அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர் வாளாக திகழும் இன்சூரன்ஸ் வொர்க்கர் ஆங்கில மாத
இதழின் செப்டம்பர் 2013 இதழின் தலையங்கம் இது. நெல்லைக் கோட்டத்தைச் சேர்ந்த தோழர்
ஆர்.எஸ்.செண்பகம் இதனை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
எல்.ஐ.சி யை
சீரழிக்கும் எந்த ஒரு முயற்சியையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
அனுமதிக்காது என்பதே இத்தலையங்கம்
அரசுக்கு
தெரிவிக்கும் எச்சரிக்கை.
அச்சாணியாகத் திகழும் ஆயுள் காப்பீட்டுக் கழகம்
ஆயுள் காப்பீட்டுக் கழகம் வருகிற 2013, செப்டம்பர் 1ம் தேதி அன்று அதனுடைய
58வது ஆண்டில் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கிறது. இந்திய தேசத்தின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகத்
திகழும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட நிறுவனமே எல்.ஐ.சி. என்கிற இந்த ஆயுள்
காப்பீட்டுக் கழகம். மேலும் இது மக்களின்
வாழ்நிலையை மாற்றுவதிலும் மிக முக்கியமான பங்கினையாற்றும் என்ற நம்பிக்கையுடன்
உருவாக்கப்பட்ட நிறுவனம்.
இந்திய தேசத்தின் சமூக மற்றும் உள்கட்டுமானத் துறைகளுக்குத் தேவைப்படும்
நீண்டகால முதலீட்டிற்கு அவசியமான உள்நாட்டு சிறு சேமிப்புகளை திரட்டும் பொறுப்பினை
எல்.ஐ.சி.யின் மீது நம்பிக்கை வைத்து இந்த தேசம் அளித்தது. அது மட்டுமல்லாமல், இப்படி திரட்டப்படும்
மக்களின் சேமிப்புப் பணமானது பாதுகாப்பாகவும் வைக்கப்படும், அதே நேரத்தில்
அவர்களுக்குச் சிறந்ததொரு இலாபப் பங்கும் எல்.ஐ.சி.யால் வழங்கப்படும் என்ற
நம்பிக்கையுடன் இந்த நிதி திரட்டும் பொறுப்பு எல்.ஐ.சி.க்கு இந்திய தேசத்தால்
வழங்கப்பட்டது. இது நாள் வரையிலும்,
எல்.ஐ.சி.யும் இந்த நம்பிக்கைக்குகந்த நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த நாட்டின் நம்பிக்கைக்கும்
பெருமைக்கும் உரிய பெருமை மிகு நிறுவனமாக இன்று எல்.ஐ.சி. உயர்ந்து நிற்கிறது.
தனி நபர் வருமானம் என்பது மிகவும் குறைவாக உள்ள ஒரு ஏழை நாடு இந்தியா. அப்படிப்பட்ட ஒரு ஏழை நாட்டில் காப்பீடு
குறித்த விஷயங்களை பொது மக்களிடம் பரவலாக்குவதும், தங்கள் உயிரை தக்க வைத்துக்
கொள்ளவே ஒவ்வொரு நாளும் போராட வேண்டிய நிலையில் உள்ள மிகப் பெரும்பான்மை மக்களை
கொண்டுள்ள இந்தத் தேசத்தில், ஆயுள் காப்பீட்டின் மேன்மைகள் குறித்துப் பேசுவதும்
எளிதல்ல. எல்.ஐ.சி. இத்தகைய கடினமான
சூழலில் தான் செயல்பட்டு வருகிறது.
செயல்பட வேண்டியுள்ளது. இந்திய
தேசத்தின் மிகவும் ஒதுக்கப்பட்ட கிராமப்புறங்களையும் நோக்கி எல்.ஐ.சி. செல்ல
வேண்டியுள்ளது, செயல்பட வேண்டியுள்ளது, இன்சூரன்ஸ் பரவலாக்கலை செய்ய
வேண்டியுள்ளது.
இன்றைக்கு நடப்பில் உள்ள 30 கோடி தனி நபர் பாலிசிகளுக்கும், குழுக்
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 10 கோடி பாலிசிதாரர்க்கான பாலிசிகளுக்கும் சேவை
செய்து வருகிறது எல்.ஐ.சி. இந்த உண்மையே
அதனுடைய பிரம்மாண்டமான பணியினை பறை சாற்றுவதாக உள்ளது. கடந்து வந்த இந்த 57 வருடங்களில் எல்.ஐ.சி.
இன்றைக்கு இந்த நாட்டின் மிகச் சிறந்த நிதி நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. இந்திய நாட்டின் உள் கட்டமைப்புத் துறைகளின்
மிகப் பெரிய முதலீட்டாளராகத் திகழ்கிறது.
இதனுடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 16 லட்சம் கோடிகள். இந்த சொத்துக்கள் தான் இந்திய தேசத்தின்
பொருளாதாரம் எப்போதெல்லாம் ஆட்டம் காண்கிறதோ அப்போதெல்லாம் அதனை தூக்கி நிறுத்த
எல்.ஐ.சி ஓடி வந்து கைகொடுக்க உதவுகிறது.
இந்திய அரசாங்கத்திற்கு கடன் அளிக்கும் மிகப் பெரிய நிறுவனம்
எல்.ஐ.சி.தான். அரசாங்கத்தின் கடன்
தேவைகளில் கிட்டத்தட்ட 25 சதமானம் எல்.ஐ.சி.யால் வழங்கப்படுகிறது.
எல்.ஐ.சி.யின் இந்த வெற்றிப்பாதை அத்தனை எளிதாக அடையப்படவில்லை. ஆயுள் காப்பீட்டினை அரசுடைமையாக்குவதை
விரும்பாத சுயநலவாதிகள் எல்.ஐ.சி.யை ஒரு நாளும் சுமூகமாக செயல்பட
அனுமதித்ததில்லை. அதனுடைய செயல்பாட்டிற்கு
பல்வேறு தடைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு
தடையும் வெற்றிகரமான தகர்த்தெறியப்பட்டன.
எல்.ஐ.சியை மிகப் பெரிய அளவில் சீர் குலைக்கும் முயற்சி என்பது 1981ம்
ஆண்டு இந்திராகாந்தி தலைமையிலான அரசாங்கத்தால் செய்யப்பட்டது. இந்த சூழ்ச்சியை முறியடிக்க வீதிகளிலும்,
பாராளுமன்றத்திற்குள்ளேயும் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டி வந்தது. இது மாதிரியான தடைகளையெல்லாம் கடந்து
எதிர்பாராத நிகழ்வுகளால் துரதிருஷ்டவாதிகளாகும் மக்கள் கண்ணீரை துடைக்கும்
நிறுவனமாக, இலட்சக்கணக்கான குடும்பங்களில் விளக்கேற்றி வைக்கும் நிறுவனமாக
எல்.ஐ.சி. தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
1991ம் ஆண்டு இந்திய ஆளும் வர்க்கம் நவீன தாராளமயக் கொள்கைகளை கடைபிடிக்கத்
தொடங்கியது முதல் இந்திய தேசத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் (இன்சூரன்ஸ் துறை
உள்பட) திறந்துவிடப்பட்டது. இந்திய
மக்களின் மிகப் பெரும்பான்மையினரின் மிகக் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகும்
இன்சூரன்ஸ் துறையானது இந்திய மற்றும் அந்நிய மூலதனத்திற்குத்
திறந்துவிடப்பட்டது.
இன்சூரன்ஸ் துறையை இந்திய மற்றும் அன்னிய மூலதனத்திற்குத் திறந்துவிடும்போது
வைக்கப்பட்ட விவாதங்கள் இன்று வெற்று விவாதங்களாக சாரமற்றவையாக மாறிப்
போயுள்ளன. இந்திய மக்கள் மிகப் பெரிய
அளவில் எதிர்ப்பினை தெரிவித்ததன் காரணமாகத் தான் இன்றைக்கு எல்.ஐ.சி. மற்றும்
பொதுத் துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளை தனியார்மயமாக்கிவிட வேண்டும் என்ற
அரசாங்கத்தின் முயற்சி வெற்றிபெற முடியவில்லை.
இன்றைக்கு அரசாங்கம் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும்
தன்னுடைய பங்குகளை (holdings) நீர்த்துப்போகச் செய்துள்ளது. ஆனால் பொதுத் துறையில் உள்ள இன்சூரன்ஸ்
துறையில் மட்டும் தான் அரசாங்கத்தினுடைய இந்தத் தாக்குதல் முயற்சிகள் வெற்றிபெற
முடியவில்லை என்பதில் இருந்தே நமது வெற்றியின் வீச்சினை அறிந்து கொள்ள
முடியும்.
எல்.ஐ.சி.யையும் ஜி.ஐ.சி.யையும் ஒரே நேரத்தில் தனியார்மயமாக்கி விடலாம் என்ற
எதிர்பார்ப்புடன் இருந்தவர்கள் எல்.ஐ.சி. போட்டியின் கடுமையைத் தாங்க முடியாமல்
கூடிய விரைவில் அழிந்து போகும் என்ற கனவுடன் எதிர்பாத்துக் காத்திருந்தனர். அன்றைய பொருளாதாரப் பத்திரிக்கைகளின் (Pink Papers) தலையங்கங்களும் கூட எல்.ஐ.சி. என்ற வெள்ளை
யானையை (ஐராவதத்தை) பார்த்து தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் பயப்படத் தேவையில்லை
என்றும், அது கூடிய விரைவில் போட்டியை சமாளிக்க முடியாமல் தன்னுடைய முடிவினை
சந்திக்கும் என்றும் எழுதியிருந்தன. ஆனால்
எல்.ஐ.சி. என்ற இந்த ஐராவதம் மிக அழகாக செயல்பட்டு அவர்களது நம்பிக்கைகளை
தகர்த்தெறிந்தது. இந்த உண்மையை அவர்களே
ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.
சந்தையை தீர்மானிப்பதாக, உருவாக்குவதாக (market maker) எல்.ஐ.சி. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இன்சூரன்ஸ் சந்தையில் அதனுடைய மேலாதிக்கம்
தொடர்ந்து இருந்து வருகிறது. 12 வருட
போட்டிக் காலத்திற்குப் பிறகும், பிரிமிய வருவாயைப் பொறுத்த வரையில் எல்.ஐ.சி.யின்
சந்தைப் பங்கு என்பது 72 சதமாகவும், பாலிசிகளின் எண்ணிக்கையில் 81 சதமாகவும் உள்ளது. ஆனால், எல்.ஐ.சி.யின் அடுத்த கட்டப் போட்டியாளர்
பிரிமிய வருவாயில் 4 சதமும், பாலிசிகளின் எண்ணிக்கையில் 3 சதமும் மட்டுமே சந்தைப்
பங்குடையவராக உள்ளார் என்பதே எல்.ஐ.சி.யின் சந்தை மேலாண்மையை காட்டுவதாக
உள்ளது. 12 ஆண்டு போட்டிச் சூழலில் உலகில்
எந்தவொரு இன்சூரன்ஸ் கம்பெனியாலும் எல்.ஐ.சி.யைப் போன்று இப்படியொரு சந்தை
மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
எல்.ஐ.சி.யில் பாலிசி எடுத்துள்ள பாலிசிதாரர்கள் தங்களுடைய சொந்த
அனுபவங்களின் அடிப்படையில் எல்.ஐ.சி.யின் மீது வைத்துள்ள நம்பிக்கையே இதற்குக்
காரணமாகும். நிதியமைச்சர் ப. சிதம்பரமும்,
”எல்.ஐ.சி. என்ற இந்த மூன்றெழுத்து தான் இன்சூரன்ஸ் என்பதற்கு அர்த்தம் அளிப்பதாக
உள்ளது. இந்த நாட்டின் பொருளாதார இழையை
பலப்படுத்துவதில் அதற்கு உள்ள திறமையே இதற்குக் காரணம். இந்திய நாட்டில் வேறு எந்த மூன்றெழுத்திற்கும்
இப்படியொரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நான் தைரியமாகச் சொல்ல முடியும்” என்று
புகழாரம் சூட்டியுள்ளார்.
இப்படிப்பட்ட புகழாரங்களை சூட்டினாலும், எல்.ஐ.சி.யை சீரழிக்கும் முயற்சிகளை
அரசாங்கம் தொடர்ந்து எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்நிய முதலீட்டின் உச்ச வரம்பை 26 சதத்தில்
இருந்து 49 சதமாக உயர்த்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தனியார் இன்சூரன்ஸ்
கம்பெனிகளை பலப்படுத்தும் முயற்சிகளே. அதே
நேரம் மூலதனத் திரட்டலில் அந்நிய மூலதனத்திற்கு இந்திய நாட்டின் உள்நாட்டு
சேமிப்புகளின் மீதான கட்டுப்பாட்டினை பெறுவதும், உள்நாட்டுச் சேமிப்புகளை கொண்டு
செல்வதும் எளிதாகிவிடும். அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கடந்த 9 வருடங்களாக நடத்திய போராட்டங்களின் மூலம் அந்நிய
நேரடி மூலதன உச்ச வரம்பு உயர்ந்து விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால், தற்போது நாட்டில் நிலவும் கடுமையான
பொருளாதாரச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அரசாங்கம் இன்சூரன்ஸ் துறையை மேலும்
தாராளமயமாக்க முயல்கிறது. அரசாங்கத்தின் இந்த நாசகர முயற்சிக்கு எதிரான
போராட்டமும், மக்கள் மத்தியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு பிரச்சாரங்களும், அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை
இது நாள் வரை தடுத்து நிறுத்தியுள்ளது.
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்த அரசாங்கம் இன்னும்
தீவிரமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, பிரச்சார இயக்கங்கள் இன்னும் அதிக
வலுவுடன் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
இன்சூரன்ஸ் ஊழியர் நடத்தியுள்ள இந்த இயக்கங்கள் தனிச் சிறப்புமிக்கவை,
ஒப்பற்றவை, குறிப்பிடத்தக்கவை. இந்த
இயக்கங்கள் ஊழியர்களின் மத்தியில், நிறுவனத்தின் பால் இது தனக்கான நிறுவனம் என்ற
உணர்வினை ஏற்படுத்தியுள்ளது. இந்த
இயக்கங்களுக்கு எல்.ஐ.சி. நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் எந்தவித ஆதரவும்
கிடைக்கவில்லை. எல்.ஐ.சி. ஊழியர்கள்
தங்கள் நிறுவனத்தை நேசிக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் அன்புக்குப் பாத்திரமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் நலனை
பாதுகாப்பதில் முழு முயற்சியை மேற்கொள்வார்கள்.
வேறு எந்த நிறுவனத்திலும் காண முடியாத அளவிற்கு எல்.ஐ.சி.யின் ஊழியர்கள்
இந்த நிறுவனத்தின் மீது பற்றுடையவர்களாக, இதை தங்களது சொந்த நிறுவனமாகப் பாவிக்கக்
கூடியவர்களாக உள்ளனர். ஒரு பொதுத் துறை
நிறுவனம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எல்.ஐ.சி. நிறுவனம் ஒரு மாதிரி
நிறுவனமாகத் திகழ்கிறது. அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்தியுள்ள இயக்கங்கள், இன்றைக்கு ஊழியர்கள் மத்தியில்,
அவர்கள் இந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், பாலிசிதாரர்களின்
நலன்களை பாதுகாக்கக் கூடியவர்களாக, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுபவர்களாக, நாட்டு
நலனை பாதுகாக்கக் கூடியவர்களாக திகழ வேண்டும் என்ற புரிதலை
ஏற்படுத்தியுள்ளது. பாலிசிதாரர்களுக்கு
100 சதமானம் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்பதே ஊழியர்களின் இந்த புரிதலுக்கும்
பொறுப்புணர்வுக்கும் போதுமான ஆதாரமாகத் திகழ்கிறது.
இந்த 58வது ஆண்டில் எல்.ஐ.சி. அடியெடுத்து வைக்கும்போது ஏராளமான சவால்களை
சந்தித்துள்ளது. நிறுவனத்தின்
வளர்ச்சிக்கான சவால்கள், அதிகரித்து வரும் பாலிசிதாரர்களின் தேவைகள் மற்றும்
இன்சூரன்ஸ் சந்தையில் தொடர்ந்து தனது மேலாண்மையை தக்க வைக்கும் சவால் என்பது போன்ற
சவால்களை எல்.ஐ.சி. எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை பின்பற்றும் சக்திகள் ஏற்படுத்தியுள்ள
எதிர்மறையான சூழலில் இந்த சவால்களை எல்.ஐ.சி. சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால், அவர்களுக்கு இந்த நிறுவனத்தின்
ஊழியர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தைப் பாதுகாக்க எத்தகைய வலிமையான போராட்டங்களையும்
எந்த அளவிற்கும் சென்று அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்துவார்கள் என்றும்
தெரியும். எல்.ஐ.சி. ஊழியர்களைப் பொறுத்த
வரையில், எல்.ஐ.சி.யை பாதுகாப்பது என்பது ஒரு அரசியல் மற்றும் தத்துவார்த்த
ரீதியிலான பொறுப்பாகும்.
எனவே, எல்.ஐ.சி.யின் வெற்றிகரமான 57வது ஆண்டு தினத்தை நாம்
கொண்டாடுவோம். இந்த பெருமை மிகு நிறுவனத்தை
மேலும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்ல நாம் உறுதியேற்போம்.
---------------------
lic யை பாதுகாக்க aiiea இருக்கும்வரை நிறுவனத்திற்கு எந்த வித பாதிப்பையும் யாராலும் ஏற்படுத்த முடியாது என்பதே நிதர்சனம் .
ReplyDelete