Monday, December 4, 2017

மகிழ்ச்சியாய்...மன நிறைவாய்...இனிய நாளாய்

இன்றைய நாள் இனிமையான நாளாய் அமைந்திருந்தது.



ரத்த தானம் செய்வதற்காக இன்று சி.எம்.சி மருத்துவமனை சென்றிருந்தேன். திங்கட்கிழமை ஆதலால் கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஸ்க்ரீனிங்கிற்கு அழைக்கவே நேரமானது. காத்திருந்த நேரத்தில் பக்கத்தில் பார்த்தேன். இரண்டு கிராமத்து இளைஞர்கள் பதட்டமாக அமர்ந்து கொண்டிருந்தார்கள். முதல் முறையாக ரத்த தானம் செய்ய வந்துள்ளார்கள் என்பது புரிந்தது. அவர்களோடு பேச்சு கொடுத்தேன்.

ஆம். அவர்கள் முதல் முறையாக ரத்த தானம் செய்ய வந்தவர்கள்தான். ஸ்ரீபெரும்புதூர் பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அக்கா ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஒவ்வொரு முறையும் ஐந்து பாட்டில் ரத்தம் தேவைப்படும் என்று சொல்லியுள்ளார்கள்.

"எங்களுக்கு ரொம்பவே பயமாயிடுச்சு. கிராமத்திலேந்து ஆட்கள் வந்ததால் அவங்க குடுத்துட்டாங்க. நாங்க எஸ்கேப் ஆயிட்டோம். இன்னிக்கு வேற ஆளுங்க கிடைக்காததால் நாங்களே வந்துட்டோம். பயமாத்தான் இருக்கு"

இருபத்தி ஐந்து வருட ரத்த தான அனுபவத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டு தைரியம் அளித்து முடிப்பதற்குள் எங்களுக்கு அழைப்பு வந்து விட்டது.

ஸ்கீரினிங் முடிந்த பின்பும் பேசிக் கொண்டிருந்தேன். "வலியெல்லாம் ஒன்றும் இருக்காது. பத்து நிமிடத்தில் முடிந்து விடும். இன்று எடுக்கும் ரத்தம் நாளையே உடலில் புதிதாக சேர்ந்து விடும்"

என்று சொன்னவுடன் அவர்களில் மூத்தவர் சொன்னார்

"இறைக்கிற கிணறுதான்  ஊறும். அப்படித்தான சார்!"

அவர் ஒரு விவசாயி.

மூன்று பேரும் ஒரே நேரத்தில் ரத்த தானத்தை முடித்து விட்டு மருத்துவமனை கொடுத்த சமூசா, பழ ரசத்தை சாப்பிடுகிற போது

அட, இவ்வளவுதானா சார்? ரொம்பவே பயந்துட்டோம். வேற யாருக்காவது வேணும்னாலும் நிச்சயமா கொடுப்போம்" 

என்று கை குலுக்கி விட்டு புறப்பட்டார்கள்.

அந்த கைகுலுக்கலில் உழைப்பாளியின் உறுதியும் நம்பிக்கையும் இணைந்தே இருந்தது.

இந்த நாள் மகிழ்ச்சியாய், மன நிறைவாய், இனியதாகவே அமைந்து விட்டது. 

பி.கு : எனக்கு நானே நிர்ணயித்துக் கொண்ட 60 முறை என்ற இலக்கை அடைய இன்னும் ஒரே ஒரு முறைதான் உள்ளது. அதையும் தாண்டி செல்ல முடிந்தால் அது கூடுதல் மகிழ்ச்சி.

9 comments:

  1. Congrats com.wishes to achieve your goal and beyond that also.

    ReplyDelete
  2. புனிதப்பணி தொடரட்டும்

    ReplyDelete
  3. நல்ல சேவை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துகள் தோழர்.. ஆரோக்யம் வளரட்டும். செழிக்கட்டும்

    ReplyDelete
  5. My thanks to Com. Raman who donated blood for my father who underwent an open heart surgery today at CMC. When I approached com. Raman seeking help, he volunteered to donate blood.... A real leader leads by himself standing as an example for others. He is a real leader and once again I thank him for his timely help...Nandri Thozha... Kavitha kumaar.

    ReplyDelete
    Replies
    1. Comrade, It is not such a big thing. It is the tradition of AIIEA.

      Delete