Wednesday, March 27, 2019

டி.எம்.எஸ் ஸும் அவரே, பி.சுசீலாவும் அவரே




கடந்த சனி, ஞாயிறு ஒரு குடும்பப் பயணமாக வெளியூர் சென்றிருந்தேன். ஞாயிறு மாலை நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலிருந்த ஒரு சிறிய உணவகத்திற்கு காபி குடிக்கப் போயிருந்தேன். அந்த வேளையில் என்னைத் தவிர வேறு வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை.

காபிக்காக காத்திருந்த வேளையில்  முன்னே இருந்த டேபிளிலிருந்து ஒரு பெண் குரலில் ஒரு பாடல் ஒலித்தது.  எந்த பெண்ணுமே இங்கே இல்லையே என்ற யோசனையோடு பார்த்தால் அடுத்து ஆண் குரலும் ஒலிக்கத் தொடங்கியது.

நடிகர் திலகம் நடித்த “ரோஜாவின் ராஜா” படத்தில் வரும் “அலங்காரம் கலையாத சிலையொன்று கண்டேன்” பாடல் அது. டி.எம்.எஸ் குரல் மற்றும் பி.சுசீலா குரல் இரண்டையுமே பாடிய அவர் அந்த உணவகத்தின் உணவு பறிமாறும் ஊழியர். இரண்டு குரல்களிலுமே ரொம்பவுமே அற்புதமாக பாடினார்.

பாடலை முழுதுமாகக் கேட்டு விட்டு அவரை பாராட்டினேன். முன்னொரு காலத்தில் மேடைக் கச்சேரிகளில் பாடியதாகவும் இப்போது கச்சேரிகளும் கிடையாது, இருக்கும் கச்சேரிகளிலும் பழைய பாடல்கள் பாடுபவர்களுக்கு வாய்ப்பும் கிடையாது என்பதால் இந்த வேலைக்கு வந்து விட்டதாகக் கூறினார்.

ஹோட்டலில் ஆட்கள் இல்லாத போது பாடுவது வழக்கம் என்றும் சொன்னார்.

அவரைப் பாராட்டி ஒரு சிறிய தொகை கொடுத்த போது வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.

“ஹோட்டலுக்கு வரவங்க கிட்ட பாடிக் காண்பிச்சு காசு வாங்கிக்கறான் என்று கூட இருக்கறவங்களே முதலாளி கிட்ட போட்டுக் கொடுத்துடுவாங்க சார்”

அதுவும் சரிதானே!

எட்டப்பர்கள் சூழ் உலகல்லவா இது!

அந்த பாடலை இன்னொரு முறை கேட்க வேண்டும் என்று தோன்றியது. நான் கேட்டேன். உங்களுக்காக அப்பாடலின் இணைப்பையும் இங்கே அளித்துள்ளேன்.


நேற்று “காதல் ராஜ்ஜியம் எனது’ பற்றிய பதிவை பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்பாடல் போலவே இதுவும் “மெல்லிசை மன்னர், கவியரசு, டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா” கூட்டணியில் வந்த நடிகர் திலகத்தின் படப்பாடல்.  நேரம் கிடைக்கும் போது இந்த ஐவர் காம்பினேஷன் பாடல்களை தேடி பகிர்ந்து கொள்கிறேன்.



1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete