Friday, March 8, 2019

இன்றைக்கு மிகப் பொருத்தமாய்




"பாலின சமத்துவத்தை நோக்கி பயணிக்க" என்று காலையில் வந்த ஒரு பதிவிற்கு மிகவும் பிற்போக்குத்தனமாகவும் ஆணாதிக்க வெறியோடு ஆண்டவனைத் துணைக்கழைத்து ஒரு பின்னூட்டம் வந்தது. அநேகமாக அது ஃபேக் ஐடியாக இருக்கக் கூட வாய்ப்புண்டு.

வழக்கமாக மோசமான பின்னூட்டங்களை பிரசுரித்து பின் அதில் சொல்லப்பட்ட செய்தியை மட்டும் அகற்றுவேன். ஆபாச வார்த்தயோ அல்லது அநாகரீகத் தாக்குதலோ  எதுவும் கிடையாது  ஆனாலும் மனதில் கெட்டித்தட்டிப் போயிறிருக்கிற ஆதிக்க அழுக்கின் நாற்றத்தை தாங்க முடியவில்லை. அதனால் அப்படியே டெலிட் செய்து விட்டேன்.

போன ஞாயிற்றுக் கிழமை தீக்கதிரின் வண்ணக்கதிர் பகுதியில் வெளிவந்த தோழர் நவகவியின் கவிதை இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமாக இருப்பதால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

                               இடரை அணைத்து சுடரை கொளுத்து

                                       எழுந்தோடி வருவாயம்மா!
                                       புதுமைப் பெண்ணே!
                                       இளஞ்சோதிச் சுடர் நீ அம்மா!
                                       கழிந்தோடிப் போகட்டும்
                                       கவலைக்கண் ணீர்மட்டம்
                                       கன்னத்தில் வற்றட்டும் !
                                       வடியட்டும்.... விடியட்டும்...!

                                       சுழன்றாடு பெண்ணடிமை மலை ஏற!
                                       சூரியன் நெஞ்சுக்குள் குடி ஏற!
                                       பழங்காலப் பஞ்சாங்கம்
                                       பரண் மீது ஏற
                                       படி தாண்டு!தடைதாண்டு
                                       உன் உரிமை கோர !
                                       கிளியாக இருந்தாய் நீ.
                                       அடிமைசெய் வோர் அஞ்ச
                                       கிலியாக புலியாக வருவாய் பெண்ணே !
                                       விடிகாலை தொடரட்டும் உனக்குப் பின்னே !

                                       திலகப்பெண் ணாகநீ இனிஅல்ல!
                                       கலகப் பெண்ணாகவா தடைவெல்ல!
                                      ஆதிப்பெண் நீ புது
                                      அவதாரம் கொள்ள
                                      நீதிப் பெண் ஆகி வா
                                      நியாயத்தைச் சொல்ல!
                                      ஆண்ஆதிக் கச்சேறு
                                      அதைமீறிக் கரைஏறு!
                                      நின்துணை தவிர்த்திந்த புவிஎவ் வாறு
                                      நீள்வட்டப் பாதைசுற் றிடலாம்? கூறு!

                                      கூந்தலை பூந்தோட்டம் எனல்ஏனோ?
                                      கூந்தல்போல் சிக்கல்உன் வாழ்வேனோ ?
                                      மேனியை மாந்தோட்டம்
                                      என்பதுவும் ஏனோ?
                                      வீசிய மாங்கொட்டை
                                      பெண்ணே நீ தானோ?
"                                    சோத்துக்கும் சுகத்துக்கும்
                                      மட்டுமே நீ" என்று
                                      சொத்துக்கு அதிபதி ஆன ஆணை
                                      திருத்திடப் போடுநீ புதிய ஆணை!
                                                                                                         நவகவி

நன்றி – தீக்கதிர் – வண்ணக்கதிர்
03.03.2019


No comments:

Post a Comment