Thursday, July 28, 2016

போராளிகள் யாரெல்லாம் இப்போ வாரீங்க?



தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் பழங்குடி இனப்பெண்கள் மீது மீண்டும் ஒரு வாச்சாத்தி பாணி தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக அரசு வழக்கம் போல பிரச்சினையை மூடி மறைக்கவும் குற்றவாளிகளை பாதுகாக்கவுமே முயல்கிறது. கீழேயுள்ள தீக்கதிர் பத்திரிக்கைச் செய்தி உண்மை விபரங்களை எடுத்து வைக்கிறது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. பல்வேறு முற்போக்கு அமைப்புக்களும் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றன. எங்களது மதுரைக் கோட்டச் சங்கம் வழக்குச் செலவுகளுக்காக ரூபாய் இருபதாயிரம் அளித்துள்ளது.

நடந்திருப்பது மிகப் பெரிய அயோக்கியத்தனம். வனத்தை காக்க வேண்டியவர்கள், பெண்கள் மீது அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர்.

சுவாதி கொலையுண்ட சமயத்தில் கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழகத்தின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த போதே

“சுவாதிக்காக மாதர் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று போராளிகள் வேடம் பூண்ட பலரும் பொங்கி எழுந்தார்கள்.

அந்த அத்தனை போராளிகளையும் கேட்கிறேன். பாதிக்கப்பட்ட பழங்குடி இனப் பெண்களுக்காக நீங்கள் யாரெல்லாம் கண்ணீர் சிந்துகிறீர்கள்? யாரெல்லாம் போராட்டக் களத்திற்கு வரப் போகிறீர்கள்? இல்லை குறைந்த பட்சம் முக நூலிலாவது பொங்கி எழப் போகிறீர்கள்?

இவை எதையும் செய்ய தயாராக இல்லையென்றால்…..

நான் என்ன சொல்வது?

உங்களுக்கே தெரியும், நீங்கள் ஒரு போலி என்று.

இப்போது செய்தியைப் படியுங்கள்.


நன்றி தீக்கதிர் 28.07.2016


பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்த உ.வாசுகி, என்.அமிர்தம், சு.வெண்மணி, கே.ராஜப்பன், டி.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள்.

பழங்குடிப் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் வனத்துறையினரை கைது செய்க! தேனியில் உ.வாசுகி பேட்டி


தேனி, ஜூலை 27 -
சுருளி மலைப்பகுதிகளில் மலைப்பொருட்கள் சேகரித்து வந்த பழங்குடி பெண்களிடம் சோதனை என்ற பெயரில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும். காவல்துறையினர் இந்த விசயத்தில் மெத்தனம் காட்டக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவருமான உ.வாசுகி வலியுறுத்தியுள்ளார்.

வனத்துறையினரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடிப் பெண்களை கடமலைக்குண்டில் புதனன்று நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் உ.வாசுகி கூறியதாவது:வன உரிமை சட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு வனப்பகுதிகளில் சென்று மலைப்பொருட்களை சேகரித்து வர அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்குட்பட்ட மலைப்பகுதிகளில் தேன், நன்னாரி வேர், கிழங்கு வகைகளை சேகரித்துவிட்டு திரும்பும் போது வனத்துறையினர் சாலையில் பழங்குடி பெண்களையும், ஆண்களையும் நிறுத்தி சோதனை போட்டுள்ளனர். அப்போது பெண்களின் புடவையை உருவியும், ஆண்களின் உள்ளாடை தவிர மற்றவற்றை களைத்தும் நிறுத்தியுள்ளனர். 

வேறு ஏதும் ஒளித்துவைத்துள்ளீர்களா எனக் கூறி பெண்களை தொடக்கூடாத இடங்களில் கையை விட்டு தேடியுள்ளனர். 13 வயதுசிறுமியின் கால் சட்டையை உருவி வக்கிரமான செயலில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கைச்செலவிற்கு வைத்திருந்த பணத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டதால் இரவோடு இரவாக 40 கிலோ மீட்டர் வரை நடந்தே வந்துள்ளனர். அதோடு பாதிக்கப்பட்ட பெண்களின் கணவர்களை வனத்துறையினர் கடுமையாக தாக்கி பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். 

வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு 

பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த திங்களன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி மனு அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ்  உடனடியாக வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து துணை காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை விசாரணைக்கு நியமிக்க வேண்டும். இச்சம்பவத்தில் 13 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 

மிரட்டல் தொனியில்    ஆர்.டி.ஓ விசாரணை 

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு மாணவியர் விடுதியில் சாப்பாடு கொடுப்பதாக கூறி அழைத்து சென்ற அதிகாரிகள் அவர்களை உள்ளே வைத்து கதவை மூடிவிட்டனர். அப்போதுதான் பெரியகுளம் கோட்டாட்சியர் விசாரணை என்று அவர்களுக்கு தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மலைவாழ் பெண்கள் நடந்த சம்பவத்தை தெளிவாக கூறிய பின்பும் பலமுறை மிரட்டல் தொனியில், உண்மையை்ச் சொல்லுங்கள்; அப்போதுதான் உங்கள் கணவர்களை சிறையிலிருந்து வெளியே விடுவோம் என்று அவர்களிடம் பேசியிருக்கிறார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாத நிலையில் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டது சட்டரீதியான பிழையாகும். தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா? அல்லது காவல்துறை, வனத்துறையினரின் ஆட்சி நடக்கிறதா? என்பது தெரியவில்லை. இதற்கெல்லாம் தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டும். 

ஆர்ப்பாட்டம்

மலைவாழ் மக்களிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்ட வனத்துறையினரை இடைநீக்கம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் படியும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க    வேண்டும். பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில்  அவர்கள் சேகரித்து வரும் மலைப்பொருட்களுக்கு சந்தை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து வருகிற 29ம் தேதி கடமலைக்குண்டிலும், வருகிற 4ம் தேதி தேனியிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கடமலைக்குண்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவரும், பெரியகுளம் முன்னாள் எம்எல்ஏ-வுமான ஏ.லாசர், மாதர் சங்கத்தின் மாநில தலைவர்களில் ஒருவருமான என்.அமிர்தம் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும். பழங்குடி மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர் சங்கமும் பாதுகாக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் தேனி மாவட்டச்செயலாளர் டி.வெங்கடேசன், கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாதர் சங்க மாநில துணைத்தலைவர் என்.அமிர்தம், மாவட்ட நிர்வாகிகள் சு.வெண்மணி, எம்.விஜயா, விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.சுருளி நாதன், மாவட்ட தலைவர் டி.கண்ணன், விதொச மாவட்டச்செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தயாளன், கடமலை -மயிலை ஒன்றிய செயலாளர் பி.மணவாளன், தேனி தாலுகா செயலாளர் சி.சடையாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். (ந,நி,)

1 comment:

  1. தமிழகத்தில் சொந்த ஊரில் மலைவாழ் பெண்கள் மாதிரி அந்த பகுதிக்கு சொந்தமான பெண்கள் போலீஸு போன்ற அதிகாரவர்க்கத்தால் பயங்கர கொடுமைகளுக்குள்ளாகும் போது, தமிழ் போராளிகள் என்று அழைக்கபடுகிறவர்கள் அதை கண்டு கொள்ளமாட்டார்கள். நீதி, மனிதஉரிமைகள், ஐக்கியநாடுகள் நீதி விசாரணை என்று வேறு ஒரு நாட்டுக்காக தூள் கிளப்புவார்கள்.

    ReplyDelete