Wednesday, September 11, 2013

அன்று வெள்ளைக்காரர்கள், இன்று கொள்ளைக்காரர்கள். பாரதி இறந்தது நன்மைக்கே




தன் அறிவை, ஞானத்தை தன் தாய்த் திருநாட்டின் விடுதலைக்காகவும்
வளர்ச்சிக்காகவும் பெண்களின் மேம்பாட்டிற்காகவும் பாடித் தீர்த்த
முண்டாசுக் கவிஞனின் நினைவு நாள் இன்று.

அவனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பத்து பேர் மட்டுமே
என்பது பாரதிக்கு இழுக்கல்ல. பாரதி போன்ற புரட்சிக் கவியை
கண்டுகொள்ளாத தேசத்திற்குத்தான் இழுக்கு.

என்னவெல்லாம் கனவு கண்டான் அவன் தன் பாடல்கள் மூலம்.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?

என்று எம்.ஜி.ஆர் ஒரு பாட்டுக்கு வாயசைத்து இருப்பார்.
அது போல எண்ணற்ற செல்வங்கள் கொண்டதுதான் இந்த
தேசம்.

அந்தச் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டு போனவர்கள்
வெள்ளையர்கள். வணிகம் செய்ய வந்து மக்கள் வாழ்வைப் 
பறித்தவர்கள். பொன்னும் பொருளுமாய் கப்பல் கப்பலாக 
இங்கிலாந்து சென்றது. 

அதைப்பார்த்து பாரதி வெகுண்டெழுந்து கேட்டான்

பொழுதெல்லாம் எம் செல்வம் கொள்ளை போகவோ? நாங்கள் சாகவோ?

ஆனால் இன்று 

இருக்கும் செல்வங்கள் எல்லாம் கொள்ளை போகிறது
அம்பானிக்கும் பிர்லா வகையறாக்களுக்கும் வெளி நாட்டு
கம்பெனிகளுக்கும். வெள்ளையன் திருடிச் சென்றான் என்றால்
இன்றோ ஆள்பவர்களே அவர்கள் கையில் திறவுகோலைத் 
தந்து கொடுத்தனுப்புகின்றார்கள்.


" மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?



என்ன ஒரு பேராசை பாரதிக்கு! 
உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அவனின் வாரிசுகள்
சட்டம் கொண்டு வந்து இருக்கும் உணவையும் தட்டிப் பறிப்பார்கள்
என்று தெரியாத அப்பாவிக் கவிஞன் அவன்.


மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ? "


முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

ஏழையென்றும் அடிமையென்றும் 
எவரும் இல்லை ஜாதியில்.
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே!

முப்பது கோடிகள் நூற்றிருபது கோடிகளாக உயர்ந்து விட்டது.
அன்று வெள்ளையனுக்கு எதிராக போராடும் போது  இந்தியன்
என்றிருந்த உணர்வு என்றும் நீடிக்கும் என்ற நல்லெண்ணம்
பாரதிக்கு. தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றால்
ஜகத்தை அழிக்க ஆசைப்பட்ட கவிஞனல்லவா பாரதி!

பாரதி இறந்து போனதே நல்ல விஷயம். இல்லையென்றால் 
ஜாதியாக, மதமாக, இனமாக, மொழியாக மக்களைப் பிரித்து
அதிலே குளிர்காய நினைக்கும் இன்றைய கொள்ளைக்காரர்களைப்
பார்த்து நெஞ்சு வெடித்து அல்லவா இறந்திருப்பான்? அந்த
வலியாவது இல்லாமல் போனதே அவனுக்கு! 

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வன்மைகள் செய்வோம்

பாரதியின் பாடலுக்கு நம் மன்மோகன்சிங், ஜெ பாடும்
எதிர்ப்பாட்டு வேறு எப்படி இருக்க முடியும்?
 
ஆயுதங்கள் வாங்குவோம், அதிலே ஊழல்கள் செய்வோம்,
முன்னோர் வைத்த ஆலைகளை விற்போம்,
திருடர்கள் வாழ்ந்திட கல்விச்சாலைகளை அவரிடம் சேர்ப்போம்.
டாஸ்மாக் திறந்து அனைவரும் சோம்பிக்கிடக்கச் செய்வோம்.
வாய் திறக்க மாட்டோம். திறந்தால் பொய் மட்டுமே சொல்வோம்
 
காவியம் செய்வோம்! நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்லருலை வளர்ப்போம்!
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழில் அனைத்துமுவந்து செய்வோம்.

காடுகளை வெட்டுவோம், அதற்கு கமிஷன் பெருவோம்.
ஓவியக்கண்காட்சியை உடைத்து நொறுக்குவோம்
சினிமா எடுக்க வந்தால் தியேட்டரை கொளுத்துவோம்
ஊறுகாயும் சிப்ஸும் தயாரிக்க அமெரிக்கரை அழைத்திடுவோம்


மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்.

ஆண்களோடு பெண்களும்
சரி நிகர் சமானமாக 
வாழ்வம் இந்த நாட்டிலே

மாதரைக் கொளுத்தும் தேசமாய் மாறிப்போனதை
வேடிக்கை பார்க்கும் விந்தை மனிதர்களாய்
இன்றைய ஆட்சியாளர்கள். அத்தி பூத்தது போல
அதிசயமாய் நல்லதொரு பரிந்துரை வந்தாலும்
அதை அலட்சியப்படுத்தும் அவல நிலை.

சரி நிகர் சமானமாக அல்ல, மூன்றில் ஒரு பங்கு
தொகுதிகளைக் கொடுக்கக் கூட மனமில்லாத
பேராசை ஆண்களின் விருப்பத்திற்கு அடி பணியும்
அரசாக இன்றைய கொள்ளைக்காரர்களின் ஆட்சி மலர்ந்துள்ளது. 


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- வீணில்
உண்டு களித்திருப்போரை  நிந்தனை செய்வோம்.

ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான்  வெள்ளறிக்கா,
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்.

இது நாட்டுப்புறப்பாட்டு.
அவனாவது விலைதான் நிர்ணயம் செய்தான்.
நம்ம தலைப்பாக்கட்டோ வேறு வேலைக்கு போ என விரட்டுகிறார். 

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்.
ஆனால் செல்வந்தர்கள் செய்யும் தவறுகளுக்கு சட்டங்கள்
பொருந்தாது. அவ்வளவுதான். 

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்- இது
நமக்கே உரிமையாம் என்பதெறிந்தோம். இந்த
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்.

இந்தியா நமது நாடு என்ற புரிதல் நமக்கு உள்ளது.
ஆனால் நம்மை ஆள்பவர்களுக்குத்தான் இல்லை.
இன்னும் அடிமையாகவே தங்களைக் கருதிக் கொண்டு
தேசத்தையும் அடிமைப்படுத்துகின்றனர்.

ஒரே ஒரு வித்தியாசம். முன்பு இங்கிலாந்திடம் 
இப்போது அமெரிக்காவிடம்.

ஒரு விதத்தில் பார்த்தால் இந்தியாவை சுரண்டித்தின்ற
வெள்ளையர்கள், ஊழல் முடை நாற்றமெடுக்கும் மக்கள்
விரோத இன்றைய ஆட்சியாளர்களை விட எவ்வளவோ மேல்.

ஆம் அவன் இந்தியாவைக் கொள்ளையடித்தான்
இங்கிலாந்து வாழ,
இங்கிலாந்தை நேசித்த தேச பக்தன் அவன்.

இவனும் கொள்ளையடிக்கிறான்
அமெரிக்கா வாழ,
இவர்கள் இதயத்துடிப்பெல்லாம் அமெரிக்காவிற்காக.

நல்ல வேளை பாரதி இறந்து போனார். 
 


2 comments:

  1. பாரதியார் பற்றி நல்ல விளக்கம்.நடிகைகளுக்கு கோயில்
    கட்டவுட் பாலாபிஷேகம் காதல் தற்கொலை கற்பழிப்புகள் --பாரதி இருந்தால் நெஞ்சு பொறுக்காது.
    இரத்தக் கண்ணீர் நெஞ்சில் உதிரம் கொட்டும்.நீங்கள் சொன்னபடி பாரதி இல்லை.நேர்மை உறங்கும் நேரம்.

    ReplyDelete
  2. நல்ல வேளை பாரதி இறந்து போனார்.
    >>
    இருந்திருந்தா, நாம இப்படி நடக்க மாட்டோம்! சரியான வழிக்காட்டுதல் இல்லாமல் போனதால் வந்த வினைதான் இது!

    ReplyDelete