இது எங்கள் சங்கத்தின் சுற்றறிக்கைதான். ஆனால் அனைவருக்கும் பொதுவானது என்று நான் கருதுகின்றேன்.
ஆகவே இங்கே. . . .
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம், பதிவு எண் 640 / என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 57 / 11 01.12.2011
அனைத்து உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழரே,
அகில இந்திய செயலக முடிவுகள்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலகக் கூட்ட முடிவுகள் பற்றிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை கீழே தந்துள்ளோம். அனைத்து முடிவுகளையும் முழுமையாக அமுலாக்குவதில் முன்னணிக் கோட்டமாக திகழ்வோம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒம் எஸ்.ராமன்
பொதுச்செயலாளர்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலகக் கூட்டம் 19.11.2011 அன்று திட்டமிட்ட படி நடைபெற்றது. தோழர் அமானுல்லாகான், தலைவர், ஏ.ஐ.ஐ.இ.ஏ செயலகக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
சீர்திருத்தங்களை வேகப்படுத்த மத்தியரசு முயற்சி செய்கின்ற வேளையில்,பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் நடைபெற்ற இயக்கம் உட்பட தனியார்மயத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டது. நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே, எல்.ஐசி சட்ட திருத்த மசோதா 2009 மற்றும் பென்ஷன் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று ஆணைய மசோதாக்களை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு நிறைவேற்ற மத்தியரசு அலுவல் பட்டியலில் இணைத்துள்ளது. வலிமையான அமைப்புரீதியான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டிய தீவிரமான சூழல் இது.
12 மார்ச் 2010 அன்று நாடாளுமன்ற நிதித்துறை நிலைக்குழு, நாடாளுமன்றத்திற்கு ஒருமனதாக சமர்ப்பித்த அறிக்கையில் எல்.ஐ.சி யின் மூலதனத்தை ரூ 5 கோடியிலிருந்து 100 கோடியாக உயர்த்தலாம், 100 கோடியிலிருந்து மேலும் உயர்த்த வேண்டும் என்றால் எல்.ஐ.சி சட்டத்தில் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்து அதன் அனுமதி பெறுவதன் மூலமே செய்திட வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் அரசாணை மூலம் எல்.ஐ.சி யின் மூலதனத்தை உயர்த்துவது என்பதை நிலைக்குழு நிராகரித்து விட்டது என்பதை நாம் பார்க்க முடியும்.
எல்.ஐ.சி யின் உபரித்தொகையை பங்கிடுவதில் தற்போதுள்ள நடைமுறையான பாலிசிதாரர்களுக்கு 95 % மும் அரசாங்கத்திற்கு 5 % மும் என்றுள்ள நடைமுறையில் எவ்வித மாற்றமும் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லைஎன்றும் தெளிவாக தெரிவித்து விட்டது. இன்சூரன்ஸ் வணிகத்தில் எல்.ஐ.சி யின் தலையாய நிலைக்கு அரசு உத்தரவாதம் என்பது அடிப்படையாகும், எல்.ஐ.சி க்கு நாடாளுமன்றம் அளித்துள்ள இந்த சிறப்பு நிலையை, இன்சூரன்ஸ்துறையில் சம தள ஆடுகளம் வேண்டும் என்றோ, வேறு ஏதாவது காரணங்கள் சொல்லியோ நீர்த்துப்போக அனுமதிக்க முடியாது என்றும் நிலைக்குழு கூறிவிட்டது.
14.03.2010 தேதியிட்ட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுற்றறிக்கை எண் 10/2010 ல் இந்த முன்னேற்றத்திற்காக ஊழியர்களைப் பாராட்டிய போது, பின் வரும் எச்சரிக்கையையும் ஏ.ஐ.ஐ.இ.ஏ அளித்தது.
"நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள அறிக்கை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிலைப்பாடு சரியானது என்பதை நிரூபித்து விட்டது. ஜனநாயக மரபுகளின் படி நிலைக்குழு அளித்துள்ள ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் மத்தியரசு ஏற்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அவை தங்களுக்கு வசதியாக இல்லாத போது அரசாங்கம் ஜனநாயக நெறிமுறைகளை கடைபிடிக்காது என்று நம் அனுபவம் கூறுகின்றது. எனவே நாம் விழிப்புடன் இருந்து இன்சூரன்ஸ்துறையில் மேலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு எதிரான நம் போராட்டத்தை எந்த தொய்வும் இல்லாமல் உறுதியாக தொடர வேண்டும்."
இந்த அரசின் குணாம்சம் பற்றிய நம் மதிப்பீடு மிகவும் சரியானது என்பது இப்போது தெரிய வருகின்றது. நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்காமல் முந்தைய வடிவில் எவ்வித மாற்றமும் இல்லாமலேயே மசோதாவை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. ஜனநாயகத்தின் மீது அரசிற்கு மதிப்பு கிடையாது என்பதையும் புதிய பொருளாதரக் கொள்கைகள் மற்றும் தனியார்மயத்தின் மீது இந்த அரசிற்கு உள்ள உறுதியான பற்றையுமே இது காண்பிக்கிறது.
எல்.ஐ.சி யை தனியார்மயமாக்குவதற்கான முதல் கட்டம் இது. இதற்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். " பாலிசிதாரர் மற்றும் எல்.ஐ.சி யின் நலன்களுக்கு விரோதமாக அரசு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றினால் உடனடியாக ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்ற ஏ.ஐ.ஐ.இ.ஏ வைர விழா ஆண்டு மாநாடு எடுத்த முடிவினை அமுலாக்குவது என்று செயலகம் வலியுறுத்துகின்றது.
பென்ஷன் ஆணைய மசோதா விஷயத்திலும் இந்த அரசு ஜனநாயக மாண்புகளை மதிக்கவில்லை என்பதை நம்மால் பார்க்க முடியும். மசோதாவை நிறைவேற்றுவது என மத்திய அமைச்சரவை முடிவெடுத்த போது, நிலைக்குழுவின் கீழ்க்கணட அனைத்து முக்கிய பரிந்துரைகளையும் நிராகரித்து விட்டது.
சேமிப்பின் மீதான வருமானம் உறுதி செய்யப்பட வேண்டும்.
அன்னிய மூலதன வரம்பு சட்டத்திலேயே குறிப்பிடப்பட வேண்டும். எதிர்காலத்தில் உயர்த்தப்பட வேண்டுமானாலும் நாடாளுமன்ற அனுமதி தேவை.
ஊழியர்/ தொழிலாளி யின் தேவைக்கு ஏற்ப எத்துனை முறை வேண்டுமானாலும் நிதியிலிருந்து பணத்தை திரும்பப் பெறலாம்.
ஆனால் மத்தியரசோ சேமிப்பிற்கு எவ்வித குறைந்தபட்ச உத்தரவாதமும் கூட அளிக்க விரும்பவில்லை. அன்னிய மூலதன வரம்பை அரசாணை மூலமே அன்னிய மூலதன வரம்பை உயர்த்த விரும்புகின்றது. அதே போல் ஊழியர் ஒரே ஒரு முறைதான் அதுவும் மிகவும் அசாதாரணமான சூழலில் மட்டுமே பணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. இம்மசோதாவிற்கு எதிராக அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது என்றும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் செயலகம் முடிவெடுத்துள்ளது.
அதே போல் இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை 49 % ஆக உயர்த்த வழி செய்யும் இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதிலும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்பதிலும் அரசு வேகம் காண்பிக்கிறது. இம்மசோதா மீது உடனடியாக அறிக்கை தருமாறு நிலைக்குழுவிற்கு நிர்ப்பந்தம் அளிக்கிறது.
அதே நேரம் அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதில் வேகம் காண்பிக்குமாறு பன்னாட்டு நிறுவனங்கள் பிரதமருக்கு அழுத்தம் தருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் காப்பீட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு 15.11.2011 அன்று பிரதமருக்கு அளித்துள்ள கடிதத்தில் “ அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதாலும், மறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கிளைகளை இந்தியாவில் திறக்க அனுமதிப்பதாலும் கிடைக்கிற உடனடி மற்றும் நீண்ட கால பலன்களை கணக்கில் கொண்டு அதற்கேற்றார்போல முடிவெடுக்குமாறு” வலியுறுத்தியுள்ளது. தாராளமய மோகத்தில் முற்றிலுமாய் மூழ்கிப்போன மத்தியரசும் இதற்கு இசைய தயாராகவே உள்ளது. இச்சவாலை சந்திக்க இன்சூரன்ஸ் ஊழியர்கள் தயாராகவே இருந்திட வேண்டும். மசோதாவை மத்தியரசு நிறைவேற்றினால் ஆயுள் மற்றும் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் உடனடியாக ஒரு சக்தி மிக்க ஒரு நாள் வேலை நிறுத்தம் மூலம் பதிலடி அளிக்க வேண்டும். மக்கள் சிரமப்பட்டு ஈட்டிய சேமிப்பை தனியாருக்கு தாரைவார்க்க முயலும் மத்தியரசின் சதிகள் பற்றி மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
மத்தியரசின் முயற்சிகளுக்கு எதிராக நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாளன்று அனைத்து எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் அலுவலகங்கள் முன்பாக மதிய வேளை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் செயலகக் கூட்டம் முடிவெடுத்தது. இம்முடிவு நாடெங்கும் வெற்றிகரமாக
அமுலாக்கப்பட்டது. பல்வேறு மண்டல், கோட்ட அமைப்புக்கள் வெளியிட்ட பத்திரிக்கைச் செய்திகளை நாளிதழ்கள் வெளியிட்டு நம் இயக்கத்தை மக்களிடம் எடுத்துச் சென்றன.
வங்கி மற்றும் காப்பீட்டுத்துறைகளில் உள்ள பொதுவான பிரச்சினைகளுக்காக கூட்டு இயக்கங்கள் நடத்தும் வாய்ப்பு உள்ளதையும் செயலகம் கவனத்தில் கொண்டுள்ளது.
தற்போதைய சூழல் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு சாதகமாக உள்ளது என்பதில் செயலகத்தின் புரிதல் ஒரு மனதாக இருந்தது. நவீன தாராளமயமாக்கல் மற்றும் முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கு எதிராக உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் ஒன்று பட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் நடைபெறும் “ வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் “ போராட்டமும் அனைத்து
கண்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் போராட்டங்களும் முதலாளித்துவத்தைத் தவிர வேறு மாற்று கிடையாது என்ற கருத்து உருவான நாட்டினிலேயே தாராளமய, உலகமயமாக்கலுக்கு எதிராக மக்களின் கோபம் அதிகரித்து வருகின்றது என்பதன் அடையாளமாகும். இப்போராட்டங்களில் எண்ணிக்கை அதிகமான அளவில் அதிகரித்து வருவதால் துவக்கத்தில் இவற்றை வெறும் அராஜகம் என ஒதுக்கிய ஊடகங்களே இவை குறித்து கவனித்து எழுத, காண்பிக்க வேண்டியுள்ளது.
புதுடெல்லி மாநாட்டில் அறைகூவல் விடுக்கப்பட்ட 8 நவம்பர் 2011 அன்றைய சிறை நிரப்பும் போராட்டம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அன்று தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறறுத்தி கைதானதன் மூலம் வெற்றிகரமாக அமுலானது என்பதை அகில இந்திய செயலகம் கவனத்தில் கொண்டது. இந்தியாவில் உள்ள தொழிற்சங்கங்கள் மத்தியில் உருவாகி வரும் விரிந்த ஒற்றுமை காரணமாக தனியார்மயக் கொள்கைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மைப் பிரச்சினைகளுக்கு எதிரான குரல் நாளடைவில் மேலும் வலிமை பெறும் என்பதில் செயலகம் நம்பிக்கையாக உள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்காக, நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக தொழிற்சங்க இயக்கங்கள் கூட்டாக முடிவு செய்யும் போராட்டங்களில் பெருமித உணர்வோடு பங்கேற்க வேண்டுமாறு இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு செயலகம் அறைகூவல் விடுக்கிறது. எதிர்காலம் தொழிலாளர்களுடையதுதான் என்ற நம்பிக்கையோடு போராட்டங்களில் இணைந்திடுவோம்.
தோழமையுள்ள
ஒம் .. கே.வேணுகோபால்
பொதுச்செயலாளர்
உங்கள் சங்க சுற்றறிக்கையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... நேரம் கிடைக்கும் பொழுது முழுவதும் படிக்கிறேன்
ReplyDelete