Tuesday, September 10, 2013

விதைக்கப்பட்ட வெறுப்பில் பரவிய நெருப்பு - அந்த குழந்தைக்கு என்ன பதில்?உத்திர பிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் கலவரம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிகாரபூர்வமாகவே முப்பது பேர் பலியானார்கள் என்று சொல்லப்பட்டால் உண்மையான புள்ளிவிபரம் இன்னும் அதிகமாகவே இருக்கக் கூடும்.

ஒரு சாதாரண காவல் நிலையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய ஒரு பிரச்சினையை தீர்க்க, இல்லையில்லை கட்டுப்படுத்த இன்று துணை ராணுவப்படையை அனுப்ப வேண்டிய அளவிற்கு நிலைமை முற்றியுள்ளது.

ஒரு ஈவ் டீஸிங் பிரச்சினை. தன் தங்கையை கிண்டல் செய்தவனை தட்டிக் கேட்ட அண்ணனை ஒரு கும்பல் அடித்து விடுகிறது. அந்த கும்பலை இன்னொரு கும்பல் மீண்டும் அடித்து விடுகிறது. ஈவ் டீஸிங் செய்த வாலிபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த பிரச்சினை இவ்வளவு பெரிதாகியிருக்க வாய்ப்பில்லை.

ஆனால் கட்டுக்கடங்காத கலவரமாக மாறியது ஏன்?

தேர்தல் ஆதாயங்களுக்காக உத்திர பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் சில குறிப்பிட்ட ஜாதிகளுக்கு ஆதரவானவர்களாக காண்பித்துக் கொள்கின்றனர்.

முலாயம்சிங் யாதவ் என்றால் அவர் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளையும் முஸ்லீம்களையும் தனது வாக்கு வங்கியாக கருதுவார்.

மாயாவதி தலித் மக்களின் வாக்கு வங்கியை தனக்கு  ஆதரவாக கட்டுக்கோப்பாக வைத்திருக்க முயலுவார்.

பாஜக விற்கு சில ஜாதிகள், காங்கிரஸ் கட்சிக்கு சில ஜாதிகள் என்று பொதுவாக மக்களைப் பார்க்காமல் வெறும் ஜாதிகளாக மட்டும் பார்க்கும் பார்வைதான் துரதிர்ஷ்டவசமாக உத்திரப் பிரதேசத்தின் பாரம்பரியமாக உள்ளது.

அது மட்டுமல்லாது மக்களெல்லாம் ஜாதிகளாக பிரிந்து கிடந்தால்தான் அவர்கள் அரசியல் நடத்த முடியும். இந்த ஜாதிய அரசியலுக்கு மக்கள் பலியான காரணத்தால்தான் தவறு செய்தவனோடு அவன் ஜாதியைச் சேர்ந்த மக்களையும் தாக்கும் எண்ணம் தானாகவே வருகிறது. சிறு பொறியை பெரும் காட்டுத்தீயாக மாற்றும் வல்லமையும் இந்த அமைப்புக்களுக்கு உள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயம் அங்கே உள்ள ஜாதிய பஞ்சாயத்துக்கள். அவை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் மிகவும் ஆணித்தரமாக சொன்ன போதும் கூட அவற்றின் ஆதிக்கம் கொஞ்சம் கூட மங்கவில்லை. அவைகள் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம் எந்த ஆட்சியாளர்களுக்கும் கிடையாது. மாறாக அவற்றின் ஆசீர்வாதத்தை நாடி அரசியல் தலைவர்கள் செல்வதுதான் வாடிக்கை.

முசாபர் நகர் பிரச்சினையிலும் கூட காப் பஞ்சாயத்துக்களின் மகா பஞ்சாயத்திற்குப் பிறகே கலவரம் இன்னும் தீவிரமாக வெடித்துள்ளது. இந்த மகா பஞ்சாயத்தில் பாஜக எம்.எல்.ஏ க்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

கலவரத் தீக்கு நெய் வாரி ஊற்றியது போல பரவிய வதந்திகளும் ஒரு முக்கியக் காரணம். முக நூலில் கூட ஈவ் டீஸிங் செய்யப்பட்ட பெண்ணை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்ட பெண்ணாக சித்தரித்து சில பின்னூட்டங்களை பார்க்க முடிந்தது.

அகிலேஷ் யாதவ் அரசின் கையாலாகததனம் மட்டும் பிரச்சினைக்கான காரணம் என்று சொல்லி விட முடியாது.

முலாயம் சிங் யாதவ், மாயாவதி, காங்கிரஸ், பாஜக என்று மக்களை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பிரித்தே வைத்துள்ள அரசியல் தலைவர்கள் அனைவருமே குற்றவாளிகள்தான்.

அவர்கள் விதைத்த வெறுப்புதான் இன்று நெருப்பாக பரவியுள்ளது.

இதிலே தமிழக மக்களும் கவனமாக இருக்க வேண்டிய செய்தியும் ஒன்று உண்டு. உத்திரப் பிரதேசம் போல வெறுப்பை விதைக்கும் வேலையை மருத்துவர் ஐயா செய்து வருகிறார். அதை நாம் முறியடிக்க வேண்டும். 

நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் தாக்கினார்கள் என்று காயப்பட்ட அந்த பச்சிளங்குழந்தையின் விழிகள் கேட்கும் 
கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்?
 
 

1 comment:

  1. இது போன்ற சாதி வாரியான மத வாரியான நெருப்பை வளர்ப்பதில் சங் பரிவார பிஜேபி அமைப்புக்களை மிஞ்ச யாரும் இல்லை. இது போன்ற அராஜகவாதிகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அடையாளம் காண வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. இது நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன். வேறென்ன சொல்ல?

    ReplyDelete