Monday, December 26, 2011

அணையாத நெருப்பு








நேற்று வெண்மணி தியாகிகள் தினம், அரை படி நெல் கூலி உயர்வு கேட்டவர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட தினம். நாற்பத்தி மூன்று ஆண்டுகள் முன்பு  நடைபெற்றிருந்தாலும் இன்றும் நெஞ்சிலும் விழிகளிலும் நீரை வரவைக்கும் கொடிய சம்பவம். தங்களால் அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக போராடுவதா என்ற கோபமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செங்கொடி இயக்கம் நிற்கிறதே, என்ற வேகமும் இணைந்து கொள்ள அரக்கத்தனத்துடன்  ஆதிக்க சக்திகள் நடத்திய வெறியாட்டத்திற்கு நாற்பத்தி நான்கு உயிர்கள் பலியாயின.

செங்கொடி இயக்கம் அழிந்து போகும், ஒடுக்கப்பட்டவர்கள் அடிமைகளாகவே தொடர்வார்கள் என்று நினைத்த ஆட்டம் போட்டவர்களின் நினைப்பு தவிடு பொடியானது.

எந்த மண்ணிலே உழைப்பாளி மக்கள் தீக்கிரையாக்கப்பட்டார்களோ, அந்த மண் இன்று தமிழகத்தின் ஒட்டு மொத்த உழைப்பாளி மக்களின் எழுச்சி மையமாகி விட்டது. ஒவ்வொரு ஆண்டும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வருகின்ற உழைப்பாளி மக்களின் எண்ணிக்கையே அதற்குச் சான்று.

குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் அழைத்து வரப்படுகின்ற கூட்டமல்ல, தங்களின் சொந்த செலவில் வருகின்ற எளிய மக்களின் சங்கமம். சின்னஞ்சிறு குடிசையில் அகப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தியாகிகளுக்கு இதோ இரு பிரம்மாண்டமான நினைவாலயம், உழைப்பாளி மக்களின் வியர்வையால் உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஆதிக்க சக்திகள் வெண்மணியில் வைத்த நெருப்பு அவர்களையே முற்றிலுமாக சுட்டெரிக்கும்வரை அணையாது.

3 comments:

  1. ஆதிக்க சக்திகள் வெண்மணியில் வைத்த நெருப்பு அவர்களையே முற்றிலுமாக சுட்டெரிக்கும்வரை அணையாது. - RIGHTLY SAID COMRADE

    ReplyDelete
  2. ஆதிக்க சக்திகள் வெண்மணியில் வைத்த நெருப்பு அவர்களையே முற்றிலுமாக சுட்டெரிக்கும்வரை அணையாது. RIGHTLY SAID COMRADE.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.

    ReplyDelete