Friday, September 20, 2013

பவர் ஸ்டார் மோடி சோஷலிஸ்டா? யூ டூ கிருஷ்ணய்யர் ?
மிகுந்த வருத்தத்தோடும் ஆதங்கத்தோடும்தான் இந்த கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

பல வருடங்களாக யாரை ஆதர்சமாகவும் முன்னுதாரணமாகவும் கருதி கொண்டாடினாமோ, அந்த நபர் சறுக்கி விழுகிற போது வரும் கோபமும் வருத்தமும் அதிர்ச்சியும் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு சோகம். வேதனை. முதுகில் குத்தப்பட்ட ரணம் மிகவும் வலிக்கிறது.

இவரா ? இவரா இப்படி ? என்று நம்பிக்கையே இல்லாமல் மீண்டும் மீண்டும் நமக்கு நாமே கேட்டுக் கொண்டாலும் கூட சுட்டெரிக்கும் யதார்த்தம், ஆம், அது உண்மைதான் என்று முகத்தில் அறைந்து சொல்கிற போது நிலை குலைந்து போவோம்.

உலகின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அரசான தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு அவர்களின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர். நிலச் சீர்திருத்தங்களை செய்வதற்கான சட்ட வடிவங்களை உருவாக்கியவர். தெளிந்த மார்க்சிய ஞானம் கொண்டவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக முற்போக்கான பல தீர்ப்புக்களை வழங்கியவர், முதலாளிகளுக்கு, அரசாங்கத்திற்கு, நிறுவனங்களுக்கு ஆதரவாக மற்ற நீதிபதிகளின் தீர்ப்பு அமைந்தாலும் இவரின் தீர்ப்பு தனித்தன்மையாக உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக இருக்கும் என்ற நிலையை உருவாக்கியவர், பணி நிறைவிற்குப் பின்பு முக்கியமான பிரச்சினைகளில் நியாயத்திற்காக குரல் கொடுத்தவர், மரண தண்டனைக்கு எதிரான போராளி என்று புகழ் பெற்றவர்.

இத்தனை பெருமைகள் இருந்ததாலும் திரு வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களே, ஒற்றை வார்த்தை உங்களின் அனைத்து புகழையும் முற்றிலுமாக சிதைத்து விட்டது. புயல் தாக்கிய வாழைத்தோட்டம் போல உங்கள் நற்பெயரும் பாரம்பரியமும் சின்னாபின்னமாகி தகர்ந்து அழிந்து விட்டது.

சிறுபான்மை மக்களை கொன்று குவித்து அதற்காக சிறிதளவு குற்ற உணர்வு கூட இல்லாமல் வளைய வரும் ரத்த வெறியன் நரேந்திர மோடி ஒரு சோஷலிஸ்டா? ஹிட்லரின் வாரிசு

முதலாளித்துவ நிறுவனங்களும் முதலாளித்துவ ஊடகங்களும் தலையில் தூக்கி வைத்து கூத்தாடும் அளவிற்கு அவர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கி அவர்களின் சுரண்டல் அமோகமாக கொழிக்க வழிவகுத்துத் தந்துள்ள உலகமயக் கொள்கையின் அனுதாபி மோடியை உங்களால் எப்படி சோஷலிஸ்ட் என்று சொல்ல முடிகிறது?

அமைதிப்படை அமாவாசை தான் அமைச்சராக வேண்டும் என்பதற்காக ஜாதிக் கலவரத்தை தூண்டி விடுவான். தனது உயிருக்கு ஆபத்து இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க போலி என்கவுண்டர்கள்  நடத்தி பல உயிர்களை கொன்று குவித்த செய்தியை மோடியின் கூட்டாளி வன்ஸாரா அம்பலப்படுத்தி சில நாட்கள்தானே ஆகிறது. இந்தச் செய்தி உங்கள் காதில் விழவே இல்லையா?

அமிதாப் பச்சன் குரலை பயன்படுத்தி மோசடி, பதினைந்தாயிரம் பேரை காப்பாற்றியதாய் ராம்போ வேட நாடகம், துப்புறவு செய்வது போல ஒரு மோசடிப் புகைப்படம் என்று உலகின் ஒரு மிகப்பெரிய மோசடிப் பேர்வழியாய் மோடி அடையாளம் காணப்பட்டது கூட உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையா?

பவர் ஸ்டார் சீனிவாசனை விட மோசமான விளம்பர மோகத்தில் செயல்படும் நரேந்திர மோடியை சோஷலிஸ்ட் என்று அழைக்கும் அளவிற்கு நீங்களும் அந்த மாய வலையில் சிக்கிய சிலந்தியாக மாறி விட்டீர்களா?

நீங்கள் படித்த மார்க்சியம் இதுதானா?

உங்களை கொண்டாடிய, நீங்கள் இணைத்துக் கொண்டிருந்த இயக்கத்திற்கு எதிராக கொஞ்சம் நஞ்சினை ஒரு வருடம் முன்பு கக்கிய போதே கொஞ்சம் நெருடல் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் தைத்தது. ஆனால் இப்படி தடுமாறுவீர்கள், தடம் மாறுவீர்கள் என்று யாரும் சிந்தித்ததே இல்லை.

வயதானால் வரும் தடுமாற்றமா ? இல்லை மறதி நோயா?
மார்க்ஸ் சொன்ன மாற்றம் உங்கள் வாழ்வில் இவ்வளவு மோசமாகவா நிகழ வேண்டும்?

யூ டூ ப்ரூட்டஸ்?
இல்லையில்லை
யூ டூ கிருஷ்ணய்யர்?

3 comments:

  1. நாம் இப்படி தான் சிலரை நம்பி ஏமாறுக்கிறோம்

    ReplyDelete
  2. முதலில் ஒரு விஷயம் மற்ற பொது உடமை தோழர்களை போல் வறட்டு சித்தாந்தவாதி அல்ல அய்யர்.இன்றைய கால,தேச வர்த்தமானங்களை கணக்கில் கொண்டு அவருடைய கருத்தை கூறியுள்ளார்.அனைத்தையும் முடிவு செய்வது மக்கள்.இந்திரா காந்தி,கருணாநிதி,சி.சுப்பிரமணியம் போன்றவர்களை முற்போக்கு என்றும் காமராஜை பிற்போக்கு என்றும் தோழர்கள் ஜாதி பிரித்தபோது அய்யர் காமராஜைபற்றி சொன்னதை இப்போது நினைவு கூறுவோம்.kaamaraj is a commanman 's man with an uncommon commonsense .

    ReplyDelete
  3. மோடியை பிரதம வேட்பாளராக ஏற்க மறுத்த அத்வானி ஒரே நாளில் அந்தர் (அத்வானி?) பல்டி அடித்து மோடியை மிக சிறந்த நிர்வாகி என பாராட்டியபோதே ஏதோ உள்குத்து நடந்துள்ளது என சந்தேகித்தேன். தற்பொழுது பூனை குட்டி வெளியில் வந்து விட்டது.

    ReplyDelete