Friday, December 15, 2017

மைசூர் பா வால் மாட்டிக் கொண்டவன்




எல்.ஐ.சி ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு ப.இசக்கிராஜன் அவர்கள் முகநூலில் பகிர்ந்து கொண்ட ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.






ஓர் உண்மைச்சம்பவம்.
###################

நான் எல்ஐசியில்  இணைந்தபோது முதலில்  பணியைத்துவக்கிய ஊர்
ஆந்திரமாநிலம் சித்தூர்.  செப்டம்பர் 1974 முதல்  பெப்ருவரி 1980 முடிய.

அங்கு தமிழ் இதழ்கள்  "எர்ரையா" என்ற  திமுக காரரின் கடையில்
கிடைத்து வந்தன. தமிழ் நண்பர்கள்  ஒவ்வொருவரும்  ஆளுக்கு ஒரு இதழ் வாங்கி  அநேகமாக எல்லா இதழ்களையும்  படிப்போம்.


அப்போது குமுதம் இதழில்  திருச்செந்தூர் ஊரில்  நடைபெற்ற ஒரு திருட்டை  கண்டுபிடித்த வினோதம்  பற்றிய கட்டுரை வந்தது.

நாங்களும் அந்த  கட்டுரையைப்படித்து   ரசித்தோம். எனக்கே தெரியாது
பின்னொருநாளில் நானும்  அந்த ஊருக்கு பணி  மாறுதல் பெற்று
செல்வேன் என்று.


சித்தூரிலிருந்து   காரைக்குடிக்கு  மாற்றலாகிச்சென்று  பின்னர் செப்டம்பர் 1981 ல் திருச்செந்தூருக்கு   மாறுதல் பெற்று சென்றேன்.  குமுதம் வார இதழில்  பல ஆண்டுகளுக்கு முன்  படித்த கட்டுரையை
நினைவில் வைத்து  அதைப்பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன்.  திரு யக்ஞ சுப்பிரமணியன்  என்று எங்கள் கிளையில்  ஒரு வளர்ச்சி அலுவலர்.

1970 களில் அந்த ஊரில்   அம்பாசிட்டர் கார்  வைத்திருந்த  இரண்டு மூன்று நபர்களில்  அவரும் ஒருவர். அவரது வீட்டில் தான் திருட்டு நடைபெற்றிருக்கிறது.

அவரே நடந்த வற்றை  எனக்கு விளக்கமாக  விவரித்தார்.  பாளையங்கோட்டை   எல்ஐசி அலுவலகத்தில்  பணி புரிந்த ஊழியர்கள்
பலர் திரு அப்புசாமி ஐயர்  அவர்களின் முன் முயற்சியால்  இப்போதைய தியாகராயநகர்  பகுதியின் மையத்தில்  மொத்தமாக இடம் வாங்கி  வீட்டு மனைகளாக பிரித்து  தனித்தனியாக வீடுகள்  கட்டத் தொடங்குகின்றனர்.

இந்த இடத்தில்   திருச்செந்தூர் கிளை   வளர்ச்சி அலுவலர்  திரு யக்ஞசுப்பிரமணியன்  அவர்களும்  மனை வாங்கி வீடு கட்டி   புதுமனை புகுவிழாவிற்கு ஏற்பாடு செய்கிறார்.

அந்த விழாவில் விருந்தினர்களுக்கு  வழங்குவதற்காக இனிப்பு பதார்த்தங்களை கடையில் வாங்காமல்  வீட்டிலேயே தயாரிக்க   முடிவெடுக்கின்றனர். அதன்படி  மைசூர்பா வும் மிக்சரும்  திருச்செந்தூர் வீட்டிலேயே தயாராகிறது. இவற்றை பாளையங்கோட்டையில் உள்ள
எல்ஐசி காலனி புது வீட்டிற்கு  எடுத்துச் செல்கின்றனர். வீட்டிலேயே ஆறு நபர்கள் இருந்த காரணத்தால்  கார் பயணத்திற்கு ஓட்டுனரை வேண்டாம் என சொல்லியிருக்கிறார்கள்.


புதுமனை புகு விழாவை சிறப்பாக நடத்திவிட்டு மறுநாள் திருச்செந்தூர்
திரும்பி வருகிறார்கள். வீட்டிற்கு வந்தவர்களுக்கு  பேரதிர்ச்சி காத்திருக்கிறது.  வீடு தாளிடப்படாமல்  இருந்திருக்கிறது. நாம் தாள் தாளிடாமல்  சென்று விட்டோமோ என்ற ஐயத்துடன் சென்றவர்களுக்கு
மேலும் அதிர்ச்சி. வீட்டில் திருடு போயிருந்ததை  உணர்ந்தார்கள்.

அணிந்தது போக வீட்டில் விட்டுச்சென்ற  தங்க நகைகளும் எல்லா வெள்ளி சாமான்களும்  திருட்டு போயிருந்தன. காவல் நிலையத்தில்
புகார் செய்கிறார்கள். 


காவலர்கள் இவர்களை  விசாரிக்கிறார்கள்.  எதிரிகள் யார்,  சந்தேகப்படுவது யாரை, என பல கோணங்களிலும்  கேள்வி கேட்கிறார்கள். எந்த வொரு பிடியும்  கிடைக்காமல் தவித்தனர். மறுநாள்
கூடுதல் விசாரணைக்காக காவல் நிலைய ஆய்வாளர்  இவர்களது இல்லத்திற்கு வருகிறார். வீட்டின் இல்லத்தரசி  வந்தவரை வரவேற்று
வீட்டில் தயாரித்த நெய்மணக்கும்  மைசூர் பா,  தேங்காய் எண்ணையில்
தயாரித்த மிக்சரோடு சுவையான ஃபில்டர் காபியும் வழங்கு கிறார்.

ஆய்வாளர் அவற்றை  ருசித்து சாப்பிடுகிறார். பல கேள்விகள் கேட்கிறார்.
யார் மீதும் சந்தேகம்  இல்லை என்கிறார்கள். அவரும் துருவித்துருவி
விசாரிக்கிறார்.


அவர்கள் வீட்டில்  கார் ஓட்டுனராக பணியாற்றுபவரைப்பற்றி  விவரம் கேட்கிறார்.கடைசியாக பார்த்தது  எப்போது என்றும் கேட்கிறார்.
பாளையங்கோட்டை  சென்ற நாளில் மதியம்  பார்த்ததாக கூறுகிறார்கள்.
அடுத்து பார்த்தது எப்போது என்ற கேள்விக்கு புதுமனை புகுவிழா முடிந்து
திரும்பி வரும்போது S.K. பெட்ரோல் பங்க் அருகில் பார்த்த தாகவும்
ஆனால் அவர்  இவர்களது காரை பார்த்தும்  பார்க்காதது போல் விரைந்து போனதையும் கூறுகின்றனர்.


காவல் நிலைய ஆய்வாளர்  விசாரணைக்காக  கார் ஓட்டுனர் வீட்டிற்கு
விசாரிக்க செல்கிறார். வீட்டில் ஓட்டுனர் இல்லை. அவரின் மனைவி மட்டும் இருந்திருக்கிறார். வீட்டிற்கு விசாரிக்க வந்த ஆய்வாளருக்கு
மைசூர்பா வும் மிக்சரும் காபியும் கொடுக்கிறார். இனிப்பும் காரமும்
திருடு போன வீட்டில் தரப்பட்ட பண்டத்தின் தரத்தில் இருப்பதை  ஆய்வாளர் உணர்கிறார். ருசியை வைத்து  இவை கண்டிப்பாக  கடையில் வாங்கியதாக இருக்கமுடியாது என்று  நினைத்து பண்டம்  உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்ததா என்று கேட்கிறார்.


கார் ஓட்டுனரின் மனைவி  அவை வீட்டில் தயாரித்ததல்ல  என்றும் கணவர் கடையில்  வாங்கி வந்தது எனவும்  கூறுகிறார்.  பேசிக்கொண்டிருக்கும்போதே  ஓட்டுனர் வீட்டிற்கு வருகிறார்.  ஆய்வாளர்
இப்படி ருசியான  மைசூர் பாவும் மிக்சரும் எந்த கடையில் வாங்கியது
என நட்பாக விசாரிக்கிறார். ஓட்டுனர் ஒரு கடையின் பெயரைச் சொல்கிறார். தனது வீட்டிற்கும் இவற்றை  வாங்க வேண்டும் எனக்கூறி
அந்த கடைக்கு கூட்டிச்செல்லும்படி கேட்டுக்கொள்கிறார்.


ஒரு மிட்டாய்கடைக்கு இருவரும் செல்கிறார்கள்.அங்கு வைக்கப்பட்டிருந்த  மைசூர் பாவையும்  மிக்சரையும் வாங்கி  சாப்பிட்டுப் பார்க்கிறார். தரமும் ருசியும்  ஓட்டுனர் வீட்டில் சாப்பிட்ட  பண்டத்தை விட குறைச்சல்  என்பதை உணர்கிறார். கடைக்காரரிடம்  ஓட்டுனருக்கு
கொடுத்த பண்டத்தின்  ருசியில் உள்ளவற்றை  கொடுக்கும்படி கேட்கிறார்.

கடைக்காரர் தனது கடையில் எப்போதுமே  ஒரே தரத்தில் தான் உண்டு
எனவும் வேறு கிடையாது  என்றும் கூறுகிறார். இந்த கடையில்
சமீபத்தில் ஓட்டுனர்  பண்டம் ஏதும் வாங்கவில்லை  என்ற தகவலையும்
பகிரங்கமாக கூறுகிறார்.


உடனே ஆய்வாளர் ஓட்டுனரை ஓங்கி ஒரு அறை அறைந்து  காவல் நிலையம்  அழைத்துச்செல்கிறார். விசாரிக்கும் முறையில் விசாரித்ததும்
ஓட்டுனர் உடனே  திருடிய உண்மையை போட்டுடைக்கிறார். வீட்டின் அமைப்பு பற்றி நன்கு அறிந்த ஓட்டுனர் புதுவீட்டின் பால்காய்ச்சு விழாவிற்கு வீட்டுக்காரர்கள் குடும்பத்தோடு  பாளையங்கோட்டைக்கு
சென்ற அன்றைக்கு இரவு  சுவரேறிக்குதித்து வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் பொறுமையாக  பூட்டை உடைத்து  தங்க நகைகளையும் வெள்ளி பாத்திரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு வெளியேற முயற்சித்திருக்கிறார்.


அந்த வீடு இருந்த பள்ளத்தெரு  எப்போதும் ஆள் நடமாட்டம்  இருக்கக்கூடிய தெரு.  முருகன் கோவிலுக்கு  செல்லும் அர்ச்சகர்களின்  நடமாட்டம் அன்று  அதிகாலையிலே  தொடங்கிவிட்டதாம்.  எனவே அவனால் வெளியே வர இயலாமல்  போயிருக்கிறது.   பகல் முழுதும் வீட்டின் உள்ளேயே உட்கார்ந்திருக்க  வேண்டிய கட்டாயம். சாப்பிட ஒன்றும் இல்லையாம். பசியைப்போக்க பாத்திரங்களை உருட்டி  பார்த்திருக்கிறான்.  வீட்டில் தயாரித்த  மைசூர்பாவையும்  மிக்சரையும்
உள்ளூர் விநியோகத்திற்காக  வீட்டுக்காரர்கள் கொஞ்சம் விட்டுச் சென்றதால்  அவற்றை பார்த்திருக்கிறான்.  மைசூர் பா வையும் மிக்சரையும் தின்றே  பகல் முழுதும்  பசியை தணித்திருக்கிறான்.  திருடிய பொருட்களோடு  ஆள் நடமாட்டமில்லாத  நள்ளிரவில் வீட்டை விட்டு
வெளியேறும்போது குழந்தைகள் சாப்பிட என்று  கொஞ்சம் மைசூர்பாவையும் மிக்சரையும் பொட்டலம் போட்டு எடுத்துச் சென்றிருக்கிறான்.


தனது மனைவியிடம்   திருடியதை மறைத்து  கடையில் வாங்கிய
இனிப்பும் காரமும் என்று  கூறியிருக்கிறான்.  இந்த உண்மை தெரியாத
மனைவி தான் அவற்றை  ஆய்வாளருக்கு கொடுத்து   திருட்டு கணவனை
மாட்டிவிட்டிருக்கிறார்.  தங்க நகைகளும்  வெள்ளி பாத்திரங்களும்
கைப்பற்றப்பட்டு திரு யக்ஞசுப்பிரமணியன்  அவர்களுக்கு திருப்பி
கிடைத்துவிட்டனவாம்.


நெய்மணக்கும் மைசூர்பா
அவருக்கு உதவியிருக்கிறது.

1 comment: