Tuesday, September 3, 2013

அந்தப் பெண்ணை துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தது, ஆனால்
அனைத்து பெண்களும் கல்வி பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பாகிஸ்தான் மாணவி மலாலா யூசுஃபஸாய் தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். அவருக்கு ஆதரவாக உலகெங்கும் குரல்கள்  எழுந்தன. தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பின்பு உயிர் பிழைத்த மலாலா, ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. ஆழமானதும் கூட. 

துப்பாக்கியின் தோட்டாக்கள் துளைத்த போதும் உறுதி மாறாமல்
தனது இலக்கை நோக்கி பயணம் செல்லும் அந்தப் பெண்
ஐ.நா சபையில் ஆற்றிய  உரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

மௌனத்திலிருந்து எழுந்த ஆயிரம் குரல்கள்

கருணை மிக்க கடவுளின் பெயரால், ஐக்கிய நாடுகள் சபையின் மரியாதைக்குரிய பொதுச்செயலாளர் திரு பான்.கி.மூன் அவர்களே, பொதுச்சபையின் மரியாதைக்குரிய தலைவர் திரு உக் ஜெர்மீ அவர்களே, சர்வதேசக் கல்விக்கான ஐ.நா தூதர் திரு கார்டன் பிரௌன் அவர்களே, மரியாதைக்குரிய பெரியோர்களே, எனது அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, வெகுநாட்களுக்குப் பிறகு இன்று பேசுவது எனக்கு மிகப் பெரிய கௌரவம். மதிப்பு மிக்க மனிதர்களோடு இங்கே இருப்பது என் வாழ்நாளில் ஒரு மிகச்சிறந்த தருணம்.  

எனது உரையை எங்கிருந்து துவக்குவது என்று தெரியவில்லை. நான் என்ன கூறுவேன் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நம் அனைவரையும் சமமாய் கருதும் கடவுளுக்கு நன்றி. நான் விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. அளவு நம்பவே முடியாத அளவிற்கு மக்கள் என் மீது பாசத்தை வெளிப்படுத்தினர். நான் நலம் பெற வேண்டும் என்ற வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் உல்கெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கில் நான் பெற்றேன். அனைவருக்கும் என் நன்றி. உங்களது வார்த்தைகள் மூலம் என்னை ஊக்குவித்த குழந்தைகளுக்கு நன்றி. தங்கள் பிரார்த்தனைகள் மூலம் என்னை வலிமை பெறச்செய்த மூத்தவர்களுக்கு நன்றி. பாகிஸ்தானிலும் இங்கிலாந்திலும் எனக்கு சிகிச்சை அளித்த செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி. நான் நலம் பெறவும் எனது வலிமையை மீண்டும் பெறவும் உதவிய ஐக்கிய அரபுகள் எமிரேட் அரசிற்கும் என்னது நன்றி.

திரு பான்.கி.மூன் அவர்களின் சர்வதேச கல்வி குறித்த முன்முயற்சிகளையும் ஐ,நா வின் சிறப்புத் தூதர் திரு கார்டன் பிரவுன் அவர்களின் பணிகளையும்  நான் முழுதுமாக ஆதரிக்கிறேன். தொடர்ந்து அவர்கள் அளித்து வரும் வழிகாட்டுதல்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். நாம் செயல்பட  அவர்கள் தொடர்ந்து எழுச்சியூட்டுகிறார்கள்.

அன்பான சகோதர, சகோதரிகளே, ஒன்றை நினைவு கொள்ளுங்கள். மலாலா தினம் என்பது எனது நாளல்ல. தங்கள் உரிமைக்காக குரல் எழுப்பிய ஒவ்வொரு சிறுவனின் சிறுமியின் தினம். நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மனித உரிமைகளுக்காக பேசுவது மட்டும் இல்லாமல் கல்வி, அமைதி, சமத்துவம் போன்ற தங்கள் இலக்குகளை அடைய போராட்டக் களத்திலும் உள்ளார்கள். தீவிரவாதிகளால் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கானவர்கள் காயம் பட்டுள்ளனர். நான் அவர்களில் ஒருத்தி. பலரில் ஒருத்தியாக நான் உங்கள் மத்தியில் நிற்கிறேன்.

நான் எனக்காக மட்டுமல்லாது அனைத்து சிறுவர்கள், சிறுமிகள் சார்பாக பேசுகிறேன். நான் குரலை உயர்த்துவது சத்தம் போடுவதற்காக அல்ல, பேச முடியாதவர்களும் கூட கேட்கட்டும் என்பதற்காக பேசுகிறேன். தங்கள் உரிமைகளுக்காக போராடியவர்களுக்காக, தாங்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற உரிமைக்காக, தாங்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என்ற உரிமைக்காக, தங்களின்  சமத்துவ உரிமைக்காக, தங்களின் கல்வி உரிமைக்காக போராடியவர்களுக்காக நான் பேசுகிறேன்.  

அன்பான நண்பர்களே, 9 அக்டோபர் 2012 அன்று தாலிபன்கள்  என்னை நெற்றியின் இடது பக்க நெற்றியில் சுட்டார்கள். என் நண்பர்களையும் கூட சுட்டார்கள். அவர்களது தோட்டாக்கள் எங்களை மௌனமாக்கும் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர். பிற்கு அந்த மௌனத்திலிருந்து ஆயிரம் குரல்கள் எழும்பின. எங்களின் இலக்குகளுக்கும் இலட்சியங்களுக்கும் தடை உருவாக்கி விடலாம்  என்று தீவிரவாதிகள் நினைத்தார்கள். அச்சம், பலவீனம், நம்பிக்கையின்மை ஆகியவை மடிந்து போய் வலிமையும் சக்தியும் தைரியமும் பிறந்தது. நான் அதே மலாலாதான். எனது ஆசைகள், கனவுகள், நம்பிக்கைகள் எதிலும் மாற்றம் இல்லை.

அன்பான சகோதர, சகோதரிகளே, நான் யாருக்கும் எதிரானவள் அல்ல, தாலிபனுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் பழி தீர்த்துக் கொள்ளவோ இல்லை வேறு எந்த தீவிரவாதக்குழுவிற்கு எதிராக பேசவோ நான் வரவில்லை. ஒவ்வொரு குழந்தையினுடைய கல்வி கற்கும் உரிமை குறித்து பேச நான் இங்கே வந்துள்ளேன். அனைத்து தீவிரவாதிகளுடைய, அதிலும் முக்கியமாக தாலிபன்களுடைய மகன்களும் மகள்களும் கல்வி பெற வேண்டும்.

என்னை சுட்ட தாலிப்பைக் கூட நான் வெறுக்கவில்லை. என் கையிலே துப்பாக்கி இருந்து அவர் என் எதிரில் நின்றால் கூட நான் அவரை சுட மாட்டேன். கருணைக்கடவுள் முகமது, ஏசு கிறிஸ்து, புத்த பகவான் ஆகியோரிடம் இருந்து நான் அன்பைக் கற்றுள்ளேன். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மாண்டேலா, முகமது அலி ஜின்னா ஆகியோருடைய பாரம்பரியத்திலிருந்து நான் பெற்றுக் கொண்டது இது. காந்திஜி, பாட்சாகான், அன்னை தெரசா ஆகியோரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட அஹிம்சைத் தத்துவம் இது. என் தாயும் தந்தையும் போதித்த மன்னிக்கும் குணம் இது. அமைதியாய் இரு, அனைவரையும் நேசி என்றே எனது ஆன்மா எனக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.

அன்பான சகோதர, சகோதரிகளே, இருளைப் பார்க்கிறபோதுதான் நாம் வெளிச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். நாம் மௌனமாக்கப்படும் போதுதான் நம் குரலின் முக்கியத்துவத்தை அறிகிறோம். அது போலவே பாகிஸ்தானின் வட பகுதியான ஸ்வாட் பகுதியில் உள்ள நாங்கள் துப்பாக்கிகளை பார்க்கிறபோதுதான் பேனாக்களின் புத்தகங்களின் வலிமையை உணர்கிறோம். வாளினை விட பேனாவின் முனை சக்தியானது என்ற பொன்மொழி மிகவும் உண்மையானது. தீவிரவாதிகள் பேனாக்களையும் புத்தகங்களையும் பார்த்து அஞ்சுகிறார்கள். கல்வியின் வலிமை அவர்களை அச்சுறுத்துகிறது. அவர்கள் பெண்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். பெண்களின் குரலின் வலிமை அவர்களை நடுங்க வைக்கிறது. அதனால்தான் அவர்கள் க்வெட்டாவில் சமீபத்தில் பதிநான்கு அப்பாவி மருத்துவ மாணவர்களைக் கொன்றார்கள்.  அதனால்தான் அவர்கள் கைபர் புக்தூன்க்வாவிலும் ஃபாடாவிலும் ஏராளமான ஆசிரியைகளையும் போலியோ ஊழியர்களையும் கொன்றுள்ளனர். அதனால்தான் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடங்களை தகர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எங்கள் சமூகத்தில் நாங்கள் கொண்டு வர விழையும் சமத்துவத்தையும் மாற்றத்தையும் கண்டு அஞ்சுகிறார்கள்.

எங்கள் பள்ளியில் ஒரு மாணவனைப் பார்த்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்டது எனக்கு நினைவில் உள்ளது. தாலிபன்கள்  ஏன் கல்வியை எதிர்க்கிறார்கள் என்ற கேள்விக்கு அவன் சொன்ன பதில் மிகவும் எளிமையானது. அவன் தன் புத்தகத்தை காண்பித்து இதனுள்ளே என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தாலிபன்களுக்கு தெரியாது என்றான். பெண்கள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதால் அவர்களை நரகத்திற்கு அனுப்பக்கூடிய பழமைவாதம் கொண்ட சிறியவராக அவர்கள் கடவுளைப் பார்க்கிறார்கள்.

தீவிரவாதிகள் இஸ்லாமிய மதத்தின் பெயரையும் பஷ்தூன் சமூகத்தின் பெயரையும் தங்களது சுய லாபத்திற்காக துஷ்பிரயோகம் செய்கிறார்கள். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் ஒரு ஜனநாயக நாடு. பஷ்தூன்கள் தங்களின் பெண்களுக்கும் பையன்களுக்கும்  கல்வி வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அமைதியும் மனிதத்தன்மையும் சகோதரத்துவமும் கொண்டது இஸ்லாமிய மதம். கல்வி பெறுவது ஒவ்வொரு குழந்தையினுடைய  உரிமை மட்டுமல்ல, அவர்களின் கடமையும் பொறுப்பும் கூடத்தான் என்றுதான்   இஸ்லாம் சொல்கிறது.

மரியாதைக்குரிய பொதுச்செயலாளர் அவர்களே, கல்வி கற்க அமைதி தேவை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் போர்களும் கலவரங்களும் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்வதை தடுத்து விடுகின்றன. இந்தப் போர்களால் நாங்கள் உண்மையிலேயே களைத்துப் போய்விட்டோம். பெண்களும் குழந்தைகளும் உலகெங்கும் பல விதங்களில் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் எண்ணற்ற அப்பாவி ஏழைக் குழந்தைகள் குழந்தைத்தொழிலாளர்களாக சுரண்டப்படுகின்றனர். நைஜீரியாவில் பல பள்ளிக்கட்டிடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பல பத்தாண்டுகளாக தீவிரவாதம் உருவாக்கிய தடைகள் மூலம் ஆப்கான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களாக மாற்றப்படுகின்றனர். பலர் இளம் வயதிலேயே கட்டாயத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. வறுமை, அறியாமை, அசமத்துவம், அநீதி, நிற வெறி, அடிப்படை உரிமைகள் மறுப்பு ஆகியவையே ஆணும் பெண்ணும் சந்திக்கிற முக்கியப் பிரச்சினைகள்.

அன்பான நண்பர்களே, நான் இன்று பெண்களின் உரிமைகளையும் பெண் குழந்தைகளின் கல்வியையும் நான் முன்னிருத்துகிறேன். ஏனென்றால் மிக அதிகமாக சிரமத்தில் உழல்பவர்கள் அவர்கள்தான். தங்களது உரிமைகளுக்காக தோள் கொடுக்க வேண்டும் என்று ஆண்களை பெண் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்ட ஒரு காலம் உண்டு. ஆனால் இப்போது நாங்களே எங்களுக்காக பேசப்போகிறோம். பெண்களின் உரிமைகளுக்காக பேசுவதை நிறுத்துங்கள் என்று நான் ஆண்களிடம் கூறவில்லை. மாறாக பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக அவர்களே சுயேட்சையாக போராட வேண்டும் என்று கூறுகிறேன். அன்பான சகோதர. சகோதரிகளே, நாம் பேச வேண்டிய நேரம் இது.

அமைதிக்கான, வளர்ச்சிக்கான உத்திகளை மாற்ற வேண்டிய தருணம் இது என்பதை உலகத் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். எந்த ஒரு அமைதி ஒப்பந்தமும் பெண்களுடைய, குழந்தைகளுடைய உரிமைகளை பாதுகாப்பதாக அமைய வேண்டும் என்று உலகத் தலைவர்களை வலியுறுத்துகிறோம். பெண்களின் கௌரவத்திற்கும் உரிமைகளுக்கும் எதிரான எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. உலகெங்கும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து அரசுகளையும் கேட்டுக் கொள்கிறோம். கொடுமைகளிலிருந்தும் கொடூரங்களிலிருந்தும்  குழந்தைகளைப்   பாதுகாக்க  தீவிரவாதத்திற்கும் வன்முறைக்கும் எதிராக போராடுமாறு அனைத்து அரசுகளையும் கேட்டுக்கொள்கிறோம். வள்ர்முக நாடுகளில் உள்ள பெண்களின் கல்வி வாய்ப்புக்களை விரிவாக்க உதவிடுமாறு வளர்ந்த நாடுகளை கேட்டுக் கொள்கிறோம். ஜாதி, மதம், இனம், மற்றும் பாலினத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் எந்த ஒரு பாரபட்சத்தையும் நிராகரிக்குமாறு உலகின் அனைத்து சமூகங்களையும் கேட்டுக்கொள்கிறோம். பெண்கள் வாழ்வில் வளம் பெற சமத்துவத்தை நிலவச்செய்யுங்கள். நம்மில் பாதி பேர் பின்னே தள்ளப்படுகையில் நம்மால் முன்னேற முடியாது. உலகெங்கும் உள்ள சகோதரிகளே, வீர உணர்வு பெற்றிடுங்கள், உங்களுக்குள் உள்ள வலிமையையும் உங்களின் முழமையான சக்தியையும் உணர்ந்திடுங்கள்.

அன்பான சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு குழந்தையுடைய ஒளிமயமான எதிர்காலத்திற்கு பள்ளிகளும் கல்வியும் தேவை என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களது இலக்கான அமைதியையும் அனைவருக்குமான கல்வி என்ற இலக்கை அடையும்வரை எங்களது பயணத்தை தொடர்வோம். எங்கள் உரிமைகளுக்காக பேசுவோம். எங்கள் குரல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவோம். நமது வார்த்தைகளின் வலிமை மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். நமது வார்த்தைகளால் உலகத்தை மாற்ற முடியும் ஏனென்றால் நாம் அனைவரும் கல்விக்காக ஒன்றுபட்டு இருக்கிறோம். ஓற்றுமை உண்ர்வோடு இருக்கிறோம். நாம் நம்முடைய இலக்கை அடையவேண்டும் என்றால் நமது அறிவாயுதத்தை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது ஒற்றுமை மூலம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அன்பான சகோதர, சகோதரிகளே, பல லட்சம் மக்கள் வறுமையாலும் அறியாமையாலும் அநீதியாலும் துன்பங்களை அனுப்வித்து வருகின்றனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளுக்கு வெளியே உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நமது சகோதர சகோதரிகள் அமைதியான, ஒளிமயமான எதிர்காலத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கல்வியின்மை, வறுமை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போராட்டத்தை நடத்திடுவோம். நமது புத்தகங்களையும் பேனாக்களையும் கையில் எடுத்திடுவோம். அவைதான் நம்முடைய சக்தி மிக்க ஆயுதங்கள். ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா மற்றும் ஒரு புத்தகத்தால் உலகையே மாற்றிட முடியும். கல்விதான் முதன்மையானது.
3 comments:

 1. நல்லதொரு பணி உங்களுடையது. நான் இந்த பெண்மணியின் பேச்சு வீடியோவை தான் தெரிந்தவர்களுக்கு ஈமெயில் பண்ணினேன். நீங்க அவரது பேச்சை தமிழிலே மொழி பெயர்த்து பலரை சென்றடைய செய்திருங்கிறிங்க.

  ReplyDelete
 2. பாராட்டுக்குரிய பணி. கல்வி எத்தனை மகத்துவமானது என்பதைச் சொல்ல சில துப்பாக்கிக் குண்டுகள் தேவைப்படுகின்றன என்ற உண்மை ஒரு வேதனை.

  ReplyDelete
 3. களையும் கையில் எடுத்திடுவோம். அவைதான் நம்முடைய சக்தி மிக்க ஆயுதங்கள். ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா மற்றும் ஒரு புத்தகத்தால் உலகையே மாற்றிட முடியும். கல்விதான் முதன்மையானது.

  ஆழமான பொருள் பொதிந்த ஆக்கம்

  ReplyDelete