Wednesday, September 25, 2013

உங்கள் முகத்தின் மீது ஓங்கி ஒரு குத்து – நன்றி அஞ்சல் துறை





நீண்ட நாட்களுக்குப் பிறகு சரியாக ஒரு மணிக்கெல்லாம் இன்று மதிய உணவு சாப்பிட காண்டீன் சென்றேன். சுவாரஸ்யமான விவாதத்தையும் நானே துவக்கி வைத்தேன்.

சாப்பிடச் செல்லும் முன்புதான் அஞ்சல்துறையில் பணியாற்றும் தோழர் ஒருவர் வந்திருந்தார். உங்கள் புகைப்படத்தோடு அஞ்சல் தலை வெளியிடுகின்ற திட்டத்தைப் பற்றி விளக்கி விட்டு அதற்கான விண்ணப்பப் படிவத்தையும் கொடுத்து விட்டுப் போயிருந்தார்.

அஞ்சலகத்தை நோக்கி மக்களை மீண்டும் வரவழைக்கிற கவர்ச்சிகரமான திட்டமாகவே தோன்றியது. ( என் போட்டோ போட்ட ஸ்டாம்பு 12 பார்ஸல் )

அதுதான் விவாதத்தின் மையப் புள்ளியாக அமைந்தது.

விவாதத்தின் போது வந்த சுவையான கருத்துக்கள்

பிடிக்காத யாராவது ஒருவருடைய ஸ்டாம்பை தயார் செய்து கடிதம் அனுப்பினால் அஞ்சல் அலுவலகத்தில் அவர் முகத்தின் மீது குத்து, குத்து என்று முத்திரை குத்திடுவார்கள்.

அதற்கு வாய்ப்பு கிடையாது, ஒருவர் தன்னுடைய படத்தை மட்டும்தான் அஞ்சல் தலையாக வெளியிட்டுக் கொள்ள முடியும். அதற்கும் ஐ.டி கார்ட் எல்லாம் தர வேண்டும் என்று நான் சொன்னதும் அதற்கும் “அதனால் என்ன அந்தாளையே ஸ்டாம்ப் வாங்கச் செய்தால் போயிற்று” என்று  தயாராக பதில் வந்தது. பகையாளி குடியை உறவாடித் தான் கெடுக்கனும் என்ற பழமொழி வேறு துணைப் பதிலாய் வந்தது.

“ அந்த மாதிரி வேண்டாத ஆள் ஸ்டாம்ப சுட்டு அதை யாருக்காவது மிரட்டல் கடிதம், மொட்டைக் கடிதம் என்று அனுப்பினால் அந்த ஆள் மாட்டிப்பான் இல்லை?” – இது இன்னொரு கருத்து.

“உங்கள் கொள்கைகள் சரியில்லை, அதைக் கண்டிக்கிறேன். மாற்றிக் கொள்ளுங்கள் என்று மன்மோகன்சிங்கிற்கு நேரடியாகவே கடிதம் எழுதி அதிலே நம் போட்டோ போட்ட ஸ்டாம்பை ஒட்டி  அனுப்பலாமே” – இது நான்.

“ அம்மாவிற்கு வாழ்த்து மடல் ஒன்று எழுதி அதிலே என் புகைப்படம் போட்ட ஸ்டாம்பை ஒட்டி அனுப்பினால் என்ன?” – இது ஒரு அதிமுக அனுதாபி.

“ தங்களுடைய புகைப்படம் என்பதற்குப் பதிலாக பிடித்த தலைவர்கள், நடிகர்கள் படத்தை போட்டு அச்சிடலாம் என்றால் இன்னும் அதிகமாக விற்பனையாகும் அல்லவா”

 “ அப்படியென்றால் அம்மா படம் போட்ட ஸ்டாம்பை நான் வாங்குவேனே” – மீண்டும் அதிமுக அனுதாபி.

“ கல்லூரியில் படிக்கும் மகளுக்கான கடிதத்தை என் படம் போட்ட ஸ்டாம்ப் ஒட்டிய உறையில் அனுப்பினால், எங்க அப்பா படம் போட்ட ஸ்டாம்ப் என்று தன் நண்பர்களிடம் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்ளலாம் அல்லவா” – இது நெகிழ்ச்சியோடு ஒரு தந்தை.

ஆகவே இந்தியப் பெருமக்களே, அஞ்சல் தலைக்கான கட்டணம் ரூபாய் 300 ம் அதை பெறுவதற்கான ஸ்பீட் போஸ்ட் கட்டணம் ரூபாய் 40 ம் செலுத்தி உங்கள் புகைப்படம் அச்சிடப்பட்ட  5 ரூபாய் ஸ்டாம்ப் 12 வாங்கி உங்கள் முகத்தில் குத்துக்கள் வாங்க தயாராகுங்கள்.  

2 comments:

  1. தபால் துறை தன் வளர்சிக்காக எடுக்கும் முயற்சி இது. ஆனால் தனியார் நிறுவனங்கள் பகுதிக்குப் பகுதி துணை முகவர்களை நியமித்து சேவையை பரவலாக்கும்போது தபால் துறை இன்னமும் மக்கள் தன்னை நாடியே வர வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்? முதலில் தன்னை மாற்றி கொள்ளட்டும். பிறகு தபால் தலை வெளியிடுவதை பற்றி யோசிக்கட்டும்.

    ReplyDelete