Tuesday, March 26, 2019

இதுதான்யா ரசனை

சூடான தேர்தல் பதிவுகளுக்கு மத்தியில் ஒரு சின்ன இளைப்பாறல்.

மதுரைத் தோழர் சுப்பாராவ் பகிர்ந்து கொண்டதை நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

என்ன ரசனையாக பாடலை ஆராய்ந்துள்ளார். எழுதியவர் யாரோ, அவருக்கு வாழ்த்துக்கள். 

பாடலின் இணைப்பும் கீழே உள்ளது. 





காதல் ராஜ்ஜியம் எனது"....1975 இல் வெளி வந்த 'மன்னவன் வந்தானடி' திரைப்படப் பாடல்...நடிகர் திலகம்..மஞ்சுளா....கனவுப் பாடல் என்று ஞாபகம்...கவியரசரின் கவிநயம் சொட்டும் அமுதப் பாடல்..ஏழிசை வேந்தன்,இசையரசியின் குரலில்...மெல்லிசை மன்னரின் இசையில்......

ஒரு கதை எழுதும் முன் முதலில் குறிப்பு வரைந்து கொள்வது போல ஒரு பாடல் இசையமைக்கும் முன் அந்த இசைக் கோர்ப்பின் ஒரு திட்டத்தை மெல்லிசை மன்னர் அமைக்கும் அழகே அவர் பாடலின் வெற்றிக்கு ஒரு முன்னோட்டம்...வாத்தியங்களின் தேர்வு,அதை வரிசைப் படுத்தி வகுக்கும் பாங்கு,மன்னர் மன்னர்தான் என்று சொல்லி விடும்.கோரஸ் அமைப்பு அது ஒரு தனி சிறப்பு...இந்தப் பாடலில் அந்த 'அரேன்ஜ்மென்ட்'....ஆஹா....


பாடல் காட்சியில் நடிகர் திலகம் குதிரை மேல் ராஜ அலங்காரத்தில்....மஞ்சுளா ஆடிக் கொண்டு பாடி வருவது....
கவியரசரின் வரியலங்காரம் சொல்ல என்னைப் போல் சாமான்யர்களுக்கு அறிவு போறாது...


"காதல் ராஜ்ஜியம் எனது அங்கு
காவல் ராஜ்ஜியம் உனது இது
மன்னன் மாடத்து நிலவு இதில்
மாலை நாடகம் எழுது......"


பாடல் ஆரம்பம் குதிரைக் குளம்பொலியுடன் கன கம்பீரமாய்....
ஒரு குடம் தேனைக் குடுவையுடன் கவிழ்த்தது போல சுசீலாம்மா இனிமையைக் கொட்டித் தீர்த்து விடுவார் பல்லவியில் ....காதல்.....இந்த சொல்லை இத்தனை இனிமையாக வேறு யாராலும் சொல்ல முடியாது....அத்தனை அழகுடன்....காவல் ராஜ்ஜியம் உனது....இங்கு ஒரு தொகுதி பங்கீடு...இது மன்னனின் மாட மாகிய அந்தப்புரம்.....அதில் மாலை நாடகம் எழுது...சிருங்காரம்....அஹிம்சையாய் .......கா...வ..ல் ....அந்த நெடில் 


சங்கதி....அபாரம்...மன்ன....ன்.......அழுத்தம்....மாலை....மா.....லை நாடகம்.....அந்த மாலை சங்கதிக்கு ஒரு முத்துமாலை பரிசளிக்கணும்...குதிரை குளம்பு ரிதத்துடன் லீட் வயலின்.......
டி.எம்.ஸ் தொடங்கும் முன் வரும் அந்த குழல் பாடலின் மொத்த எழில்...


'கண்ணான கண்மணி வனப்பு
கல்யாணப் பந்தலின் அமைப்பு
தேவதேவியின் திருமேனி
மஞ்சள் கொண்டாடும் மாணிக்க சிவப்பு.....'


கண்மணி வனப்பு.....அந்த வனப்புக்கு தன் கணீர் குரலில் அவர் சேர்க்கும் செழிப்பு...
கல்....யாண ....இங்கு ஒரு நெடில்...பந்தலின் அமைப்பைப் பாடியே சித்திரமாகக் காட்டி விடுவார்...
மணமக்களின் திருமேனி மஞ்சள் மின்னும் தகதக சிகப்பு......மாணிக்கம் போல் சிவப்பாக மின்னுகிறதாம்....மணமக்களின் அலங்காரம் ....அழகுசாதன நிலையத்திற்குப் போகாத இயற்கை வனப்பை கவியரசரின் தமிழ் அரைத்துப் பூசிப் பூரிப்பாக்கியிருக்கும்...


இங்கு லீட் கிடார்........அற்புதம்..
பிஜிஎம்மில் வயலின்,சிதார்,தபலா ...தொடரும் குழல்.....இந்த அரேன்ஜ்மென்ன்டுக்கே ஒரு 10 தோலா தங்கம் மெல்லிசை மன்னருக்கு கொடுக்கணும்....


'திங்கள் ஒரு கண்ணில் குளிர் தென்றல் மறு கண்ணில்
தாலாட்டும் பெண்மை இது.....இது சுசீலாம்மா.....
குளுமையைக் கொட்டும் கண்கள்....அதுவும் எப்படிப் பட்ட குளுமை....
ஒரு கண்ணில் நிலவு...மறு கண்ணில் குளிர் தென்றல் .....அந்தக் குளுமையோடு
தாலாட்டும் பெண்மையாம் அவள்....
வரிகளைக் கேட்கும் போதே தண்மையை இப்படி தன்மையாய் இவரால் மட்டுமே கொட்ட முடியும்...


டி.எம்.எஸ்..."வைகை மலர்ப் பொய்கையென மங்கை மணிச் செங்கை நீராட்டும் நேரம் இது '.......வைகை மலர்.....இது மேல் ஸ்தாயியில்.....என்ன ஒரு சுருதி சுத்தம்.....நீ....ராட்டும்......நெடில்.....
இதைத் தொடரும் 'ஆ ஆ ஆ ஆ '...சுசீலாம்மா...ஆஹா ஆஹா.....
இதுவரை தொடரும் ரிதம் டோலக்....


அடுத்த வரிகளில் டிரம்சை தடவிக் கொடுக்கும் அந்த ப்ரஷ்.....


"தென்பாண்டித் தேவனின் அணைப்பு
குற்றாலத் தென்றலின் நினைப்பு
ராஸ லீலைகள் இதுதானோ?உள்ளம் கொள்ளாத ஆனந்த தவிப்பு.....


தென்பாண்டித் தேவன்....(கவியரசருக்கு இந்தப் பாண்டியன் மேலும்..மீனாளின் மேலும் உள்ள ஒரு நெருக்கம்)ஆடவனின் அணைப்பின் தன்மை குற்றாலச் சாரலை நினைவுறு த்துகிறதாம்...இராசலீலையைக் கூட இவ்வளவு கண்ணியமாகக் கவியரசரால் மட்டுமே சொல்ல முடியும்.....ஆனந்தத் தவிப்பு......என்ன ஒரு சொல்லாடல் அது ...சிலிர்க்கிறது...


வயலின்,தபலா,குழல் தொடர அடுத்த சரணம்....


"கொஞ்சும் தமிழ் மூன்றும் தரும் சந்தம் அதில் தோன்றும்
தானாகப் பாடல் வரும்....
தத்தும் கிளி நித்தம் மணி முத்தம் இடும் சத்தம்
தேனாகக் காதில் விழும்..."


மூன்று தமிழ் சந்தம் தர பாடல் தானாக வரும்...
தத்தும் கிளி...இடும் மணி முத்தம் தேனாக காதில் விழும்.....
தமிழ்....அதன் இனிமையைப் பற்றிப் பேசினால் போதுமா.....வார்த்தைகள் இப்படி சந்தமாக வந்து விழணும் ....தத்தும்....முத்தம்....நித்தம்......இதுதான் கவியரசர்.....


"சிங்காரப் பொன்மகள் சிரிப்பு 

சங்கீத வீணையின் படைப்பு..
அழகு தேவதை அலங்காரம் கம்பன் சொல்லாத காவியச் சிறப்பு.......(காதல்)


சிங்காரப் பொன்மகள் சிரிப்பு....டி.எம்.எஸ்ஸின் ஆண்மையான கம்பீரம்...
சங்கீத வீணையின் படைப்பு...சுசீலாம்மாவின் மென்மையான சிருங்காரம்......
அழகு தேவதையின் அலங்காரம்....(மஞ்சுளா மிகவும் அழகாக இருப்பார் காட்சியில்)...கம்பனால் கூட யூகித்து வர்ணிக்க இயலாதாம்.....கற்பனையின் ஊற்று கவியரசர்.....


காதல் ராஜ்ஜியம்....பட்டும் படாமல் பாடி இருக்கும் நயம்....
மன்னன் மாடத்து நி...ல..வு...மாலை....அந்த சங்கதி...சொல்லும் ஓராயிரம் சங்கதி....
பாடல் முழுவதும் கவியரசர் தமிழால் மெழுக.....மன்னர் இசையால் அழகு சேர்த்திருப்பார்.....மன்னர் மன்னர்தான்......


அதிலும் கவி மகா சக்ரவர்த்தியுடன் சேர்ந்து விட்டால் மன்னாதி மன்னன்....பிருந்தாவன சாரங்க ராஜாங்கம்....................பாடல் உங்களுடன்

பாடலின் இணைப்பு இங்கே

1 comment:

  1. http://panimalar.blogspot.com/2019/03/blog-post_26.html

    ReplyDelete