Monday, September 9, 2013

அனுபவம் ஆயிரம், அன்பான ஆயிரம் பூங்கொத்துக்கள்



இது எனது ஆயிரமாவது பதிவு.

எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தபோது வலைப்பக்கமும்
இன்னொரு சமூக வலை தளமான முகநூலிலும் கிடைத்த அனுபவப்
பகிர்வாக ஆயிரமாவது பதிவு அமையட்டுமே என்று தோன்றியது.
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொழிற்சங்க இயக்கத்தில்
கிடைத்த அனுபவம் போலவே வலைப்பக்க அனுபவமும் மிகவும்
முக்கியமானது. 

உண்மையிலேயே கொஞ்சம் மலைக்க வைக்கிறது. விளையாட்டாக எழுத ஆரம்பித்து இன்று தீவிரமாக எழுதுமளவு சென்றுள்ளது.

முதன் முதலாக 2009 ம் ஆண்டுதான் வலைப்பக்கம் துவங்கினேன். அப்போது தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று தெரியாது. முதல் பதிவு நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு வாக்களியுங்கள் என்ற வேண்டுகோள் மட்டுமே. நாடாளுமன்றத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதில் கடுப்பாகி இன்னொரு பதிவு போட்டு அதோடு வலைப்பக்கத்திற்கு வணக்கம் சொல்லி வெளியேறி விட்டேன்.

கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பிறகு ஒரு மோசமான விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டு நாற்பத்தி ஐந்து நாட்கள் போல விடுப்பில் இருந்தேன். அப்போது நேரத்தை செலவு செய்ய வலைப்பக்கங்களைப் பார்க்க, பார்க்க எனது வலைப்பக்கத்தையும் தூசி தட்டி மீண்டும் எழுத ஆரம்பித்தேன். 

எங்கள் சங்கத்தின் பெயரில் யாரோ ஒரு மோசடிப் பேர்வழி, அநேகமாக எங்கள் சங்கத்தின் உறுப்பினரல்லாத யாரோ ஒருவராகத்தான் இருந்திட வேண்டும், ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கி சங்கத்திற்கு எதிரான கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வலைப்பக்கத்தில் அந்த அபத்தமான 
கருத்துக்களுக்கு விளக்கங்களையும் உண்மையான செய்திகளையும்
சொல்லத் துவங்கினேன். சென்னை 2 கோட்டத்தின் பொதுச்செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற தோழர் சி.டி.சுரேஷ்குமாரும் இப்பணியில் கரம் கோர்த்துக் கொள்ள,  எங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் அந்த வலைப்பக்கத்தை துவக்கியவர்கள் அத்தோடு அதை விட்டு விட்டு ஓடி விட்டார்கள். 

தமிழ்மணத்தில் இணைத்த பின்பு பார்வையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தார்கள். அதன் பின்பு எங்கள் கோட்டச் சங்கத்திற்காகவும் தனியாக ஒரு வலைப்பக்கம் துவக்கப்பட்டது. பல முக்கியமான கட்டுரைகளை வெளியிடுவதுதான் அதன் நோக்கமாக இருந்தாலும் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்புக்களாக மட்டுமே இப்போது  அந்தப்பக்கம் உள்ளது.

என்னுடைய அரசியல் கருத்துக்களை சொல்வதற்கான ஒரு தளமாக மட்டுமே வலைப்பக்கத்தை பயன்படுத்தத் தொடங்கினேன். அன்றாட அரசியல், சமூக நிகழ்வுகள், தொழிற்சங்க அனுபவங்கள் ஆகியவற்றின் மீதான பார்வையை பகிர்ந்து கொள்ளத் தொடங்கியதும்தான் அன்றாடம் எழுதுவது என்பது நிகழ ஆரம்பித்தது. தீராத பக்கங்கள் என்ற பிரபல வலைப்பக்கத்தின் தோழர் ஜா.மாதவராஜ் தனது வலைப்பக்கத்தில் என்னை அறிமுகம் செய்ததும் அதன் மூலம் பார்வையாளர்களின் வருகை  மேலும் அதிகமானது,

வலைப்பக்கம் மூலமாய் முகநூலுக்குள்ளும் செல்ல தொடர்புகள் விரிவானது. முகநூலின் முதல் நண்பர் பஞ்சாபைச் சேர்ந்த எங்கள் சங்க உறுப்பினரான ஒரு பெண் தோழர். அதன் பின்பு நண்பர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே போனது. அனேகமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களின் தோழர்கள் முகநூல் நட்பு வட்டாரத்தில் உள்ளார்கள். காரைக்குடியில் ஆறாவது முதல் எட்டாவது வரை ஒன்றாக படித்த ரமேஷ் என்ற நண்பனோடு தொடர்பு நீண்ட நாள் இருந்தது. நான் மதுரை சௌராஷ்டிரக் கல்லூரியில் படிக்கையில் அவன் மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்தான். நான் எல்.ஐ.சி யில் பணி சேர்ந்த பிறகும் இருந்த தொடர்பு பிறகு விடுபட்டு விட்டது. பிறகு முகநூல் வழியாகவே மீண்டும் அந்த நட்பு புதுப்பிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற பல தோழர்களும் அதிகாரிகளும் கூட இப்போது புதிய தொடர்புகளாக வந்து விட்டனர். நாக்பூரைச் சேர்ந்த தோழர் காஷ்யபன், அவ்வப்போது தொலைபேசியில் பேசுவார். சமீபத்தில் கூட தலைவா பிரச்சினை தொடர்பாக விஜய் பற்றி எழுதியதற்கு தொலைபேசியில் கூப்பிட்டு உம்ம தரத்திற்கு அவனைப் பத்தியெல்லாம் எழுதனுமா என்று செல்லமாக கடிந்து கொண்டார்.

பல பிரச்சினைகளில் பல பரிமாணங்களை வலைப்பக்கங்களில் பார்க்க முடிகிறது. ஆரோக்கியமான விவாத மேடையாகவும் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் சாராயக்கடை சண்டையை விடவும் கேவலமாக உள்ளது. மாற்றுக் கருத்துக்கள் மற்றவருக்கு இருக்கும் என்று ஏற்கும்
சிந்தனை குறைந்து வருகிறது. படித்தவர்கள் மட்டுமே இயங்கும்
சமூக வலைத்தளங்களில் நிகழும் ஜாதிச்சண்டை மிகவும் அதிர்ச்சி
அளிக்கிறது. கவலை தருகிறது.

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை திமுக, அதிமுக மீது விமர்சனம்
வைத்தால் மாற்றுக் கட்சியினர் வரவேற்பது என்பது இங்கே உள்ளது.
பா.ம.க ஆட்களோ மூர்க்கத்தனமாக மட்டுமே பதில் சொல்வார்கள். 
பாஜக ஆட்களைப் பொறுத்தவரை அனாமதேயமாக ஓளிந்து கொண்டு
அபத்தமாக பதில் சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே ரொம்ப
ரொம்ப நல்லவர்கள் காங்கிரஸ்கட்சிக்காரர்கள் மட்டுமே. எவ்வளவு
அடித்தாலும் தாங்குகிற நல்லவர்கள். பதில் கொடுக்க யாரும்
வருவதேயில்லை. பதில் கொடுக்க முடியாத பலவீனமும் உண்டு
என்பதுதான் உண்மை.

வலைப்பக்கத்தில் எழுதத்தொடங்கியதன் மூலம் கிடைத்த இன்னொரு
நன்மை. இப்போது நான் கவிதைகளும் எழுதுகிறேனே பாஸ்.

முன்பெல்லாம் எந்த ஒரு செய்தியைப் பார்த்தாலும் இதை எங்கள்
சங்க இதழ் சங்கச்சுடருக்கு பயன்படுத்த முடியுமா என்று யோசிப்பேன்.
இப்போது வலைப்பக்கத்திற்கும் பயனாகுமா என்று யோசிக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்
சில நாட்கள் நேரம் கிடைப்பதில் பிரச்சினை இருக்கும். அதனால்
இழந்தது மதிய உணவு நேரம். முக்கால் மணி நேர உணவு நேரமும்
பேசுவதற்கு பயன்படும். இப்போது வலைப்பக்கத்திற்காக எழுதி விட்டு
பத்து நிமிடங்களில் சாப்பிட்டு விடுகிறேன். ஆனால் எழுதுவதற்கான
விஷயப் பஞ்சத்தை நம் அரசியல்வாதிகள் உருவாக்கியதே இல்லை.

பரபரப்பான அரசியல் விஷயங்கள், எப்போதாவது எழுதும் திரைப்பட
விஷயங்கள், இவைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு மாய்ந்து மாய்ந்து
எழுதும் பொருளாதார விஷயங்களுக்கு இருப்பதில்லை என்று ஒரு
ஆதங்கம் உண்டு. அதே போல அனானிகள் பிரச்சினை எல்லா
வலைப்பக்கங்களுக்கும் ஒரு எரிச்சல் ஊட்டும் விஷயம். எனக்கும்
இந்த அனானி பிரச்சினை உண்டு. யார் அந்த அனானி என்றும் 
நன்றாகவே தெரியும். ஆனால் கோழையாக ஒளிந்து கொண்டு 
வக்கிரத்தோடும் வன்மத்தோடும் பின்னூட்டம் செய்பவர்களை 
என்ன செய்ய முடியும்? டெலிட் செய்வதைத் தவிர.

அவ்வப்போது மின்னஞ்சலில் வரும் படங்கள் மிகவும் உதவிகரமாக
இருக்கும். நேரம் இல்லாத போது வலைப்பக்கத்தை ஒப்பேற்ற
அவைதான் உதவும். சமையல் குறிப்புக்கள் இப்போதைய புதிய
பொழுதுபோக்கு, 

இரண்டு முக்கியமான அங்கீகாரங்களை நான் இங்கே நன்றியோடு
குறிப்பிட வேண்டும். 

ஜூனியர் விகடனின் என் விகடன் துணை இதழில் எனது
வலைப்பக்கத்தை அறிமுகம் செய்தது.

வலைச்சரம் இணைய இதழின் ஆசிரியராக ஒரு வார காலம்
பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.

எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடியே உட்காராதீங்க என்று
அவ்வப்போது செல்லமாக கடிந்து கொள்ளும் மனைவி, அப்பாவோட
ப்ளாக அப்பப்ப பார்த்து செய்திகளை அப்டேட் செய்து கொள் என்று
என் மகனுக்கு சொல்லுவதும் கூட முக்கியமான அங்கீகாரமல்லவா?

எதை எழுதுவது, எதை விடுவது என்ற குழப்பத்தில் இந்தப் பதிவை
இத்தோடு நிறைவு செய்யலாம் என்று யோசிக்கிறேன். 

ஆயிரமாவது பதிவை எழுதும் இந்நன்னாளில்தான் இன்னொரு
இனிமையான செய்தியும் இணைந்துள்ளது. இரண்டு லட்சம்
ஹிட்ஸ் என்ற நிலையையும் இன்றுதான் அடைந்துள்ளேன். எனது
வலைப்பக்கத்திற்கு தொடர்ந்து வருகை தரும் அன்பான நண்பர்களின்
தொடர்ந்த ஆதரவால்தான் இது சாத்தியமானது.

உங்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும்
எனது அன்பும் ஆயிரம் பூங்கொத்துக்களும்.
தொடர்ந்து எழுதுவேன். தொடர்ந்து வாருங்கள்


 

 









10 comments:

  1. ஆயிரமாவது பதிவு. -
    இனிய வாழ்த்துகள்>.!

    ReplyDelete
  2. கட்டு கட்டாக குவிப்பது இந்த காலம்.
    நீங்களோ கொத்து கொத்தாக வாழ்த்துக்களையும்
    பாராட்டுக்களையும் பெறுகிறீர்கள்.
    எழுத்து பணி தொடரட்டும்.
    அனல் பறக்கும் பாணியும் தொடரட்டும்.

    முன்னாள் சங்க பொறுப்பாளன்.
    இசக்கிராஜன்

    ReplyDelete
  3. தொடர்ந்து எழுத வாழ்துக்கள். தொடர்ந்து வருவோம் நன்றி.

    ReplyDelete
  4. ஆயிரமாவது பகிர்விற்கு முதலில் என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சொன்ன
    திரு இசக்கி ராஜன் ஐயா,
    திரு வேகநரி,
    திருமதி இராஜராஜேஸ்வரி,
    திருமதி அம்பாள் அடியாள்

    உங்கள் அனைவருக்கும் நெஞ்சு நிறைந்த நன்றிகள் பல

    ReplyDelete
  6. இன்னும் பல ஆயிரம் பதிவுகள் எழுதுவீர்கள் ...கிடைப்பதற்கு அரிய அங்கீகாரம் கிடைத்து விட்டதே ...வீட்டிலிருந்து !

    ReplyDelete
  7. இன்றைய அனுபவப் பகிர்வும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது .இன்னும் பல லட்சம் வாசகர்கள் தங்களின் எழுத்துக்களை விரும்பிப் படிக்கும் நிலை உருவாகட்டும் .தொடரட்டும் இனிதாக இன்று போல்
    என்றுமே தங்களின் எழுத்துலகப் பயணம் .மீண்டும் மீண்டும் என் இனிய வாழ்த்துக்கள் சகோதரரே .

    ReplyDelete
  8. ஆயிரம் பகிர்வுகள்- அபார சாதனை

    இணைய தளம்- ப்ளாக்- பேஸ் புக் போன்றவற்றை உழைப்பாளி மக்களின் இயக்கங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற வருத்தம் பொதுவாக உள்ளது. வருந்துகிற அளவிற்கு முன்முயற்சிகள் இருப்பதில்லை என்பதும் நடுத்தர வர்க்கத்தின் பலவீனம். ஒரு சில விதிவிலக்குகள்தான் நம்பிக்கைகளை உயிர்ப்பிக்கின்றன.

    ஒருசிலர் இப்படி உள்ளே போகிறவர்களும் பொழுதுபோக்கு, விசாரிப்புகள், ஏதோ எழுதப்படாத ஒப்பந்தம் போல ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வது என்று சுருங்கிப் போகிறார்கள். அரசியல்-சமுகம்-பண்பாடு சார்ந்த விவாதங்களில் பங்கேற்பதில்லை.

    ஆனால் பிற்போக்காளர்கள் மிக நேர்த்தியாக இவ்வசதிகளை கையாள்கிறார்கள். அவர்களே ப்ளாக் நடத்துவது போன்று மற்றவர்களின் தளங்களிலும் பின்னூட்டம் என்ற பெயரில் தங்களின் அரசியலை, கருத்துக்களை பதிவு செய்வதை முறைப்படுத்தி செய்கிறார்கள். பிரதம வேட்பாளராக மோடி முன்நிறுத்தப்பட சமுக வலைத் தளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் காண முடியும்.

    நமது தலையீடு தேவைப்படுகிறது என்பதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருந்தபோதிலும் நாம் பேசுவதோடும் , வருந்துவதோடும் நின்று விட முடியுமா!

    இதோ ஓர் எடுத்துக்காட்டு. வேலூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ராமன் "ஒரு ஊழியனின் குரல்" என்ற ப்ளாக் ஐ நடத்தி வருபவர். 2009 லிருந்து பதிவுகளை இட்டு வருபவர். எது எது பரபரப்பாக பொதுவெளியில் பேசப்படுகிறதோ அதைபற்றிய பதிவு ராமனின் வலைத் தளத்தில் விடுபடாது. அவரின் எழுத்தாற்றலும் அவரின் பக்கங்களை நோக்கி பலரை இழுத்தது. ஏதாவது சங்கத்தின் பெரும் நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் வேண்டுமெனில் அவரது ப்ளாக் உடனே கைகொடுக்கும்.அரிய செய்திகளை, வரலாற்றில் நினைவுகூரத் தக்க உரைகளை, எதிர்கால வரலாற்றிற்கான பதிவுகளை நேர்த்தியாக தனது ப்ளாக்கில் தொகுத்துள்ளார்.
    இதற்காக அவர் செலவிடும் நேரம், முயற்சி, உழைப்பு எவ்வளவு இருக்கும் என்பதை இதுபோன்ற பணிகளைச் செய்யும் நண்பர்களுக்கு தெரியும். அர்ப்பணிப்பு இல்லாவிடில் இத்தகைய தொடர் முனைப்பு சாத்தியமில்லை.

    AIIEA ன் பெருமைகளில் ஒன்றாக ராமனின் பணியும் மலர்ந்துள்ளது என்ற ஒரு வரி பாராட்டை தவிர வேறு எப்படி நமது உணர்வுகளை பிரதிபலிக்க முடியும்!

    நேற்று தனது 1000 வது பதிவை ப்ளாக் ல் இட்டுள்ளார். தோழர் ராமன் ! தொடரட்டும் உங்களின் பணி. இன்னும் பல பல்லாயிரங்களை நோக்கி...

    szief.blogspot.com

    ReplyDelete
  9. என் போன்ற சாமானியனையும் அடுத்த நிலைக்கு சிந்திக்க துண்டியதே உங்கள் பதிவுகள் என்றால் அது மிகையல்ல . தொடரட்டும் உங்கள் சீரிய பனி.உங்களின் லட்சமாவது பதிவில் உங்களை வாழ்த்த காத்திருக்கிறேன்.

    ReplyDelete