Saturday, December 23, 2017

நீதி தேவனால் மயக்கமா?



நீண்ட நாட்களாக தள்ளிப்போடப்பட்டு வந்த அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு நேற்று முன் தினம் வெளியாகி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையாகி விட்டனர்.

நூற்றி ஐந்து பக்க தீர்ப்பை படிப்பதற்கான கால அவகாசம் என்னவோ இதுவரை கிட்டவில்லை. ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பின் காரணமாக வேறு ஒரு ஆவணத்தை படித்து அதற்கான பதிலை தயாரிப்பது என்பது வலைப்பக்கத்தில் எழுதுவதை விட முன்னுரிமை அளிக்க வேண்டிய பணி என்பதால் இன்னும் தீர்ப்பை படிக்கவில்லை.

மைக்கேல் குன்ஹா தீர்ப்பை படித்து விட்டே வரவேற்றேன்
குமாரசாமி தீர்ப்பை படித்து விட்டே கண்டித்தேன்.

ஆகவே இப்போதும் தீர்ப்பை முழுமையாக படிக்காமல் எதுவும் எழுத மாட்டேன். வெண்மணி பயணத்தால் அது தாமதமாவதற்கும் வாய்ப்புண்டு.

ஆனால் வேறு ஒரு விஷயம் பற்றி எழுத வேண்டிய அவசியம் உள்ளது.

தீர்ப்பு பற்றி கருத்து சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது சமூக வலைத்தளங்களில் உடன் பிறப்புக்கள் பலரும் வன்மத்தோடு சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சரியான பதில் சொல்ல முடியாத சூழல் வருகையில் ஜாதியை தாக்குதல் ஆயுதமாகவோ அல்லது தற்காப்பு கேடயமாகவோ பயன்படுத்துவது என்பதுதான் கலைஞரின் பாணி.  இன்று கலைஞரால் செயல்பட முடியாத சூழலில் அவரில்லாத குறையை அவரது உடன்பிறப்புக்கள் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து.  பல நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அலைக்கற்றை ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததே ஊழல் நடந்ததற்கான சான்றாக  மார்க்சிஸ்ட் கட்சி பார்க்கிறது. அப்படி இருக்கையில் மேல்முறையீடு செய்யச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள் என்று சொல்பவர்களால் மேல்முறையீட்டிலும் நாங்கள்  வெற்றி பெறுவோம் என்று  சொல்ல முடியாத தயக்கத்திற்கு காரணம் என்ன? அதை விடுத்து மார்க்சிஸ்ட் கட்சி மீது சீறிப்பாய்வதன் நோக்கம் என்ன?

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் ஒரு பைத்தியக்காரத்தனான புரிதல் இருக்கிறது.

திமுக வை விமர்சித்தால் நீ அதிமுக,
அதிமுகவை விமர்சித்தால் நீ திமுக,
மோடியை எதிர்த்தால் ராகுலுக்கு ஆதரவு,
காங்கிரஸைக் கண்டித்தால்  மோடிக்கு ஆதரவு.

பித்தேறிப் போன இந்த மன நிலையைத்தான் உடன்பிறப்புக்களிடம் பார்க்க முடிந்தது. தலைவர் பாணியில் ஜாதியை வேறு (சட்டசபைத் தேர்தலில் வைகோ 1500 கோடி ரூபாய் பணம் வாங்கினார் என்று செய்த பொய்ப்பிரச்சாரம் போல அது அபத்தம் என்று அவர்களுக்கே தெரிந்தும் கூட) இழுத்து, வசை பாடிக்கொண்டிருக்கிறார்கள்.  அந்த காலத்தில் உயிர்மை தலையங்கத்தில் கனிமொழியை கடுமையாக கண்டித்த மனுஷ்யபுத்திரனைக் கூட அப்படி வசைபாடியிருப்பார்களா என்பது சந்தேகமே! பாஜக வின் அறிக்கையோ என்று சுப.வீர பாண்டியன் வேறு ஒத்து ஊதுகிறார்.

உடன்பிறப்புக்களிடம் ஒரு கேள்விதான் கேட்க வேண்டியுள்ளது.

பாஜக வுடன் கூட்டணி வைத்தது அந்தக்காலமாகவே இருக்கட்டும்.

குஜராத், ஹிமாச்சல் வெற்றிக்கு எடப்பாடியையும் முந்திக் கொண்டு மோடிக்கு வாழ்த்து சொன்னது கூட அரசியல் நாகரீகம் என்று சொல்லலாம். வீடு தேடி வந்த விருந்தாளியான மோடியை வரவேற்றது கூட   விருந்தோம்பல் என்று சொல்லலாம்.

ஆனால் பாஜக ஒன்றும் தீண்டப்படாத கட்சி என்று துரைமுருகன் பேசியதையும் அதற்கு எந்த எதிர்வினையும் புரியாமல் செயல் தலைவர் மௌனம் காத்ததை அவ்வளவு சுலபமாக விட்டு விட முடியுமா?

சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கணிசமான உறுப்பினர் எண்ணிக்கை இருப்பினும் பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக காத்திரமான போராட்டங்களை  திமுக நடத்தியுள்ளதா? ஜாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததுண்டா? உடுமலை சங்கர் வழக்கின் தீர்ப்பு குறித்து கூட இன்னும் வாய் திறக்கவில்லையே!

குமாரசாமி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்,
சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்

என்றெல்லாம் உடன் குரல் கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜாதியச்சாயம் பூசுவது, பாஜகவின் குரல் என்றெல்லாம் சொல்வது எல்லாம் கேவலமான செயலாகத் தெரியவில்லையா?

நீதி தேவன் மயக்கம் என்பது அறிஞர் அண்ணா சொன்னது.
நீதி தேவன் அளித்த தீர்ப்பின் மயக்கத்தை மேல்முறையீடு குலைத்திடும் என்ற அச்சத்தைத்தான் உ.பி க்கள் வெளிப்படுத்துகிறார்கள் பாவம்!

ஒன்று மட்டும் சொல்லி முடிக்க எண்ணுகிறேன்.

கண்கள் பனித்து, இதயம் இனித்து குடும்ப இணை விழா நடவாமல் இருந்திருந்தால் இத்தீர்ப்பு பற்றி  ஒருவர் மிகக் கடுமையாக பேசியிருக்கும் வாய்ப்புண்டு.

ஆ,ம்.

அவர்தான் கருணை அடிப்படையிலான பணி நியமனக் கொள்கை மூலம் அமைச்சரான தயாநிதி மாறன்.

அலைக்கற்றை பற்றி அவரை விடவா நமக்கெல்லாம் உண்மைகள் தெரியும்?????










1 comment:

  1. Some big industrial houses are involved in 2G scam not only kanimozhi and raja so to acquit
    them , everybody were acquitted . So it is not surprising a scam which has overthrown
    Cong govt is coolly ignored by the judge. Now as CPI(m) HAS REQUSTED THE GOVT SHOULD
    APPEAL AGAINST THE VERDICT AND CONSPIRATORS ARE PUNISHED. What about money transfer of
    rs 200 crores to KALAIGNAR tv. A bribe converted as loan by the defence lawyers and this
    has been accepted by the judge. This verdict is like that of Kumarasamy's .

    ReplyDelete