Friday, December 15, 2017

எங்கள் பிதாமகருக்கு இன்று . . .

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிறுவனத்தலைவர்களில் ஒருவரான தோழர் சந்திர சேகர போஸ் அவர்களின் 96 வது பிறந்த நாள் இன்று.



தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி முதலாளிகள் ஊழியர்களை கொத்தடிமைகள் போல நடத்தி உழைப்புச் சுரண்டல் செய்த காலத்தில் ஊழியர்களை அணி திரட்டி அவர்களைக் கொண்டு சங்கம் அமைத்ததிலும் அப்படி கம்பெனிவாரியாக, மாநிலவாரியாக அமைக்கப்பட்ட சங்கங்களை அகில இந்திய அளவில் ஒரே நிறுவனமாக உருவாக்கிய முன்னணித்தலைவர் அவர். 

அவர் பணியாற்றிய தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்க மறுத்தது. தொழிலாளர் தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடுக்கப் படுகிறது. நிஜமான கணக்கு ஒன்றும் அரசுக்கு கட்ட வேண்டிய, பாலிசிதாரரை ஏமாற்ற பொய்யாக ஒரு நஷ்டக்கணக்கும் வைத்திருந்த நிர்வாகம், ட்ரிப்யூனலில் அந்த பொய்க்கணக்கைக் காண்பித்தது.

தோழர் சந்திரசேகர போஸ், மிகவும் கஷ்டப்பட்டு உண்மைக் கணக்கைக் கண்டுபிடித்து அதனை ட்ரிப்யூனலில் ஒப்படைக்கிறார். வேறு வழியில்லாமல் ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்க உத்தரவிடுகிற தீர்ப்பாணையம், கம்பெனியின் ரகசியத்தை வெளியிட்டதால் தோழர் சந்திரசேகர போஸ் அவர்களை பணி நீக்கம் செய்யவும் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை முறியடிக்கப்பட்டது  

 மெட்ரோபாலிடன் என்ற நிறுவனம் அங்கே சங்கம் அமைக்கப்பட்ட காரணத்தால் ஐம்பத்தி ஐந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தோழர்கள் சந்திரசேகர போஸ், சரோஜ் சவுத்ரி, சுனில் மைத்ரா ஆகிய தோழர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்ய வைக்கிறது. அந்த வழக்கு பின்பு தள்ளுபடி செய்யப்பட்டாலும் பணி நீக்கம் செய்யப்பட்ட  அந்த ஐம்பத்து ஐந்து ஊழியர்கள் மீண்டும் பணி கிடைக்க இன்சூரன்ஸ் தேசியமயமாகி எல்.ஐ.சி உருவாகும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் பணிக்காலம் கணக்கில் கொள்ளப்படவில்லை. 

இன்று இன்சூரன்ஸ் ஊழியர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் அடித்தளமாய் அமைந்தது  மெட்ரோபாலிடன் ஊழியர்களின் தியாகமே என்பதை தோழர் சந்திரசேகர போஸ் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக 1955 முதல் 1963 வரையிலும் பின்பு தலைவராக 1994 வரை செயலாற்றிய தோழர் போஸ் இப்போதும் அகில இந்திய மாநாடுகளில் பங்கேற்று வழிகாட்டுகிறார். அவரின் பங்கேற்பே உற்சாகமும் எழுச்சியும் தருகிறது. 

ஆயுள் காப்பீட்டுத்துறை தேசியமயமானதும் அதனை வரவேற்று அவர் அனுப்பிய தந்தி இன்னும் இந்திய நாடாளுமன்ற ஆவணமாக திகழ்கிறது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர் வாளாக திகழும் "இன்சூரன்ஸ் வொர்க்கர்" இதழின் முதல் ஆசிரியர் அவர்தான். அப்பணியை நாற்பதாண்டுகளுக்கு மேல் செம்மையாக செய்து வந்தார்.

என்னுடைய கடவுள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்று ஒரு தருணத்தில் அவர் எழுதியது இன்றும் உணர்ச்சியூட்டுகிறது.

"வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்" 

என்பதை மனதால் உணர்ந்து

எங்களின் முன்னோடியே, நீடுழி வாழ்க, 
என்றும் எங்களை வழி நடத்துக

என்று வணங்குகிறேன்.

பின் குறிப்பு : நேற்று எழுதியிருக்க வேண்டிய பதிவு இது. பாதி எழுதுகையில் கணிணி மக்கர் செய்து விட்டது. ஆகவே வேறு வழியில்லாமல் இன்றுதான் இப்பதிவை நிறைவு செய்ய வேண்டியதாயிற்று. 

Belated Wishes Comrade

பிகு 2 முதல் படம் 1990 ல் எங்கள் வேலூர் கோட்டசங்க மாநாட்டில் பேசிய போது எடுத்த படம்.

இரண்டாவது படம் புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு பங்கேற்ற அனைவருக்கும் உரமூட்டிக் கொண்டிருந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படம்.

 

 

3 comments:

  1. GOOD. THANKS FOR PUBLISHING THIS IN DIGITAL MEDIA.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. When you are sharing some fact I could understand. Why the BJP and allied fringes are not considering. This is not only the problem of LIC employees but also the policy holders are affected severely. Why these policy holders agitate against policy makers.

    ReplyDelete