Thursday, September 26, 2013

எந்தன் இதய அஞ்சலி, ஆனாலும் இது போராட்ட வழிமுறை இல்லை

நெஞ்சைப் பிளக்கும் அந்த செய்தியை இப்போதுதான்
அறிந்தேன்.



ஆதித்தமிழர் பேரவையின் பொறுப்பாளரும் தமிழ்நாடு
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர்களில்
ஒருவருமான தோழர் பி.நீல வேந்தன் நேற்று நள்ளிரவு
தீக்குளித்து இறந்து போனார் என்பதே அந்த செய்தி.

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆறு சதவிகிதமாக உயர்த்த
வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம்
எழுதி விட்டு அவர் தீக்குளித்துள்ளார்.

 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பல மையங்களில்
டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி
மையங்களை நடத்தி வருகிறது. அதில் பல மையங்களை
எங்கள் சங்கம் பொறுப்பேற்று நடத்தி வருகின்றது. வேலூர்
மற்றும் கடலூர் மையங்களை நடத்தும் பொறுப்பை எங்களது
வேலூர் கோட்டச் சங்கம் எடுத்துக் கொண்டுள்ளது.

கடலூர் மையத்தை துவக்கி வைப்பதற்காக தோழர் நீல வேந்தன்
வந்திருந்தார். அப்போதுதான் அவரோடு அறிமுகம். மிகவும்
சிறப்பாக அவரது உரை அமைந்திருந்தது. அதன் பிறகு இரவு
உணவு சாப்பிடும் போது விவாதித்துக் கொண்டிருந்தோம்.
அவரது சிந்தனைப் போக்கு மிகவும் தெளிவாக, தீர்க்கமாக
இருந்தது. அவரைப் பார்க்க வந்திருந்த ஆதித் தமிழர் இயக்கப்
பேரவைத் தோழர்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய பணிகள்
குறித்து அறிவுறுத்தியதில் திட்டமிடலும் இருந்தது.

அதன் பின்பு எங்களது சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும்
நடக்கும் வெண்மணி சங்கமம் நிகழ்ச்சியிலும் அவர் கடந்தாண்டு
பங்கேற்றார். தலித் மக்கள் விடுதலை குறித்த சரியான புரிதல்
கொண்டிருந்ததை அவர் உரை உணர்த்தியது.

அவர் எந்த மக்களுக்காக இத்தனை நாட்களாக போராடினாரோ,
அந்த மக்களை தவிக்க விட்டு போய்விட்டார்.

தெளிவான சிந்தனை கொண்ட அந்த இளைஞர் இப்படி ஒரு
முடிவை எடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை. மிகவும்
அதிர்ச்சியாக உள்ளது.

தோழர் நீல வேந்தனுக்கு என் இதய அஞ்சலி, வீர வணக்கம்.

ஆனாலும் சொல்வேன்

இது போராட்ட வழிமுறை இல்லை.

1 comment:

  1. நல்ல சிந்தனையாளர்கள் கூட சில அரிதான தருணங்களில் தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள் என்பதே இதன் சாராம்சம்.

    ReplyDelete