Monday, December 5, 2011

போர் முழக்கம் ஒலிக்கும் நாள்




ஆட்சியாளர்களுக்கு  மக்களைப்   பற்றிய   கவலை சிறிது  கூட
என்றுமே  இருந்தது  கிடையாது.  அதிகார வர்க்கம்  ஆளுபவர்களுக்கு
அடி பணிவதாகக் காட்டிக் கொண்டே  தாங்கள்  என்ன நினைக்கிறதோ
அதை மட்டும்  செய்து கொண்டே  இருக்கும்.  நீதித்துறை  எப்போது
எப்படி செயல்படும்  என்பது யாருக்கும்  தெரியாது. ஏன்  அதற்கே 
தெரியாது! அதனை புரிந்து கொள்வதும் யாருக்கும் இயலாது. 


ஜனநாயகத்தின்  இந்த மூன்று தூண்கள் தான்  இப்படி என்றால் 
நான்காவது தூண் என்று  வர்ணிக்கப்படும்  ஊடகங்களின் நிலையோ
இன்னும் மோசம்.  லாபம் ஈட்ட   பரபரப்பு  மார்க்கத்தை தேர்ந்தெடுத்து
விட்ட  முதலாளித்துவ ஊடகங்கள்  சமூக பொறுப்புணர்வு பற்றி
பெரும்பாலும்  கவலைப்படுவதே இல்லை.  அவர்கள் நினைத்தால்
சில பிம்பங்களை  உருவாக்கி முன்னிருத்துவார்களே தவிர
பரபரப்பு  இல்லாத பிரச்சினைகளை  தீண்ட மாட்டார்கள். 


இப்படிப்பட்ட  சூழல் நிலவும் இந்தியாவில்  மக்களுக்காக கவலைப்
படக்கூடியவர்களாக  இருப்பது  இந்தியத் தொழிலாளி வர்க்கம்தான்.


இந்தியத் தொழிலாளி வர்க்கம் தற்போது முன் வைக்கிற கோரிக்கைகள்
ஒட்டு மொத்த இந்தியர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளாக 
உருவெடுத்துள்ளது. 


விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும்  என்று தொடர்ந்து
குரல் கொடுப்பது தொழிற்சங்க இயக்கம். அரசு என்ன செய்தால் 
விலைவாசியை கட்டுப்படுத்த முடியும் என்று ஆக்க பூர்வமான
ஆலோசனைகளை வழங்கியபோதும் அதை ஏற்று நடத்த உலகமயக்
கொள்கைகளில் மூழ்கிப் போன ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. 
         


இந்தியா இன்று ஓரளவாவது  முன்னேற்றம் அடைந்துள்ளது என்றால்
அதற்குக் காரணம் பொதுத்துறை நிறுவனங்கள்தான். இட ஒதுக்கீடு
மூலமாய் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பலன் கிட்டியுள்ளது என்றால் 
அது பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாகத்தான். அவற்றை 
அழிக்கும் முயற்சிக்கு  எதிராக  தொடர்ந்து போராடி வருவது 
தொழிலாளி வர்க்கம்தான். 

அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தை சீரழிக்க, அதன் எதிர்காலத்தை
நாசமாக்க, அவர்கள் பெற்ற உரிமைகளை பறிக்க ஆட்சியாளர்கள் 
முயல்கின்றனர். பன்னாட்டுக் கம்பெனிகளின் அடிமைகளாக இந்திய
தொழிலாளர்களை மாற்ற திட்டமிடுகின்றனர். 

இந்த முயற்சிகளுக்கு  எதிராக இந்திய தொழிலாளி வர்க்கம் ஓரணியில்
திரண்டு நிற்பது என்பதுதான் ஆட்சியாளர்கள் எதிர்பாராதது. நவம்பர்
எட்டு அன்று தேசமெங்கும்  உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள்
சிறை சென்றார்கள். 

அப்போராட்டத்தின் தொடர்ச்சியாய்  வரும் 28  பிப்ரவரி 2012  அன்று
நாடு தழுவிய வேலை நிறுத்தம் மேற்கொள்ள அனைத்து தொழிற்சங்க
இயக்கங்களும் முடிவெடுத்துள்ளனர். அதிலே  காங்கிரஸ் கட்சியின்
ஐ.என்.டி.யு.சி யும் பாஜகவின் பி.எம்.எஸ் ம்  அடக்கம். 

இந்தியாவின் இறையாண்மையை காக்கும் இந்த வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபடுவது   என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்
சங்கமும் முடிவெடுத்துள்ளது. 

உழைக்கும் மக்களின் போர் முழக்கம் ஒலிக்கும் நாள் 28 பிப்ரவரி 2012 .
அதிலே  பங்கேற்க  இப்போதே  நாம் தயாராவோம். 

(எங்கள் சங்க மாத இதழ் சங்கச்சுடருக்காக எழுதியது)      

1 comment: