Thursday, September 5, 2013

நினைவில் நிற்கும் ஆசிரியர்கள் – நல்லவர்களும் மற்றவர்களும்



இன்று ஆசிரியர்கள் தினம்.

தங்களின் மாணவர்கள் வாழ்வில் நல்ல நிலைமையை அடைய அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றும் நல்லாசிரியர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

இன்று காலை ஆசிரியர்கள் தினம் என்றதும் சில ஆசிரியர்கள் மனதில் வந்து போனார்கள். அந்த நினைவுகளை இன்று பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்தப்  பதிவு.

ஒன்றாம் வகுப்பு படித்தது மயிலாடுதுறையில். கொஞ்சமும் நினைவில் இல்லை.

இரண்டாவது வகுப்பு காரைக்குடி பக்கத்தில் சாக்கோட்டை என்ற ஊரில். ப.சிதம்பரத்தின் சொந்த ஊர் கண்டனூருக்கு பக்கத்து கிராமம். ஒரு பள்ளி விழாவில் ராமாயணக்கதையை முழுமையாக ஒப்பித்தது மட்டும் நினைவில் உள்ளது. இன்னொரு சம்பவமும் நினைவில் உள்ளது. என் அப்பா பிளாக் டெவலப்மெண்ட் ஆபிசராக (பஞ்சாயத்து ஆணையர் என்பது சரிதானே?) இருந்து ஓய்வு பெற்றவர். ஏதோ ஒரு முக்கிய கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்து பம்பரம் வாங்க காசு கேட்டதும் அதற்காக பிறகு அடி வாங்கியதும் நினைவில் உள்ளது.

மூன்றாவது முதல் ஐந்தாவது வரை காரைக்குடியில் அழகப்பச் செட்டியார் தொடக்கப்பள்ளி. எல்லா வகுப்புக்களுமே சிவகாமி என்ற டீச்சர்தான் எடுத்தார்கள். பயங்கர டெரர் அவர்கள். ஒரு வரலாற்று தேர்வில் 90 மதிப்பெண் எடுத்ததற்கு குட் பாய் என்று பாராட்டி ஐந்தாவது முடிக்கும்வரை பள்ளியின் பிரதம மந்திரியாக்கினார்கள். மன்மோகன் சிங்தான் பிரதமர் பதவியின் மதிப்பை குறைத்து விட்டார்.

ஆறாவது முதல் எட்டாவது வரை அழகப்பச் செட்டியார் மாதிரி உயர்நிலைப் பள்ளி. ஆங்கில மீடியத்தில் அனுமதிக்க வேண்டும் என்று எனது அப்பா கேட்டபோது மாநில அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு எல்லாம் ஆங்கில மீடியம் கிடையாது என்று மறுத்து விட்டார்கள்.

அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு டி.ஆர்.ராதாகிருஷ்ணன் இன்னும் என் நெஞ்சில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். திங்கட்கிழமை ப்ரேயர் மீட்டிங்கில் என் அருமை மாணாக்க மாணாக்கியரே என்று பேசத் தொடங்குவதே அருமையாக இருக்கும்.

கல்யாணசுந்தரம் சார் அங்கே ஹிந்தி பண்டிட். அற்புதமான கதை சொல்லி. அறிவியலும் எடுப்பார் என்றாலும் வாரத்தில் ஒரு நாள் கதை சொல்வார். மந்திர, தந்திரக் கதைகள் என்றாலும் அவர் கதை சொல்லும் போது நாமே பறக்கும் கம்பளத்தில் பறப்போம். அரக்கனின் கண்ணில் இருந்து வரும் நெருப்பிற்கு அஞ்சி கொஞ்சம் விலகுவோம்.

ஒன்பதாவது முதல் பனிரெண்டாவது வரை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி ஐயர் மேல் நிலைப்பள்ளி. உண்மையிலேயே அற்புதமான பல ஆசிரியர்கள் அங்கே ஒரு காலத்தில் பணி செய்தார்கள்.

ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.

ஏராளமான ஆசிரியர்களைக் கொண்டது என் குடும்பம்.

என் முதல் அண்ணனும் அண்ணியும் ஆசிரியர்கள். டெல்லியும் டேராடூனிலும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியில் பணியாற்றி மறைந்தவர்கள். என் அண்ணனின் ஒரே மகளும் இப்போது
மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை டெல்லியில்
பொறுப்பேற்று நடத்தி வருகிறாள்.

முதல் அக்காவும் அக்கா கணவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

இரண்டாவது அக்கா திருமணமாகும்வரை ஆசிரியராக இருந்தவர்.

மூன்றாவது அக்கா பி.எட் படித்தவர்.

இரண்டாவது அண்ணி கூட ஓரிரு மாதம் ஆசிரியையாக 
வேலை பார்த்தார்.


இவர்களைத் தவிர இன்னொரு முக்கியமான ஆசிரியரும் உள்ளார். அவரைப்பற்றி கடைசியில் சொல்கிறேன்.

எனது முதல் அக்கா வேலை பார்த்த திருக்காட்டுப்பள்ளி பள்ளிக்கூடத்தில்தான் ஒன்பதாவது சேர்ந்தேன்.

அர்ப்பணிப்பு உணர்வும் ஆர்வமும் அதிகமாக இருந்த காலம் அது. வகுப்பு ஆசிரியையாக இருந்த மஞ்சுபாஷினி டீச்சர், அவரது கணவர் வி.வி,ஆர் சார் எல்லாம் நல்ல உற்சாகத்தோடு சொல்லிக் கொடுப்பார்கள். தவறு செய்யும் மாணவர்களை அன்போடு திருத்துவார்கள். திரு வி.என்.வெங்கட்ராமன் என்ற  ஆங்கில ஆசிரியர் வகுப்பு அவ்வளவு சுவாரஸ்யமாகவும் உயர் தரத்தோடும் இருக்கும். தமிழய்யா மாரி அய்யா சார் அவர்கள்தான் எனக்கு தமிழ் மீது பிடிப்பை உண்டாக்கியவர். பெரியார் சீர்திருத்த தமிழ் எழுத்துக்களை எங்கள் பள்ளியில் முதலில் பயன்படுத்தியது நான்தான். அதனாலேயே அவருக்கும் என்னை மிகவும் பிடிக்கும்.

பள்ளியைத் தவிர வீட்டிலும் பாடங்கள் நடக்கும். எனது ஆங்கில அடிப்படையை வலுவாக்கியதில் மேற்கண்ட ஆசிரியர்களைத் தவிர எனது அக்காவிற்கும் முக்கிய பங்கு உண்டு. எட்டாவது இறுதித் தேர்வில் ஆங்கிலத்தில் முப்பத்தி ஒன்பது மதிப்பெண் வாங்கி ஜஸ்ட் பாஸ் செய்த நான் பத்தாவது பொதுத்தேர்வில் அதே ஆங்கிலத்தில் எண்பத்தி ஒன்பது மதிப்பெண் வாங்கினேன் ( 1980 ம் வருடம். அப்போது தஞ்சை மாவட்டத்தில் ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் 90 தான்.மாநிலத்திலேயே அந்தப்பாடத்தில் 92 தான் முதல் மதிப்பெண் என்று நினைவு) என்றால் அது என் அக்கா உள்ளிட்ட ஆசிரியர்களால்தான் சாத்தியமானது.

எஸ்.யு டீச்சரின் தம்பி என்பதால் அவர்களின் கௌரவத்தை பாதுகாக்க வேறு வழியே இல்லாமல் அமைதியான மாணவனாகவே இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்களின் வரலாற்று வகுப்பில் ஓரிரு முறை சில முரண்பாடுகளை விவாதித்துள்ளேன், தைரியமாக. ஒரு வரலாற்று ஆசிரியராக புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை இப்போதும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்தான் மாட்டிக் கொண்டேன். எல்லா ஆசிரியர்களையும் இனிஷியல் வைத்துத்தான் அழைப்பார்கள். மிகவும் போராடித்த ஒரு வகுப்பில் பிளேடு படம் போட்டு அந்த ஆசிரியரின் இனிஷியலை எழுதி பக்கத்து மாணவனிடம் காண்பித்தேன். அவன் சிரித்து விட்டான். இத்தனைக்கும் நாங்கள் இருந்தது முதல் பெஞ்ச் வேறு. ஆசிரியர் என்ன என்று கேட்க, அவரிடம் படத்தைக் காண்பித்து விட்டான். அவரும் சிரித்து விட்டார். ஆனால் அந்த படம் வகுப்பு முழுவதும் சுற்றுக்குச் செல்ல அவர் கடுப்பாகி வகுப்பை விட்டு வெளியேற்றி விட்டார். வகுப்புக்கு வெளியே நின்று நோட்ஸ் எடுப்பது போல பாவலா செய்ய உதவி தலைமை ஆசிரியர் பார்த்து விட்டு என்னையும் ஒரு திட்டு திட்டி, அவரையும் இதுக்காக பசங்கள ஏன் வெளியே அனுப்பறீங்க என்று சின்னதாக கடித்து விட்டு உள்ளே அனுப்பி விட்டார்.

திரு டி.எம்.ராஜகோபாலன் என்ற அந்த  உதவி தலைமை ஆசிரியர் அவரே மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டுதான் வகுப்பிற்கு வருவார். நல்ல கணித ஆசிரியரும் கூட.

அதே போல கெமிஸ்ட்ரி ஆசிரியர் கோவிந்தராஜன் சார் ராஜ்தூத் பைக்கில்தான் வருவார். பைக் வைத்திருந்த ஒரே ஆசிரியர் அவர்தான்.

எத்தனையோ நல்ல ஆசிரியர்கள் இருந்த அதே பள்ளியில்தான்.....

சரி அதை கடைசியில் எழுதுகிறேன்.

மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் படித்த மூன்று ஆண்டுகளும் பொற்காலம்தான்.

பல பாடங்களை சுவையோடு எடுத்த மனோஹரன் சார். பாஸ் என்று அன்பாகவே அழைக்கப்பட்ட ஹெச்.ஓ.டி வெங்கட் ராமன் சார், பொருளாதாரத்தை ஸ்பூன் வைத்து புகட்டிய முஸ்தபா சார் இவர்களை எல்லாம் மறக்கவே முடியாது. பகுதி நேர ஆசிரியராக வெங்கட சுப்ரமணியன் என்ற ஆடிட்டர் வருவார். தொழிலில் ஏராளமாக பொய் சொல்கிறேன், பொய்க்கணக்கு எழுதுகிறேன். அந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாகத்தான் வெறும் 125 ரூபாய்க்கு அக்கவுண்ட்ஸ் சொல்லித் தர வருகிறேன் என்பார் அவர். வாரம் மூன்று வகுப்பு உண்டு அவருக்கு.

திரு உப்பிலி என்பவர்தான் கல்லூரி முதல்வர். ரொம்பவுமே அப்பாவி. ஒரு முறை விடுதிகள் தினத்திற்கு சிறப்புரையாற்ற அப்போது யாதவா கல்லூரி முதல்வராக இருந்த திரு தமிழ்க்குடிமகன் அவர்களை அழைக்கலாம் என்றதற்கு தமிழ்க்குடிமகனின் அரசியல் பின்னணி எதுவும் தெரியாமல் ஒப்புக் கொண்டு விட்டார். அன்று திரு தமிழ்க்குடிமகன் இலங்கைப் பிரச்சினை முதற்கொண்டு ஏராளமான அரசியல் விஷயங்களை திமுக நிலையில் பேசி காங்கிரஸ் அரசை வேறு சாடி விட்டு மாணவர்கள் மத்திய,, மாநில ஆட்சிகளை மாற்றும் அளவிற்கு வீரமாக செயல்பட வேண்டும் என்று பேசி விட்டார். எங்கள் கல்லூரியின் தாளாளர் காங்கிரஸ்காரர்.

அவர் முதல்வரை டோஸ் விட்டிருக்கிறார் போலும். மறுநாள் முதல்வர் எங்களைக் கூப்பிட்டு தமிழ்க்குடிமகன் யார் என்று தெரிந்தே கூப்பிட்டு என்னை பிரச்சினையில் மாட்டி விட்டது சரியா என்று கேட்டபோது மௌனமாக நிற்பதைத் தவிர வேறு என்ன வழி உள்ளது? அதைக்கூட கோபமாக கேட்காத நல்ல மனிதர் அவர்.

இன்னொரு முக்கியமான பேராசியரும் உண்டு. அவரது வகுப்பின்போது பக்கத்து பையனோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போது மிகவும் கடிந்து கொண்டார். அந்த பையன் அப்போது மதுரை மேயராக இருந்த எஸ்.கே.பாலகிருஷ்ணனின் மகன் சூர்யபிரகாஷ். ஒரு இடைத்தேர்தலில் அதிமுக தோற்றிருந்தது. அதை வைத்து அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தேன். அவர் வகுப்பை விட்டு வெளியே போவதாக இருந்தால் போய் விடுங்கள் என்று சொல்ல, அட்டென்டஸ் கொடுத்துட்டா நாங்க ஏன் க்ளாசிற்கு வரோம் என்று கொஞ்சம் திமிராகவே பதில் சொன்னேன். ஐ.ஐ.எம் மில் எம்.பி.ஏ படித்து விட்டு கம்பெனி எக்ஸிகியூட்டிவாக போகாமல் நமக்கு வகுப்பு எடுக்க வந்து விட்டாரே என்று ஒரு அலட்சியம் எங்கள் செட் மாணவர்கள் அனைவருக்குமே உண்டு.

ஆனால் படித்து முடித்து எல்.ஐ.சி யில் வேலைக்கு சேர்ந்து தொழிற்சங்கப் பணிக்கு வந்து ஒரு கட்டத்தில் தென் மண்டல செயற்குழு உறுப்பினராகி ஒரு தென் மண்டல செயற்குழுக் கூட்டத்திற்காக மதுரை சென்றிருந்தேன். அப்போது மதுரை கோட்டத்தின் ஒரு முன்னணி தலைவரின் பணி நிறைவுப் பாராட்டு விழா. அதற்கு அவரும் வந்திருந்தார். அவருக்கு எல்லோரும் நல்ல மரியாதை கொடுத்து பேசுவதைப் பார்த்து அவர் யார் என்று தெரிந்தாலும் தெரியாதது போல பக்கத்தில் உட்கார்ந்திருந்த தோழரிடம் கேட்க அவர்தான் பேராசியர் மூட்டா ராஜூ, பல்கலைக் கழக ஆசிரியர்களை ஒருங்கிணைப்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டவர். அகில இந்திய அளவில் பொறுப்பில் உள்ளவர் என்று சொல்லும் போது நான் மிகவும் வெட்கப்பட்டேன். சே எவ்வளவு மோசமானவன் நான் என்று குற்ற உணர்ச்சியில் குறுகிப் போனேன். விழா முடிந்ததும் உடனடியாக அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு கல்லூரிக் காலத்தில் செய்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டேன்.

அவருக்கு என்னை நினைவிருக்கவில்லை. அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று சொல்லி விட்டு நீ தொழிற்சங்க இயக்கத்திற்கு வந்தது மகிழ்ச்சி என்றார். அதன் பின்பு அவரைப் பார்ப்பதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. பேராசிரியர் ராஜூவின் மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் இப்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

இன்னொரு முக்கியமான ஆசிரியர் பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா?

என் மாமனார் திரு கோபாலன் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகும் அவரது கல்விப்பணி நிற்கவில்லை. பேரன் பேத்திகளுக்கு சொல்லிக் கொடுப்பதிலேயே தன் நேரத்தை முழுமையாக செலவிடுபவர். என் மகன் பத்தாவதில் நல்ல மதிப்பெண் பெற்றதற்கு அவரது கடுமையான உழைப்பு முக்கியக் காரணம். இதோ எண்பது வயதை நெருங்கும் போதும் என் சகலையின் எட்டு வயது மகனோடு அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறார். 

இப்போதும் கூட அவர் கும்பகோணம் சென்றால் ஏராளமான அவர்
மாணவர்கள் கோபு சார் என்று மரியாதையோடு தங்கள் வீட்டில்
தங்க வைத்து உபசரிப்பார்கள். எங்கள் நிறுவனத்தில் நான்காம்
பிரிவு ஊழியர்கள் பணி நியமனத்திற்காக நாங்கள் வகுப்புக்கள்
எடுத்த போது அவர்தான் கட்டுரைகள் எழுதிக் கொடுத்தார்.

என்னுடைய கசப்பான அனுபவத்தையும் பதிவு செய்தே ஆக வேண்டும். ஆசிரியர்கள் என்ற புனிதமான தொழிலுக்கு களங்கமாக கறை சேர்த்த இருவர்கள் பற்றி எழுதவில்லையென்றால் எனக்கு தூக்கம் வராது. பனிரெண்டாம் வகுப்பில் ஒருவர் அறிவியல் ஆசிரியர், இன்னொருவர் கணித ஆசிரியர். சம்பளத்தைப் போல பல மடங்கு ட்யூஷனில் சம்பாதித்தவர்கள். காலை ஐந்து மணி முதல் ஒன்பது மணி வரை, மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை தொழிற்சாலை போல பல ஷிப்டுகளில் ட்யூஷன் எடுப்பவர்கள்.

என் அக்கா கணவரே கணித ஆசிரியர். அதனால் ட்யூஷன் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆனாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ட்யூஷ்னில் சேரச்சொல்லி மிரட்டிக் கொண்டே இருப்பார்கள். காலாண்டு தேர்வு முடிந்து ப்ராக்டிகல் தேர்வுக்காக லேபில் இருந்தபோது கணித ஆசிரியர் அங்கே வந்தார். நீ வெறும் 111 மார்க்தான் வாங்கியிருக்க. ட்யூஷனுக்கு வரலயினா பப்ளிக் எக்ஸாமில் உன் நெத்தியில இந்த மார்க் வந்திரும் என்றார்.

நான் உடனடியாக ட்யூஷனில் சேர்ந்தேன்.

அவரிடம் அல்ல, ஒரு ஆர்வத்தில் நான்கைந்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு வேலையில்லா பட்டதாரியிடம். வேலையில்லா பட்டதாரி என்று சொல்வது கூட தவறு. ஒரு பெரிய விவசாயி அவர். மாலை நேரங்களில் வகுப்பெடுப்பார். அவரிடம் ட்யூஷன் சேர்ந்ததுதான் என் வாழ்வின் முதல் போராட்ட நடவடிக்கையும் கூட.

ஆனால் அதன் விளைவு ப்ராக்டிகல் மார்க்கில் வெளிப்பட்டது. 
கணித ஆசிரியரின் கூட்டாளியான அறிவியல் ஆசிரியர் வகுப்பில்
அசிங்கப்படுத்திக் கொண்டே இருப்பார். என் அக்கா அவரது சக 
ஊழியராக இருந்தும் அதைப்பற்றியெல்லாம் அந்த மனிதன்
கவலைப்படவே இல்லை. அதனுடைய உச்சகட்டமாக
இன்டர்னல் மார்க்கில் இருபத்திற்கு பத்து மார்க் மட்டுமே கிடைத்தது. 

கணித ஆசிரியரோ எல்லா ரிவிஷன் டெஸ்டுகளிலும் பெயில்
மார்க்கோ இல்லை ஜஸ்ட் பாஸ் மார்க்தான் போடுவார். 
பொதுத்தேர்வில் கணிதத்தில் 148 மார்க் வாங்கினேன். அந்த
மதிப்பெண்ணை பள்ளியில் வாங்கியதே கிடையாது. 

இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இன்று பெருகி வருவதும் கவலையளிக்கிற ஒரு விஷயம்.

கல்லூரிக்குப் பிறகு எனக்கு வாழ்க்கையில் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தது, இன்னும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பது எல்லாமே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் பல்கலைக் கழகம்தான். சமூகம், பொருளாதாரம், அரசியல், வர்க்கப்பார்வை என்று இன்னும் இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவனாக கற்றுக் கொண்டே இருக்கிறேன். தோழர்கள் சரோஜ் சவுத்ரி, சுனில் மைத்ரா, மான் சந்தா, சந்திர சேகர் போஸ், என்.எம்.சுந்தரம், ஆர்.கோவிந்தராஜன், கே.நடராஜன், எஸ்.ராஜப்பா, கே.வேணுகோபால், அமானுல்லாகான், இ.எம்.ஜோசப், இலக்குவன், ஏ.ஆர்.கல்யாணசுந்தரம், போன்ற எண்ணற்ற பேராசான்களைக் கொண்டது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் பல்கலைக் கழகம்.  

சரி சின்னதா இரண்டு காமெடி சம்பவம் சொல்லி இதை முடிச்சுடலாமா?

கல்லூரி விடுதியில் ஒரு பேராசிரியர், பெயர் வேண்டாம். டென்னிகாய்ட் விளையாடுகையில் அவர் கண்ணில் கொசு விழுந்து விட்டது.  மருத்துவரிடம் கூட்டிப் போனோம்.

அவர் பேசியதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லி விடுகிறேன்.

  Doctor, I am Very Glad to Meet You. I am ...................................... B.Com, MBA working as Assistant Professor in the Faculty of Business Administration in Sourashtra College, Vilachery, Madurai – 20. When I was playing tennicoit, One Mosquito கண்ணுக்குள விழுந்துருச்சு “

அடுத்தது ஒரு அலுவலக விழா.

தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரி ஆசிரியர் தொழிலின் உன்னதம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

“ இந்தியா சுதந்திரம் பெற்றதும் நேருவும் காந்தியும் படேலும் பால கங்காதர திலகரிடம் சென்றார்கள். உங்களுக்கு என்ன பதவி வேண்டும்? பிரதமராக விரும்புகிறீர்களா? ஜனாதிபதியாக வேண்டுமா? எது வேண்டுமோ சொல்லுங்கள். உங்களுக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு” என்று வரலாற்றை தவறாக சொல்லிக் கொண்டு இருந்தார். பால கங்காதர திலகரோ எனக்கு எந்த பதவியும் வேண்டாம், நான் ஒரு ஆசிரியராக இருப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்று சொன்னார், அவ்வளவு முக்கியமானது ஆசிரியர் பணி என்று அவர் சொல்லிக் கொண்டே போக.

அவருக்கு அடுத்தபடியான நிலையில்  இருந்த ஒரு அதிகாரிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நான் அரங்கை விட்டு வெளியே வந்து விட்டேன்.

அந்த குறுஞ்செய்தி இதுதான்.

“ சுதந்திரம் கிடைப்பதற்கு இருபத்தி ஐந்து ஆண்டுகள் முன்பே பால கங்காதர திலகர் இறந்து விட்டார்”

  

4 comments:

  1. நல்ல அனுபவப் பதிவு; சுவையானது.

    உங்களிடம் பல முறை கேட்க நினைத்துக் கேட்காமலே இருக்கும் ஒரு கேள்வி.....

    வார இதழ்களில் நிறைய ஒரு பக்கக் கதைகள் எழுதிய...எழுதிக்கொண்டிருக்கும் எஸ்.ராமன் நீங்கள்தானா?

    விரும்பினால் பதில் சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. திரு காமக்கிழத்தன் - வருகைக்கு நன்றி, அந்த ஒரு பக்கக் கதைகள் எழுதும் ராமன் நான் இல்லை. சரி உங்கள் பெயர்க் காரணம் என்னவோ?

    ReplyDelete
  3. நன்றி நண்பரே.

    பிறர் மனதில் நிலையான இடம் பெறும் வகையில் முற்றிலும் புதுமையான ’வலைப் பெயர்’ வைத்துக்கொள்ள விரும்பியதன் விளைவு இப்பெயர்.

    ‘கிழத்தி’ பழைய சொல். கிழத்தனை உருவாக்கி, ‘காமத்’துடன் இணைத்தேன்.

    கிழவன் என்னும் சொல்லுக்குரிய பொருள்கள்தான் கிழத்தனுக்கும்[கிழத்தி-தலைவி, உரிமையுடயவள்].

    காமத்துக்குத் தலைவன், அதாவது, காம உணர்வைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்று உணர்த்தும் வகையில் இப்பெயர் அமைந்துள்ளது.

    இது சாத்தியமா என்பது வேறு. பெயரைக் கேள்விப்பட்ட எவரும் மறக்கமாட்டார்கள் என்பதில் ஒரு மகிழ்ச்சி.

    மற்றபடி, என் பதிவுகளுக்கும் என் பெயருக்கும் சம்பந்தமே இல்லை.காம உணர்வு பற்றி எழுதும்போதும்கூடப் பண்பாடு பிறழாமல்தான் எழுதுவேன்.

    மீண்டும் நன்றி நண்பரே.



    ReplyDelete
  4. நல்ல பதிவு தோழரே. இதை படித்ததும் எனக்கு என்ன பள்ளிப் பருவ ஞாபங்கள் வந்தன. என் ஆசிரியர்களை நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete