Sunday, September 22, 2013

குற்றவாளிக் கூண்டில் அதி மேதாவிகள் - தண்டனையின்றி தப்பிப்பார்களா?

ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி எங்கள் சங்கத்தின்
தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் தோழர்
இ.எம்.ஜோசப் எழுதியுள்ள அற்புதமான ஒரு கட்டுரை இது.  ஆங்கிலத்தில்
எழுதியதைப் படிக்க இந்த இந்த இணைப்பிற்குச் செல்லவும் 

முழுமையான விபரங்களோடு உண்மைகளை நம் முன்னால் தோழர்
ஜோசப் நிறுத்தியுள்ளார். அந்த உண்மைகள் நம்மை இப்போது 
ஆண்டு கொண்டிருப்பவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி 
உள்ளது. நீதிபதிகள் நாம்தான். என்ன தண்டனை அளிக்கப் போகிறோம்.

இந்த பதிவைப் பொறுத்தவரை எனக்கு மன நிறைவும் மகிழ்ச்சியும்
உண்டு. எங்கள் சங்கத் தோழர்களுக்கு அச்சிட்டு வழங்க தமிழாக்கம்
செய்தேன். தோழரின் ஆங்கிலப் புலமைக்கு சில இடங்களில் 
ஈடு கொடுக்க முடியவில்லை என்பதை கண்டிப்பாக பதிவு செய்ய
வேண்டும். அதை அவரே சரி செய்து கொடுத்து கூடுதலாக நிறைவுப்
பகுதி ஒன்றையும் சேர்த்து அனுப்பினார்.

சற்று நீண்ட கட்டுரைதான். கொஞ்சம் தொலைக்காட்சி சீரியல்களையும்
கிசு கிசு செய்திகளை ஒதுக்கி வைத்து விட்டு நம் வாழ்விற்கு முக்கியமான இக்கட்டுரையை அவசியம் படியுங்கள். 

நன்றி தோழர் ஜோசப் - பல புதிய விஷயங்களையும் பல புதிய
சொற்றொடர்களையும் கற்றுக் கொடுத்ததற்கு. 






வீழ்ந்து வரும் ரூபாயின் மதிப்பு – உண்மைக் குற்றவாளிகள் யார்?
 

தோழர். இ.எம்.ஜோசப்,
முன்னாள் துணைத் தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு இதுநாள் வரை காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது இப்போதைக்கு முடிவடைவதாகவும் தெரியவில்லை. வீழ்ச்சி  அண்மைக் காலத்தில் மிகவும் கடுமையாகி இருக்கிறது. எனினும், அது இரண்டாண்டுகளுக்கு  முன்பே தொடங்கி விட்டது. ஆகஸ்ட் 2011 ல் ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு ரூபாய் 45 ஆக இருந்தது ஆகஸ்ட் 2012 ல் ரூபாய் 55 ஆக குறைந்தது. இக்கட்டுரை எழுதப்படும் நாளில் அது இன்னும் சறுக்கி ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 64 ரூபாயாக ஆனது. ( இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்படும் இந்த நாளில்  68 ரூபாயாக உள்ளது. அச்சடித்து வருவதற்குள் இன்னும் எவ்வளவு குறையுமோ ? ) சிரியா மீது போர் தொடுக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டிக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே போர் அறிவிக்கப் பட்டால் என்ன நிகழும் என்பதை யார் வேண்டுமானாலும் ஊகித்துக் கொள்ளலாம். 1990 களில் ஜார்ஜ் புஷ் சீனியர் இராக் மீது தொடுத்த போரின் விளைவாக எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள், இந்திய அன்னியச் செலாவணி சிக்கலை அதிகரித்தது. சிரியா மீது ஒபாமா தொடுக்கப்போவதாக மிரட்டிக் கொண்டிருக்கும் போரின் விளைவுகள் மட்டும் வித்தியாசமாகவா இருக்கப் போகிறது? (போர் இப்போதைக்கு சற்று தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்பது ஒரு ஆறுதலான விஷயம்)

இதைத்தவிர ரூபாயின் உள்ளார்ந்த மதிப்பும் கூட தீவிர பண வீக்கத்தின் விளைவாக ஏற்கனவே சாமானிய மனிதனின் வாங்கும் சக்தியை மோசமாக காயப்படுத்தியுள்ளது. இப்போது ரூபாயின் அன்னியச் செலாவணி மதிப்பு காற்றில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள், வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கும் கார்ப்பரேட்டுகள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பரப் பொருட்களின் வசதிகள் இல்லாமல் வாழவே முடியாத உள்நாட்டு நுகர்வோர் உள்ளிட்ட அனைவரையும் இப்போக்கு அச்சப்படுத்தியுள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது குறித்து எண்ணற்ற விளக்கங்கள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் கேட்கும் அடிப்படையான கேள்வி ஒன்றுதான். யார் குற்றவாளிகள்?

உடனடி அபாயம்.
ஒரு வருடத்திற்குள் இந்தியா திருப்பி செலுத்த வேண்டிய குறைந்த கால கடன் மார்ச் 2013 இறுதியில் 172 பில்லியன் டாலர்கள். 31.03.2014 க்குள் இந்தியா 172 பில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதுதான் அதன் பொருள். மார்ச் 2008 ல் அது 54.7 பில்லியன் டாலராக இருந்தது. அப்படியென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. 2008 – 2009 ல் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 %  ஆக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை,  2012-13 ல் 4.8 % ஆக உயர இது வழி வகுத்துள்ளது. கடன் வரவுகளே இந்த உயர்விற்குக் காரணம். ஒரு வருட காலத்திற்குள் முதிர்வடைய உள்ள குறைந்த காலக் கடனை நாம் திருப்பி செலுத்தினால் நம் கைவசம் உள்ள அன்னியச் செலாவணி கையிருப்பில் 60 % துடைக்கப்பட்டு விடும்.

31.03.2013 அன்றைய தேதியில் இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில் அன்னிய வணிகக் கடன்கள் மட்டும் 31 % ஆகும்.ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய குறுகியக் காலக் கடனான 172 பில்லியன் டாலரில் கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டியது மட்டும் 44 % ஆகும். இந்தக் கடன்கள் எல்லாம் பொருளாதாரம் உச்சத்தில் இருந்த 2004 ம் ஆண்டிற்குப் பிறகு 5 லிருந்து 7 வருடத்தில் முதிர்வடையக் கூடியதாய் வாங்கப்பட்ட கடன்கள். இவை எல்லாம் இப்போது ஒன்று சேர்ந்து குவிந்து இளைப்பாற வந்துள்ளன.

கிட்டத்தட்ட இந்தியாவின் 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே, இந்த 172 பில்லியன் டாலர்களில் பெரும் பகுதி  கடனை வாங்கியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் ( இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்ற அமெரிக்காவின் மத்திய வங்கி ) கடன் நிபந்தனைகள் இத்தனை காலமாக எளிதாக இருந்ததால் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டுக் கடன்களை  நன்றாக சுழற்சி செய்து கொண்டிருந்தன.  அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது விதிகளை கடுமையாக்கினால் எத்தனை நிறுவனங்களால் தங்கள் கடனை திருப்பிச் செலுத்த இயலும் என்று கூட சொல்ல முடியாது. சில நிறுவனங்கள் சரிந்து போகும் மோசமான நிலையும் கூட உருவாகும் என்ற செய்தி ஏற்கனவே  காற்றில் கசிந்துள்ளது. தங்கள் சொத்துக்களில் சில பகுதிகளை சில நிறுவனங்கள் விற்கத் தலைப்பட்டுள்ளன என்ற வதந்திகளும் உலா வருகின்றன. உலகின் ஐந்தாவது பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிறுவனமும் இந்திய பன்னாட்டு நிறுவனமுமான சுஸ்லான் தனது உள்நாட்டுச் சொத்துக்களில் 70 லிருந்து 75 சதவிகிதம் வரை விற்கத் தலைப்பட்டுள்ளது. தன்வசமுள்ள பங்குகளில் ஒரு பகுதியை அபுதாபியில் உள்ள எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் விற்பதற்கான பேச்சுவார்த்தையை ஜெட் ஏர்வேஸ் நடத்திக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டிலிருந்து கடன் வாங்கியுள்ள அதே பெரிய 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உள்நாட்டிலும் கூட கடன் வாங்கியுள்ளன. இந்திய வங்கிகள் அளித்துள்ள கடன் தொகையில் 70 % இந்த பெரிய திமிலங்களுக்குத்தான் சென்றுள்ளது. இக்கம்பெனிகள் நொறுங்கிப் போகுமானால்,  வங்கித்துறையும் பெரிய நெருக்கடிக்கு உள்ளாவது உறுதி.

நடப்பு ஆண்டில்,  நடப்புக் கணக்கு பற்றாக்குறையை ஒட்டு மொத்த உற்பத்தியில் 4.7 % க்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் இந்தியாவிற்கு நிகர மூலதன வரவாக இன்னும் 90 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு கூறியுள்ளது.

தவறான விளக்கங்கள்.

ரிசர்வ் வங்கி ஆளுனராக நியமிக்கப்படுவதற்கு முன்பே ரூபாயின் வீழ்ச்சி பற்றி முதலில் கருத்து சொன்னவர் ரகுராம் ராஜன். அமெரிக்க பணப்புழக்க                 நடைமுறையின் தளர்ச்சியான விதிமுறைகள் (Quantitative Easing)  முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் பென் பெர்னான்கே  22.05.2013 அன்று வெளியிட்ட அறிக்கை மீது ஒட்டு மொத்தமாக பழி போட்டு எல்லா பிரச்சினைகளுக்கும் அதுதான் காரணம் என்று கூறி அவர் கதையை முடித்து விட்டார். கொள்கை மாற்றம் நிகழும் என்று பெர்னான்கே  அறிவித்தாலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அரசுப் பத்திரங்களை சந்தையிலிருந்து வாங்குவதை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீண்ட கால முதலீட்டுக்கான வட்டி விகிதம் குறைவாகத்தான் உள்ளது. நாணயத்தையும் சுழற்சிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறது. முன்னதாக வட்டி விகிதம் கவர்ச்சிகரமாக இருந்த நாடுகளுக்கு நிதி வந்து கொண்டிருந்தது. அதன் மூலம் அவர்களின் நாணய மதிப்பும் உயர்ந்திருந்தது. இனி அவ்வாறு இருக்காது என்று பெர்னான்கே  கூறிய பின்பு அமெரிக்காவில் நீண்ட கால வட்டி விகிதங்கள் கூடுதலாகும் என்ற எதிர்பார்ப்பில், மற்ற நாடுகளின்,  குறிப்பாக பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்ததோனேசியா ஆகிய வளர்முக நாடுகளில் நாணயத்திற்கு நிகரான டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது .

ஏதோ 22.05.2013 க்குப் பின்னர் தான் ரூபாயின் வீழ்ச்சி தொடங்கியது போன்றதொரு வில்லங்கமான கருத்தை இந்த விளக்கம் அளிக்கிறது. ரூபாயின் சரிவுப் பயணம் என்பது அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது என்பதே உண்மை.

பலராலும் அளிக்கப்படும் இன்னொரு விளக்கம் என்பது அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அதிலும் குறிப்பாக அதன் வேலையின்மை விகிதம் குறைந்து போனது பற்றியே. அது டாலர் வலிமையானதை முன்னிறுத்துகின்றது.  அதன் பொருளாதாரம் புத்துயிர் பெற்றதையே காரணமாக சொல்கிறது. “ கறுப்பு திங்கட்கிழமைக்கு” முன்பாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகளில் ஏற்பட்ட 700 புள்ளிகள் வீழ்ச்சியும் ரூபாயின் தடுமாற்றத்திற்கும் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சிதான் காரணம் என்று சுட்டிக் காட்டுகிறது. முன்னரே விளக்கப்பட்டது போல, நாணயப் புழக்கத்தை கட்டுப்படுத்த நீண்ட கால வட்டி விகிதங்களில் பெர்னான்கே  அறிவித்த  மாற்றங்களால், டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பது உண்மைதான்.  

இந்த விளக்கத்திலும் இரு குறைபாடுகள் உள்ளன. மே 22க்கு முன்பே நீண்ட காலமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது என்ற உண்மையை ஏற்க மறுக்கிறது. நீண்ட கால வட்டி விகிதங்களின் மாற்றம் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சொல்வது கொஞ்சம் இடிக்கிறது. இந்த அதிகமான வட்டி விகிதங்கள் வளர்ச்சியை பாதிக்கத்தானே செய்யும்? வளர்ச்சி எங்கிருந்து வரும்?அமெரிக்காவின் இன்றைய பொருளாதாரம் என்பது, பந்து போல தரையில் குதித்துக் குதித்துச்  செல்வது போன்று சென்று கொண்டிருக்கிறது. பந்து மேலே எழும்பும் போது வளர்ச்சி, வளர்ச்சி என்று கூச்சலிடுகின்றனர். பந்து தரையைத் தொட்டவுடன் கூச்சல் அடங்கி விடுகிறது.

அதிகமாகும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை.

மூன்றாவது விளக்கம் என்பது இந்தியாவின் தற்போதைய பொருளாதார சிக்கல்கள் குறித்தது. ஒட்டு மொத்த உற்பத்தியில் தற்போது 4.8 % ஆக இருக்கிற நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சமாளிக்க, அன்னிய நேரடி மூலதனம், பங்குச்சந்தை, பத்திரங்களில் முதலீடுகள், அன்னிய வணிகக் கடன்கள்  என்று அனைத்து வழிகளிலும் அன்னிய முதலீட்டை ஈர்க்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ஆனால் அவற்றின் மூலம் அதிகபட்சம் 2.5 % வரையிலான பற்றாக்குறையினை மட்டுமே சமாளிக்க முடியும். எனவே இந்த இடைவெளி இயல்பாகவே ரூபாய் மதிப்பின் மீது பாதிப்பினை ஏற்படுத்தும். இந்தக் கணிப்பு சரியானதே.

இந்தியாவின் அதிகரிக்கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ரூபாயின் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தை யாரும் மறுக்க முடியாது. அது பற்றி நாம் பின்னர் விவாதிப்போம். இதே காலத்தில் பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இது இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. முதல் கேள்வி:   உலகின் பல நாடுகளிலும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏன் விரிவடைகிறது? அத்தகைய நடப்புக் கணக்குப் பற்றாக்குறை விகிதங்களில் வேறுபாடுகள் இருப்பினும், இந்நாடுகள் அனைத்திலும் நாணய மதிப்பில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறதே,  அது ஏன்?   இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலுடன், இந்தியச் சூழலைப் பொருத்திப் பார்க்காமல், இந்தக் கேள்விகளுக்கான சரியான பதிலைத் தெரிந்து கொள்ள முடியாது. 


சில வதந்திகள்

இந்தியாவை மட்டும் மையப்படுத்திப் பேசும் வேறு சில அம்சங்களும் உண்டு. பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த போது, பட்ஜெட் சமர்ப்பிக்கையில் “மொரீஷியஸ் பாதை” வழியாக வருகிற அன்னிய நேரடி முதலீடுகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த முயற்சியே முதலீட்டாளர்களின் நம்பிக்கையினைக் குலைத்து விட்டதாம். சீர்திருத்தங்களை தொடர்வதில் ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட பதற்றம், மூலதனக் கட்டுப்பாடு, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் என ரூபாயின் மதிப்பை பாதுகாக்க சமீபத்தில் அவர் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களை அச்சுறுத்தினவாம். இப்படி பல பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவையெல்லாம் வெறும் வதந்திகள் அல்லது ஊக வணிகத்தில் ஈடுபடுபவர்களில் சிலர் குறிப்பிட்ட நேரங்களில் வெளியிடும் எதிர்க் கருத்துக்கள். அவற்றையெல்லாம்  பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது தேவைப்படுவது ஒரு பொதுவான விளக்கம்.  அதற்கு உட்படுத்தித் தான் இந்திய அம்சங்களை பார்க்க வேண்டும். தற்போதைய முதலாளித்துவக் கட்டமைப்பின் அடிப்படையில் அவற்றைக் கண்டறிய வேண்டும். உலக முதலாளித்துவம் தற்போது சந்தித்து வரும் நீண்ட நெருக்கடி குறித்த புரிதல் இன்றி, அவற்றைக் கண்டறிவது எளிதல்ல.

நெருக்கடியிலிருந்து அமெரிக்கா வெளியே வந்து கொண்டு இருப்பதாக சொல்வது ஆதாரமற்றது. ஒட்டு மொத்த உற்பத்தியிலும் வேலையின்மை விகிதத்திலும் சின்னஞ்சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைத்தவிர அது பற்றி மகிழ்ச்சி கொள்ள வேறு எதுவும் இல்லை. ஐரோப்பா நெருக்கடியின் பிடியிலிருந்து விடுபடவில்லை. சீனாவின் வளர்ச்சி விகிதம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. சீனாவிற்கு பெருமளவு ஏற்றுமதி  செய்கிற பிரேசிலும் மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இதனால் பாதிப்பு தொடங்கியுள்ளன., சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் உலகளாவிய மந்தம் இப்போது பரவிக்கொண்டிருக்கிறது. உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கிவித்தால் பொருளாதார மந்தத்திலிருந்து தப்பிக்க முடியும் என்ற தோற்றம் முன்பொரு காலத்தில் இருந்ததுண்டு. குறுகிய கால மந்தங்களின்போது அவ்வாறு செய்யப்பட்டது உண்டு. வெகு காலமாய் நீடித்திருக்கும் பொருளாதார மந்தத்தில் இவ்வாறு செய்யவே முடியாது. நெருக்கடி இன்று நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்ற வடிவத்தில் தான் விரிவடைந்து வருகிறது

ஏற்றுமதி – இறக்குமதி  பொருத்தமின்மை
சில முன்னேறிய பொருளாதாரங்களில் வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டு வருகையில் இந்தியா போன்ற மூன்றாவது உலக நாடுகள் இன்னும் கூட வளர்ச்சியை பதிவு செய்கின்றன. அவர்களின் ஏற்றுமதி சுருங்கி இறக்குமதி அதிகரிக்கையில் இது நிகழ்கிறது. ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள பொருத்தமின்மை நடப்புக் கணக்கு பற்றாக்குறையை இன்னும் அதிகமாக்குகிறது.  வேகமாக வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகள் இதுநாள் வரை ஏற்றுமதி செய்து வந்த முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பொருளாதார மந்தம் இன்னும் தொடர்வதுதான் இதற்குக் காரணம்.

நவீன தாராளமயமாக்கல் என்பது அறிவார்ந்த புதிய கண்டுபிடிப்பல்ல. காலனிய காலத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் 1920 களிலும் 1930 களிலும் மிகவும் மோசமான அனுபவத்தை சந்தித்தன. விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும் தங்கள் வருவாயில் மிகப் பெரிய இழப்பை சந்தித்தனர். இந்த அனுபவம்தான் தேச விடுதலைக்குப் பின்பு சுதந்திரச் சந்தையிலிருந்து அரசுக் கட்டுப்பாட்டிற்கு  இட்டுச் சென்றது.

சொத்து உடைமையாளர்களின்  போக்குகள்

உலக அளவில் சொத்து உடைமையாளர்களின்  போக்குகள்  எவ்வாறு அமையும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். அவர்களைப் பொறுத்தவரை இன்றைய முதலாளித்துவத்தின் தாயகமான அமெரிக்காதான் மையம். மற்ற நாடுகள் எல்லாம் வெளி வட்டம். நெருக்கடி உள்ளதோ, இல்லையோ, அவர்கள் மையப் புள்ளியைத்தான் பாதுகாப்பாக உணர்கிறார்கள். மையத்தில் ஒரு நெருக்கடி நிலவுகின்றது என்பதற்காக அவர்கள் மையத்தை விட்டு அகல மாட்டார்கள். எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய லாப அளவு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றாலும் அவர்கள் அமெரிக்காவையே விரும்புவார்கள். இந்தியா கூடுதல் லாப விகிதங்களை அளித்தால் கூட, ஏதாவது ஒரு காரணம் பதற்றம் அளிக்குமானால் அவர்கள் மையத்திற்கு இடம் பெயர்ந்து விடுவார்கள். வெளி வட்டத்தில் ஒரு நெருக்கடி வருமானால் அங்கிருந்து வெளியேறி விடுவார்கள். வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால் உலகப் பொருளாதாரத்தில், சொத்து உடைமையாளர்கள் மையத்தில் எப்போதும் பதற்றம் அடைய மாட்டார்கள். மாறாக வெளி வட்டத்தில் எப்போதாவது பதற்றமடைந்தால் மையத்திற்கு இடம் மாறி விடுவார்கள். மையம் மையம்தான், வெளிவட்டம் வெளிவட்டம் தான். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்த பிரச்சினையில், மூலதனத்தின் இயக்கம் குறித்த இந்த நடைமுறை விதியினை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்திய அரசின் குற்றமும் ஒன்றும் குறைந்தது அல்ல

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது குறித்து உலகளாவிய விதத்தில் பார்ப்பது இந்திய அரசை தனது குற்றத்திலிருந்து விடுவித்ததாக அர்த்தமாகாது. இந்திய அரசு, ஒரு பொருளாதார அறிஞரை பிரதமராகவும் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள் மீது மென்மையான அணுகுமுறை கொண்டவரை நிதியமைச்சராகவும் நவீன தாராளமயமாக்கலை போற்றுகின்ற பல அறிவுஜீவிகளையும் கொண்டுள்ளது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகமாவது  குறித்து தற்போது புலம்பும் நிதியமைச்சர் அது அதிகமாகத் தொடங்கிய 2010- 2011 முதல் மூன்றாண்டுகளாக சிறிதளவு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. உள்நாட்டுத் தேவைகளுக்குக் கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்கள் அளவிற்கு அன்னிய வணிகக் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டார்கள். செல்வந்தர்கள் தங்களின் விருப்பம் போல இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். தங்கம், சொகுசுக் கார்கள், மற்ற விலையுயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்து கொண்டே இருந்தார்கள்.

எண்ணெய் இறக்குமதிக்கு ரூபாயில் பணம் செலுத்தினால் போதும் என்று இரான் சொன்னபோதும்  அமெரிக்கா மீதுள்ள அச்சத்தால் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்ற ஞானம், நிர்ப்பந்தத்தின் காரணமாக  இப்போது தான் வந்துள்ளது. இந்தியாவால் இதன் பயனாக,  8.5 பில்லியன் டாலர் அன்னியச் செலாவணியை சேமிக்க முடியும். முன்பே, சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்திருந்தால் எத்தனையோ  பில்லியன் டாலர்களை நம்மால் சேமித்திருக்க முடியும் அல்லவா?

‘‘முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்” என்பது போல, எல்லா தவறுகளுக்கும் தண்டனை உண்டு. ஆனால் இந்த எளிய உண்மை பொருளாதார அறிஞர் பிரதமருக்கோ, பொருளாதாரத்தைக் கையாள்வதில் புலி என்று கருதப்படும் நிதியமைச்சருக்கோ, அவர்களின் அறிவுஜீவி அணியினருக்கோ தோன்றவில்லை. அத்தனை தவறுகளும் இப்போது ஒன்று சேர்ந்து ரூபாயை சரிவுப் பாதையில் தள்ளிக் கொண்டிருக்கிறது. இப்போதும் கூட ப.சிதம்பரம் முன்வைக்கிற தீர்வுகள் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை இன்னும் அதிகமாக்கும் இயல்புடையதாகவே உள்ளது. தங்கத்தின் இறக்குமதி தடை செய்யப்படவில்லை. இறக்குமதி வரி உயர்த்தப்படுத்தப்பட்டுள்ளதால் குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் இறக்குமதி செய்வதில் உற்சாகம் இல்லாமல் போகலாம். மற்ற ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியும்  தடை செய்யப்படவில்லை.

ஆறுதல் வார்த்தைகள் போல சில அறிக்கைகள் விடுவதற்கு மேலாக இந்த நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து பிரதமரோ நிதியமைச்சரோ பெரிதாக அலட்டிக் கொள்வதாகத்  தோன்றவில்லை. அரசின் செயலின்மைக்கும் அவர்கள் நிலைமையை சமாளிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் பின்னணியில் வேறு சில காரணங்கள் உள்ளன. கூடிய விரைவில் உலகப் பொருளாதாரத்தில் தலைகீழ் மாற்றங்கள் உருவாகி அதன் மூலம் ரூபாய் மதிப்பு உள்ளிட்ட அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து விடும், மொத்தத்தில் நெருக்கடி மறைந்து விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். எவ்வித அடித்தளமும் இல்லாத அவர்களின் இந்த நம்பிக்கை தேசத்தை இன்னும் மோசமான நெருக்கடிக்கு தள்ளப் போகிறது. முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரம் உச்சத்தில் இருந்த காலமும் இந்தியா நவீன தாராளமயத்தை தழுவிய காலமும் ஒன்றாக இருந்ததால் இந்தியாவில் இந்த மாயை வலுவாகவே உள்ளது. ஆனால் இன்று மையத்தில், அதாவது, அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடி இந்த மாயைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதுவும் இதுவும் ஒன்றல்ல!
1997ம் ஆண்டு கிழக்காசிய நெருக்கடியுடன் ஒப்பிடும் போது, இன்றைய இந்திய நெருக்கடி ஒன்றும் பெரிதல்ல என அமெரிக்க பொருளாதார அறிஞர் பால் க்ருக்மேன் போன்றவர்கள் கூட எழுதி வருகின்றனர். கிழக்காசிய நெருக்கடி கட்டமைப்பு நெருக்கடி அல்ல. ஆனால், இன்றைய நமது நெருக்கடி கட்டமைப்பு நெருக்கடி. இது ஒரு  அடிப்படையான வேறுபாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கிழக்காசிய நாடுகளில் நெருக்கடிக்கு முன்னர், அந்நியச் செலாவணிக் கையிருப்பு, நடப்புக் கணக்கு, உள்நாட்டுச் சேமிப்பு என எவ்வகையிலும் பிரச்சினை இருந்ததில்லை. அவர்கள் செய்த தவறு என்ன தெரியுமா?    குறுகியக் கால அந்நியக் கடன்களை வாங்கி, நீண்ட கால முதலீடுகளில் ஈடுபடுத்தினர். அது போன்று, அந்நியச் செலாவணியில் கடன் வாங்கி, அந்நியச் செலாவணி ஈட்ட இயலாத சொத்துக்களில் முதலீடு செய்தனர். நெருக்கடி வந்த போது இவையெல்லாம் பிரச்சினைகளாக மாறின. அந்நியக் கடன் வாங்கிய வங்கிகளின் சொத்துக்களில் பெரும் பகுதி, கடனைத் திருப்பி அடைப்பதில் கரைந்து போனது. ஆனாலும் கூட, கடன் நெருக்கடியின் அதிர்ச்சியினை அந்தப் பொருளாதாரம் உள்வாங்கி ஜீரணித்த பின்னர், நெருக்கடி அகலத் தொடங்கியது. அதன் பின்னர் அந்நிய மூலதன வரவு குறைந்தது. எனினும், அதற்கு உட்பட்டு அந்நாடுகளின்  பொருளாதாரம் தொடர்ந்தது.

கட்டமைப்பு நெருக்கடி
நம் நாட்டின் கட்டமைப்பு நெருக்கடியில், இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அளவு மிகப்  பெரிதாக இருப்பதால், நிகர அந்நிய மூலதன வரவுகளின் மூலம்  குறுகிய காலத்தில் அதைக் குறைப்பது எளிதல்ல. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தற்காலிகமாக ஒரு முடிவிற்கு வந்து, அந்நிய மூலதனம் தேவையான அளவு வரத் தொடங்கி விட்டாலும் கூட, அது சாத்தியம் அல்ல. ஏனெனில், பற்றாக்குறை அவ்வளவு பெரிதாக உள்ளது. இரண்டு, பொருளாதாரத்தில் உள்ள அளவிற்கு அதிகமான கிராக்கியினைக் குறைத்தால் ஓரளவு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினை குறைக்க முடியும். ஆனால், நம்மிடம் இருப்பதோ கிராக்கிப் பற்றாக்குறை.  முழு உற்பத்தி அளவில் இயங்காத தொழில் நிறுவனங்கள், வாங்குவாரற்றுக் கிடக்கும் உணவு தானியங்கள் என இவையெல்லாம் கிராக்கிப் பற்றாக்குறையினை பறை சாற்றி  நிற்கின்றன.


மூன்று வழிகள்!
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினைக் குறைப்பதற்கு அடிப்படையில் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் மூலமே. இரண்டு, சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளின் மூலம். மூன்று, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மூலம். நிதி மூலதனம் அதை எதிர்க்குமானால், அந்நிய மூலதனத்தையே கட்டுப்படுத்துவதன் மூலம். 

நயவஞ்சக வாதம்!
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினையே தீர்வாகப் பயன்படுத்தும் முதல் வழியினை முதலில் பார்ப்போம். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் காரணமாக வீழ்ச்சியுற்றிருக்கும் ரூபாய் மதிப்பு, ஏற்றுமதிச் சந்தையில் நமது உற்பத்தியாளர்களின் போட்டித் தன்மையினை அதிகரிக்க உதவும் எனவும், அதனால் இறக்குமதி தானாகவே கட்டுக்குள் வந்து விடும் எனவும் ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. அதாவது, சந்தை தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளும் போக்கில் தான், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்திருப்பது போலவும், அந்த வீழ்ச்சி முழுமையானவுடன், பொருளாதாரத்தில் ஒரு சம நிலை வந்து விடும் என்பது போலவும், அந்தக் கட்டத்தில் அந்நிய மூலதன வரவின் மூலம் அனைத்தையும் சரி செய்து விட முடியும் என்ற திசையில் அந்த வாதம் செல்கிறது.

உலகம் முழுவதும் இன்று பெருமந்தம் நிலவும் நிலையில், ஏற்றுமதிச் சந்தையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் கிடைக்கும் போட்டித்தன்மை அனுகூலம் என்பது அர்த்தமற்றுப் போய் விடுகிறது.  உள்நாட்டில் நிலவும் பணவீக்கம், எண்ணெய் விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் உற்பத்திச் செலவு, அதனால்  உந்தப்படும் பணவீக்கமும் (Cost-push Inflation) போன்ற அனைத்தும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை அழித்து விடும் என்பது இங்கே மறைக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் உருவாகும் பணவீக்கம் தற்காலிகமானது தான் என வாதிடுகிறார்கள். அது தற்காலிகமானது எனினும், அது ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு நிரந்தரமானது என்பதை மறுக்க முடியாது. இது தவிர, ரூபாய் மதிப்பிழந்து நிற்கும் இவ்வேளையில் தங்கம் ஒரு முக்கியமான சொத்தாகக் கருதப்படுகிறது. எனவே, அதன் இறக்குமதி  பெருமளவில் குறைவதற்கு  வாய்ப்பு இல்லை.

சுங்க வரிகளை உயர்த்தி, அதன் மூலம்  உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதைத் தவிர்த்து விட்டு, ரூபாய் மதிப்பு வீழ்ச்ச்சியின் மூலம் பாதுகாப்பது என்பது மனிதாபிமானம் அற்ற நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை  தவறானது மட்டுமல்ல, நயவஞ்சகமானதும் கூட. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் மூலமே தீர்வு என்பதற்கு ஆதரவான வாதம் உள்ளீடற்றது மட்டுமல்ல, மக்கள் விரோதமானதும் கூட.

சிக்கன நடவடிக்கை என்ற இரண்டாவது வழி பொருளாதாரத்தினை மேலும் சுருக்கிவிடும். ஏற்கனவே, முழு அளவில் உற்பத்தி செய்ய இயலாத தொழிற்சாலைகள், வேலையின்மை, வாங்குவரற்றுக் கிடக்கும் உணவு தானியங்கள் என்ற சூழல் நீடிக்கும் நிலையில், இது பொருளாதாரத்தினை மோசமாகச் சீரழித்து விடும். 

இறக்குமதியினைக் கட்டுப்படுத்துவது, தேவைப்பட்டால் அந்நிய மூலதனத்தினை கட்டுப்படுத்துவது என்பது மூன்றாவது வழி. இது  உற்பத்திச் செலவு காரணமாக உருவாகும் பணவீக்கத்தினை உருவாக்காது. இறக்குமதி கட்டுப்படுத்தப் படுவதால், உற்பத்தி, வேலை வாய்ப்புக்கள், வருமானம் என உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். அதன் காரணமாக, ஒரு கட்டத்தில் பணவீக்கம் கட்டுக்குள் வரும்.  உலக வர்த்தக ஸ்தாபனம் விதிகள் அனுமதித்திருக்கும் அளவிற்குக் கூட நம் நாட்டில் சுங்க வரி விகிதங்கள் இல்லாத நிலையில், அத்தகைய வரிகளை உயர்த்துவது எளிதானதே.

அதே போன்று அந்நிய மூலதனத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் பயன் தரத் தக்கவையே. 1997ல் மலேசியாவில் அந்நிய மூலதனம் கட்டுப்படுத்தப்பட்ட போது,  அந்நாட்டு நெருக்கடியினைத் தீர்ப்பதில்  அது பெரும் பங்கினை வகித்தது. 1997ல் அது மலேசியாவிற்குப் பொருந்தும் என்றால், 2013ல் அது இந்தியாவிற்குப் பொருந்தாதா?

அரசு தலையீடு தொடர வேண்டும்!
இடைப்பட்ட காலத்தில் அரசின் தலையீடு தொடர வேண்டும். அரசின் பொது முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். செலவுகளால் உந்தப்படும் பணவீக்கத்தினை அரசு சில குறிப்பிட்ட வழிகளில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், நிதி மூலதனம் இதை ஏற்பதில்லை. எனவே, இதில் நிதி மூலதனத்தின் விருப்பங்களை மீறிச் செயல்படும் உறுதியினையும் அரசு ஏற்க வேண்டும்.  எடுத்துக்காட்டாக, இன்று இந்திய உணவுக் கழகத்தின் கைகளில் ஏராளமாக உனவு தானியம் கையிருப்பில் உள்ளது. இதை இலவசமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் பலர் பசியாற உண்ணுவார்கள். மலிவு விலையில் வேறு சிலருக்குக் கொடுத்தால், அத்தகையவர்கள் ஏற்கனவே சந்தையில் அவர்கள் கொடுக்கும் விலைக்கும் அரசின் விலைக்கும் இடையிலான  பணத்தினை வைத்து உள்நாட்டு உற்பத்திச் சந்தையில் கிராக்கியினை உருவாக்குவார்கள். இது பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் தானே?

அரசு இது போன்று பல வகையிலும் செயல்பட  முடியும். அத்திசையில் அரசு செயல்பட வேண்டும் என்பதே இன்று இந்தியாவில் தொழிற்சங்கங்களும் இடதுசாரிக் கட்சிகளும் முன் வைக்கும் கோரிக்கை.  

3 comments:

  1. ஒரே ஒரு பாரா தான் மிஸ்ஸிங்.. அது..

    ஆகவே குற்றம் இழைத்தவர்களே அதை சரி செய்ய அவகாசம் கொடுக்கும் வகையிலும், பொருளாதார (காகிதப்) புலிகளுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கும் வகையிலும் காங்கிரஸ்ஸிர்க்கே அடுத்த முறையும் ஒட்டு போடுவோம்.. மோடி மட்டும் வேண்டவே வேண்டாம். பி ஜே பி ஆண்டபோது பொருளாதார நெருக்கடி எதுவும் இல்லை என்றால் என்ன? மோடி மட்டும் வேண்டாம்!

    ReplyDelete
  2. எங்களுக்கு ரத்த வெறியர்களும் வேண்டாம். ஊழல் வெறியர்களும் வேண்டாம். மனித நலம் காப்பதில் வெறியர்களான communistukal மட்டுமே வேண்டும். அம்புட்டுதேன்,

    ReplyDelete
  3. WE WILL SEND THE CONGRESS GOVT TO DITCH. BJP WILL GET CHANCE THIS TIME. SO, IF WE SUPPORT COMMUNIST PARTY WHEREVER WE CAN, WE WILL HAVE ENOUGH SEATS IN HOLD. NEVER SUPPORT TO CONGRESS. WE CAN EXTEND OUTSIDE SUPPORT TO BJP(NO OTHER GO)

    ReplyDelete