பொதுத்துறையில் தொடரும் எல்.ஐ.சி
ஏ.ஐ.ஐ.இ.ஏ வின் வெற்றிப்பயணமும் தொடர்கிறது.
நாடாளுமன்ற மக்களவை 12.12.2011 அன்று எல்.ஐ.சி திருத்தச்சட்டம் 2009 ஐ நிறைவேற்றியது. எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டும் என்று 1994 ல் மல்ஹோத்ரா குழு பரிந்துரை வெற்றிகரமாக மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக எல்.ஐ,சி யை சீர்குலைக்க மத்தியரசும் இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று ஆணையமும் மேற்கொண்ட சதிச்செயல்களும் முறியடிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி யின் மூலதனத்தை நூறு கோடி ரூபாயாக உயர்த்துவது, எதிர்காலத்தில் மூலதனத் தேவை உருவாகின்ற போது அரசாணை மூலம் உயர்த்துவது, எல்.ஐ,சி பாலிசிகளுக்கு வழங்கப்பட்ட அரசு உத்தரவாதத்தை திரும்பப் பெறுவது, கிளை மற்றும் கோட்ட அலுவலகங்கள் துவக்குவதற்கு எல்.ஐ.சி க்குள்ள உரிமையை பறிப்பது, எல்.ஐ.சி யின் உபரித் தொகையை 10 % அரசும் 90 % பாலிசிதாரர்களும் பங்கிடுவது ஆகிய அம்சங்களுடனான மசோதாவை யு.பி.ஏ அரசு தனது முதல் ஆட்சிக்காலத்திலேயே அறிமுகம் செய்தது. நாடாளுமன்றம் கலைந்த போது அந்த மசோதாவும் காலாவதியாகிப் போனது.
2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இதே மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் கடுமையான எதிர்ப்பால் மசோதா, நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மசோதாவின் மோசமான அம்சங்களை ஆணித்தரமாக முன் வைத்தது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் முன் வைத்த அனைத்துக் கருத்துக்களையும் நிலைக்குழு ஏற்றுக் கொண்டது.
எல்.ஐ.சி யின் மூலதனத்தை உயர்த்துவதாக இருந்தால் அது நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் மட்டுமே அரசு நிதியிலிருந்தே அளிக்க வேண்டும், எல்.ஐ.சி யின் பொதுத்துறைத்தன்மை எந்நாளும் நீர்த்துப் போக அனுமதிக்ககூடாது, எல்.ஐ.சி பாலிசிகளுக்கு வழங்கப்பட்ட அரசு உத்தரவாதம் தொடர வேண்டும். அலுவலகம் திறக்கும் உரிமை எல்.ஐ.சி யிடமே நீடிக்க வேண்டும், பாலிசிதாரருக்கு வழங்கப் படும் உபரித் தொகை குறைக்கப்படக் கூடாது என்று நிலைக்குழு தனது அறிக்கையில் பரிந்துரை அளித்தது.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் முன்வைத்த கருத்து நியாயமானது, சரியானது என்று நிலைக்குழு தனது ஒவ்வொரு பரிந்துரையிலும் சுட்டிக் காட்டி இருந்தது கவனத்திற்குரியது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நிலைக் குழுவின் முன் அளித்த சாட்சியமே, நிலைக்குழு முடிவிற்கு அடிப்படையாக இருந்தது என்பதை இதிலிருந்து நாம் உணர முடியும்.
மார்ச் 2010 ல் நிலைக்குழு அளித்த பரிந்துரைகளே அகில இந்திய இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எடுத்த சரியான நிலைப்பாட்டிற்குச் சான்று. ஆனால் கிட்டத்தட்ட இருபது மாதங்கள் மத்தியரசு இப்பரிந்துரை குறித்து எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது. இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வோம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தது. நிலைக்குழு பரிந்துரை அளித்து விட்டது என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சுணக்கமாய் இருந்து விடவில்லை.
எல்.ஐ.சி சட்ட திருத்த மசோதாவிற்கும் இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவிற்கும் எதிராக இயக்கங்கள் தொடர்ந்தது. இம்மசோதாக்களுக்கு எதிராக நாடெங்கும் கருத்தரங்குகள், பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றது. பத்து நாட்களுக்குள்ளாக, பதினெட்டு லட்சம் பாலிசிதாரர்களிடமிருந்து அஞ்சலட்டைகள் பெறப்பட்டு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உல்கெங்கும் உலகமயம் தோற்றுப்போய் வருகின்ற சூழலில் கூட அவற்றை தொடர்ந்து அமுலாக்கும் மோசமான கொள்கைகளைக் கொண்ட மத்தியரசு, நிலைக்குழு பரிந்துரைகளுக்கு மாறாக மசோதாவை நிறைவேற்றத் தலைப்பட்டால் ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் முடிவெடுத்தது. பென்ஷன் ஆணைய மசோதா பற்றி நிலைக்குழு அளித்த பரிந்துரைகளை மத்தியரசு நிராகரித்தது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணியில் 12.12.2011 அன்று எல்.ஐ.சி சட்ட திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் அதிசயமாக அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுமே, இந்திய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் எல்.ஐ.சி ஆற்றி வரும் பணிகளை பாராட்டினார்கள். எல்.ஐ.சி தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக தொடர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். எல்.ஐ.சி பாலிசிகளுக்கு அரசு வழங்கியுள்ள அரசு உத்தரவாதம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார் நிறுவனங்களோடு ஒப்பிடக்கூடாது என்று அழுத்தமாய் சொன்னார்கள். தனியார் கம்பெனிகள் அப்படியொன்றும் சிறப்பான சேவைகள் செய்யவில்லை, தனியார் கம்பெனிகள் மீது புகார்கள் குவிகின்றது என்பதை சுட்டிக் காட்டினார்கள். நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்பதை ஆணித்தரமாகக் கூறினார்கள்.
நீண்ட நேரம் அதிலும் பெருமளவு அமைதியாக நடைபெற்ற விவாதத்தின் முடிவிலே பேசிய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா, மத்தியரசு நிலைக்குழு அளித்துள்ள பெரும்பாலான பரிந்துரைகளை ஏற்பதாக அறிவித்தார். அதன்படி மசோதாவில் மாறுதல்கள் செய்யப்பட்டன.
எல்.ஐ.சி யின் மூலதனம் அதிகரிக்கப்படுமானால் அது நாடாளுமன்ற அனுமதியின் மூலமே நடைபெறும். எல்.ஐ.சி நூறு சதவிகிதம் அரசு நிறுவனமாகவே நீடிக்கும்.
எல்.ஐ.சி பாலிசிகளுக்கான அரசு உத்தரவாதம் தொடரும்.
கிளை, கோட்ட அலுவலகங்கள் துவங்கும் உரிமை எல்.ஐ.சி யிடமே நீடிக்கும்.
உபரி பகிர்வு தொடர்பான மாறுதல் என்பது புதிய பாலிசிதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். கூடுதலாக அரசுக்கு ஒதுக்கப்படும் உபரியிலும் சால்வன்ஸி மார்ஜின் மற்றும் எல்.ஐ.சி விரிவாக்கம் ஆகியவைக்கு மேலாக உள்ள தொகையும் பாலிசிதாரர்களுக்கே அளிக்கப்படும்.
இந்த அடிப்படையில் எல்.ஐ.சி சட்ட திருத்த மசோதா 2009 நேற்று நிறைவேறியது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடர்ச்சியாய் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளும் இயக்கங்களும் நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே குரலில் பேச வைத்திருக்கிறது.
உலகமயமாக்கல் கொள்கைகளில் ஊறிப்போன மத்தியரசின் குணாம்சத்தைப் பார்க்கிறபோது, இந்த முன்னேற்றம் மகத்தானது. நமது உறுதியான தொடர்ச்சியான போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி இது. எல்.ஐ.சி நிறுவனத்தை மேலும் ஒரு முறை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் பாதுகாத்துள்ளது.
இந்த வெற்றி நமக்கு உற்சாகம் அளிக்கிறது. இந்த உற்சாகம் எவ்வித தொய்விற்கும் வழி வகுக்கக்கூடாது. இந்த வெற்றி தந்த எழுச்சியோடு இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை சந்திப்போம். இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த நடைபெறும் முயற்சிகளை முறியடிப்போம். என்றும் வெற்றி நமதே என அணி வகுப்போம்.
Superb article comrade! Kudos to AIIEA for this Victory.
ReplyDeleteCongratulations Comrade! Truly commendable Victory, the people of india thank AIIEA for this huge victory.
ReplyDeleteராமன் அவர்களே ! சங்கத்தின் இணச்செயலாளராக இருந்தவர் தோழர் சுனில் மொய்த்ரா.பின்னர் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவரானார். எல்.ஐ.சியை பிரிக்கும் திட்டத்தை அரசு கொண்டுவந்தது. அதனை சங்கம் எதிர்த்தது. நிலைக்குழுவிலும் எதிர்ப்பு வந்தது அரசு பணிந்தது பிரதமர் ராஜீவ் திட்டத்தகைவிட முடிவு செய்தார். அதனை அறிவியுங்கள் என்றர் சுனில். பிரதமர் ராஜீவ் நீங்களே அறிவியுங்களென்றார். சுனில் மொய்த்ரா எல்.ஐ.சி.யை பிரிக்கும் திட்டத்தை அரசு கைவிடுவதாக அறிவித்தார்..நிருபர்களிடம் அறிவித்தார். தோழரே! உங்கள் இடுகைஎன் கண்களை ஈரமாக்கி விட்டது. Long live A. I. I. E.A ---காஸ்யபன்
ReplyDelete