இன்சூரன்ஸ்
வார விழாவை ஒட்டி வேலூர் கோட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட வினாடி வினாப் போட்டியில்
நான் பங்கேற்ற அணி முதல் பரிசை வேலூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றபோது
எடுக்கப்பட்ட புகைப்படம்தான் மேலே உள்ளது.
இருபத்தி
எட்டு வருட பணியில் எல்.ஐ.சி நிறுவனத்தில் நிறுவனத்திடம் இருந்து பெற்ற முதல்
பரிசும் கூட இதுதான். பொதுவாக இன்சூரன்ஸ் வார விழாக்களின் போது ஊழியர்களுக்கான
போட்டிகள் நடக்கும். பார்வையாளராக மட்டுமே இருந்திருக்கிறேனே தவிர போட்டியாளராக
இருந்ததில்லை. கோட்டப் பொதுச்செயலாளராவது முன்பாக ஒரே ஒரு வருடம் பாட்டுப்
போட்டியிலும் கவிதைப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளேன்.
அந்த சமயம்
கோட்ட அளவில் தொழிலுறவு பாதிக்கப்பட்டிருந்த நேரம். “நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்
திறனுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி” என்று தலைமை
அதிகாரியைப் பார்த்தே பாடினால் பரிசு எப்படி கிடைக்கும். எழுதிய கவிதையும் கூட
கிட்டத்தட்ட அதே போல எரிச்சலுக்கு வடிகால் தேடுவது போல அமைந்த கவிதைதான்.
பொதுச்செயலாளரான
பின்பு பார்வையாளர் பாத்திரம் மட்டும்தான். சில சமயங்களில் சங்கத்தின் சார்பில்
குத்து விளக்கின் ஒரு திரியை ஏற்றவோ வாழ்த்துரை வழங்கவோ வாய்ப்பு கிடைக்கும்,
இந்த முறைதான்
போட்டியாளராக பங்கேற்றேன். நெருப்பில்லா சமையல் என்ற போட்டியின் தன்மை மிகவும்
வசீகரிக்க அதிலே கலந்து கொண்டேன். சமைப்பது மட்டுமல்ல சமைத்ததை அழகாக ரசனைக்குரிய
விதத்தில் அலங்கரிப்பதிலும் பெண்களோடு ஆண்கள் போட்டி போட முடியாது என்ற
படிப்பினையை அப்போட்டி அளித்தது. என்றோ ஒரு நாள் ஏதோ ஒன்றை சமைத்து
வலைப்பக்கத்தில் போடுவது மட்டும் சமையல் அல்ல என்று தலையில் அடித்துச் சொன்னது
அப்போட்டி.
இன்னொரு
போட்டி வினாடி வினா. பார்வையாளராகத்தான் சென்றேன். ஒரு கை குறைகிறது என்று உட்கார
வைத்து விட்டார்கள். மணக்கோலம் பார்க்க வந்தேன், மண மகள் ஆனேன் என்று கோமாதா என்
குல மாதா என்ற படத்தில் பிரமீளா பாடிய பாட்டு நினைவில் உள்ளதா? அது போலத்தான்.
ஆனால் வெறும் அதிர்ஷ்டம் என்று சொல்லி விடாதீர்கள். எங்கள் அணி பெற்ற 54 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்களுக்கான பதிலைச்
சொன்னது நான்தான். நாம் எங்கே
பலவீனமாக உள்ளோம் என்பதை இப்போட்டி உணர்த்தியது. அருமையாய் கேள்விகளை தயாரித்த தோழர் அதாவூர் ரஹ்மானுக்கு
பாராட்டுக்கள்.
மிகவும்
மகிழ்ச்சியளித்த பரிசு இது.
கொஞ்சம்
யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் நான் வாங்கிய பரிசுகளே குறைச்சல்தான்.
ஆறாவது
படிக்கையில் மாறு வேடப்போட்டியில் நேரு வேடம் போட்டு பயங்கர வீரமாக டயலாக்
பேசியதற்கு முதல் பரிசு. சத்ரபதி சிவாஜியாக தத்ரூபமாக மேக்கப் போட்டு ராமன் எத்தனை
ராமனடி படத்தில் சிவாஜி கணேசன் பேசிய வசனங்களை பேசிய பனிரெண்டாம் வகுப்பு
மாணவனுக்கு இரண்டாவது பரிசுதான்.
ஒன்பதாவது படிக்கும்
போது அந்தப்பள்ளியில் அரையாண்டு தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும்
மாணவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசுகள் கிடைக்கும். அந்த அடிப்படையில் இரண்டாம்
பரிசு கிடைத்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் என்.சி.சி முகாமிற்கு சென்று
விட்டதால்தான் எனக்கு இரண்டாவது பரிசாவது கிடைத்தது என்ற பேச்சு கூட இருந்தது.
ஆனால் அந்த மாணவர்களை விட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கூடுதலாக நான்
மதிப்பெண்கள் பெற்றேன் என்பது வேறு விஷயம்.
சென்னை
உயர்நீதி மன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி திரு ராமபிரசாத் ராவ் பரிசு கொடுத்தார்
என்பது அப்போது பெருமையாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் மீதான எரி சாராய ஊழல் விசாரணைக்
கமிஷனில் அதே நீதிபதி எம்.ஜி.ஆர் அரசுக்கு ஆதரவாக எந்த ஊழலுமே நடக்கவில்லை என்று
அறிக்கை கொடுத்தபோது அந்த பரிசு கசந்து போனது.
இன்சூரன்ஸ்
நிறுவன ஊழியர்களின் திறனை மேம்படுத்த இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பு
உண்டு. லைசன்ஷியேட், அசோசியேட், பெலோஷிப் என்று மூன்றடுக்கு தேர்வுகள் உண்டு. இந்த தேர்வுகளில்
வெற்றி பெற்றால் அதற்காக சிறப்புப் படியும் உண்டு. பதவி உயர்விலும் கூடுதல்
மதிப்பெண்கள் உண்டு. தேர்வு கொஞ்சம் கடினமாகவே இருக்கும். பல கஜனி முகமதுகளை
உருவாக்கிய அமைப்பு இது.
இதிலே
அசோசியேட் தேர்வில் ஆயுள் காப்பீட்டின் சட்ட அம்சங்கள் (Legal
Aspects of Life Insurance ) என்ற பாடத்தில் 75 மதிப்பெண்கள்
பெற்று சென்னை மையத்தில் முதலிடம் பெற்றதற்காக ஒரு பரிசு கிடைத்தது. எல்.ஐ.சி யின்
அப்போதைய சேர்மன் திரு ஆர்.நாராயணன் பரிசளித்தார். எல்.ஐ.சி நிறுவனத்தின் சிறப்பு
பற்றி மிகவும் உணர்ச்சிகரமாக வேறு அவர் அந்த விழாவில் பேசினார்.
இன்சூரன்ஸ்துறையில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக அமைக்கப்பட்ட மல்ஹோத்ரா குழுவின்
உறுப்பினராக எல்.ஐ.சி யின் பங்குகளை விற்க வேண்டும் என்று பரிந்துரை கொடுத்ததில்
அவரும் ஒருவர். அதன் பின்பு அந்த பரிசும் அதனை அளித்தவரின் போலித்தனத்தால் கசந்து
போனது.
வாழ்த்துகள்
ReplyDeleteமுதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபரிசு என்று ஒன்று பெறுவதில் ஒரு அலாதியான மகிழ்ச்சி உண்டு . பரிசின் பெருமை பெருபவருக்குத்தான் அதை அளிப்பவருக்கு இல்லை. பரிசு அங்கீகாரத்தின் அளவே தவிர பரிசளிப்பவரின் கொள்கைகளுக்கோ அல்லது அவர்களின் தகுதிக்கோ கிடையாது . கசப்பு உணர்வு ஏதும் இன்றி பெற்ற பரிசுகளை எண்ணி மகிழ்வு கொள்ளுங்கள்
ReplyDeleteCONGRATS! KEEP IT UP! HEREAFTER LOT OF PRIZES WILL REACH YOUR GOLDEN HANDS!
ReplyDelete