Tuesday, December 19, 2017

சூப்பரான இரண்டு வெற்றிகள் – இரண்டு தோல்விகள்




குஜராத், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சியளித்த சில முடிவுகளும் உண்டு.

ஹிமாச்சல் பிரதேசத்தின் தியோக் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் ராகேஷ் சின்ஹா வெற்றி பெற்றுள்ளார் இருபது வருடங்களுக்குப் பிறகு ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் செங்கொடியின் குரல் உழைப்பாளி மக்களுக்காக ஒலிக்கப் போவது மகிழ்ச்சியளிக்கிறது.

செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்று சொல்லி மனிதத்தோலை சவுக்கால் அடித்து சித்திரவதை செய்த மத வெறியர்களுக்கு எதிரான போராட்டத்தை எழுச்சியாக நடத்திய ஒடுக்கப்பட்ட  மக்களின் “உனா நாயகன்”  ஜிக்னேஷ் மேவானி குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடியது மகிழ்ச்சியளிக்கும் இன்னொரு செய்தி.

வெற்றி வாகை சூடிய தோழர்கள் ராகேஷ் சின்ஹா மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகிய இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்த இரு வெற்றி போலவே இரு தோல்விகளும் மகிழ்ச்சியளித்தது.

தேர்தல் வெற்றிக்காக எந்த அளவிற்கும் கீழிறங்கத் தயங்காத மோடி, நான் மண்ணின் மைந்தன் என்ற டயலாக்கை அதிகமாக பயன்படுத்தினார்.  அவரது சொந்த ஊரை உள்ளடக்கிய தொகுதியில் பாஜக தோற்றுப் போயிருக்கிறது. மண்ணின் மைந்தனை அந்த மண்ணின் மக்களே மண்ணைக் கவ்வ வைத்தது மகிழ்ச்சிதானே!

ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக வென்றிருக்கலாம். ஆனால் அங்கே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவரை, பி.கே.துமாலை, அவரது தொகுதி வாக்காளர்கள் நிராகரித்து விட்டார்கள்.  தொகுதி மக்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியாதவரைத்தான் பாஜக முதல்வர் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.




No comments:

Post a Comment