று குறிப்பிடுவதெல்லாம் கூட, ஒரு தற்காலிகமான குறியீடாகவே இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். உண்மையில் இது, எல்லா சாதியற்றவர்களின் அமைப்பாக ,அனைத்து சாதி மறுப்பாளர்களின் அமைப்பாகவே வருங்காலத்தில் இன்னும் விரிந்த தளத்தில் இயங்கும் ஆற்றல் உடையது. அது மட்டுமல்ல, தமிழக அரசியலை அடியோடு மாற்றியமைக்கவேண்டிய மகத்தான பொறுப்பு, விடுதலை சிறுத்தைகளுக்கு இன்று இருக்கிறது. இடதுசாரிகளுடன் சேர்ந்து, மாற்று அரசியலை மிகக் கடுமையான போராட்டங்களுக்கு இடையில், முன்னெடுத்துச் செல்லும் மகத்தான பணி, உங்கள் முன்னால் அடுத்த பத்தாண்டுகளில் காத்திருக்கிறது.

விஷன் 2020 என்று அப்துல் கலாம், இந்தியாவை வல்லரசாக்க நாள் குறித்தார். நமது தேவை, விஷன் 2021. தமிழகத்தின் முதல் தலித் முதலமைச்சரும் இந்தியாவின் முதல் தலித் பிரதமரும், அனைத்து சாதி மக்களாலும் தேர்ந்தெடுக்கப்படும் நாளில்தான், இந்தியா நிஜமான வல்லரசாகும். மாற்று அரசியல் கலாசாரம் தழைக்காமல், இந்த இலக்கு சாத்தியமில்லை. தி.மு.க, அ.தி.மு.க பா.ஜ.க என்ற மூன்று அரசியல் நச்சு சக்திகளுடனும், எந்தக் காரணத்துக்காகவும் இணையாமல், அடுத்த பத்தாண்டுகளில் மாற்று அரசியலைத் தழைக்கவைக்கும் பெரும் பொறுப்பு, தோழர் திருமாவுடையது. அதற்கு முற்றிலும் தகுதியானவர் என்று தன்னைக் கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்துக்கே அவர் அடையாளம் காட்டியிருக்கிறார். அவருடைய அரசியல் முதிர்ச்சி சமூகத்துக்குப் பயன்படவேண்டும். எந்த தலைவரும் எந்த அமைப்பும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.எல்லா விமர்சனங்களையும் யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல், என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று கவனித்து, பரிசீலித்து, தம்மை தாமே செதுக்கிக் கொள்ளும் அணுகுமுறை உள்ள தலைவர்களே, இயக்கங்களே வரலாற்றை மாற்றுவார்கள்.

 மாற்று அரசியல் என்ற மாபெரும் பணியில் ஈடுபட நமக்கு, அறிஞர் அயோத்திதாசரின் அணுகுமுறை தேவைப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும், அகம் - புறம், உள்ளே - வெளியே என்று இரு நிலைகள் இருக்கின்றன. அகத்துக்கு அவர் முன்வைத்தது, அன்பையும் மனித சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்ட பவுத்தத்தை. புறத்துக்கு அவர் முன்வைத்தது, கல்வி என்ற அறிவாயுதத்தை. பின்னாளில் இதே அணுகுமுறையைத்தான், அண்ணல் அம்பேத்காரும் கைக்கொண்டார் என்பதை நாம் கவனிக்கவேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம், அரசியல் பணிகளில் காட்டும் அதே முனைப்பை, கல்விப் பணிகளிலும் காட்டவேண்டும் என்று, இங்கே கேட்டுக் கொள்கிறேன். ஊடகங்கள், செய்தித்தாட்கள் முதலியவற்றில் எல்லாம் பொதுவாகவும் முக்கிய பொறுப்புகளிலும் தலித் இளைஞர்களின் இடம் இன்று மிகக் குறைவாக இருக்கிறது. இது மாறுவதற்கு நாம் உழைக்கவேண்டும். கல்வி ஒன்றே விடுதலைக்கான வழி. அறம் இல்லாத கல்வியால் பயன் இல்லை. அறம் இல்லாத ஊடகங்கள், கட்சிகள் எல்லாம் என்ன செய்யும் என்பதை கடந்த தேர்தலில் பார்த்தோம். அதே சமயம் அறிவின் துணை இல்லாமல் அறம் செழிக்காது. எனவே தனி வாழ்வில் அறம், பொது வாழ்வில் அறம் இரண்டும் செழிக்கச் செய்வதே மெய்யான மாற்று அரசியல். அதற்கு பெருந்திரளான மக்களைத் தயார் செய்யும் ஆயுதமே கல்வி.

கல்விதான் நமக்கு அம்பேத்காரை அளித்தது; அயோத்திதாசரை அளித்தது; கல்விதான் திருமாவை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு விடுதலைச் சிறுத்தையும் ஒரு திருமாவாக, கல்வியே நம் தேவை. எனவே இந்த விருதுடன் எனக்கு அளிக்கப்படும் தொகையினை தலித் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு அளிக்க விரும்புகிறேன். முதல் கட்டமாக அயோத்தி தாசரின் நண்பர் ஆல்காட், 1894ல் தலித் சிறுவர்களுக்காக தொடங்கி, இன்றளவும் நடைபெற்று வருகிற பெசண்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளி மாணவர்களுக்கு இது பயன்படுத்தப்படும் என்பதை, மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதில் எனக்கு இருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி என்பது, ஒரே மேடையில், என் 40 வருட கால நண்பர்கள் தோழர் சந்துரு, தோழியர் வசந்தி தேவி ஆக நாங்கள் மூவரும் சேர்ந்து விருதுகளைப் பெறுவதாகும். இந்த மகிழ்ச்சியை சாத்தியப்படுத்திய, விடுதலை சிறுத்தைகள் இயக்கத்துக்கும் தலைவர் தோழர் திருமாவுக்கும், என் நன்றி. எல்லாருக்கும் என் நன்றி. வணக்கம்

1 comment:

  1. நல்லதோர் உரைதான். ஆமாம். அவர் இப்போ எந்த கட்சியில் இருக்கிறார்?

    ReplyDelete