மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்தவர் ஏ.ஆர்.அந்துலே. அவசர நிலைக்காலத்தில் சஞ்சய் காந்தியின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர். அந்த நெருக்கம் அவருக்கு மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை தேடிக்கொடுத்தது. இந்திரா பிரதீபா பிரதிஷ்டான் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை துவக்குகின்றார். விவசாயிகளுக்கு உதவுவது என்பது அந்த அறக்கட்டளையின் நோக்கம் என்று சொல்லப்பட்டது. அதனால் ஒவ்வொரு கூட்டுறவு சொசைட்டியும் அந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தல் என்ற பெயரில் கட்டளை பிறப்பிக்கிறது. லட்சக் கணக்கில் பணம் குவிகின்றது. சிமெண்டிற்கு கட்டுப்பாடு மிகுந்த காலம் அது. சிமெண்ட் ஒதுக்கீடு செய்ய ஒரு மூட்டைக்கு நாற்பது ரூபாய் அறக்கட்டளைக்கு வழங்கும் கட்டிட நிறுவனங்களுக்கு சிமெண்ட் ஒதுக்கப்பட்டது. அந்துலேவிற்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு மட்டும் ஏழாயிரம் டன் சிமெண்ட் ஒதுக்கப்பட்டது. சாதாரண மக்கள் வீடு கட்ட சிமெண்ட் இல்லாமல் சிரமப்பட்டபோது, அறக்கட்டளைக்கு மூட்டைக்கு நாற்பது ரூபாய் கொடுத்த பணக்காரர்களுக்கு மட்டும் தங்கு தடையின்றி சிமெண்ட் கிடைத்துக் கொண்டே இருந்தது. லட்சக் கணக்கில் அறக்கட்டளைக்கு பணம் குவிந்து கொண்டே இருந்தது.
ஏழை விவசாயிகளுக்கு உதவத்தானே வசூல் செய்கின்றனர், இதிலே என்ன தவறு என்று கேட்கலாம். இங்கேதான் இருந்தது அந்துலேவின் சூட்சுமம். அறக்கட்டளையை மூடக்கூடிய சூழல் வந்தால் அதன் வங்கிக் கணக்கில் உள்ள பணம் எல்லாம் அந்துலேவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேரும்படி அறக்கட்டளையின் விதி உருவாக்கப் பட்டிருந்தது. ஆக அறக்கட்டளையால் பலன் பெற்ற ஒரே ஒரு ஏழை விவசாயி அந்துலே மட்டும்தான்.
இந்த ஊழலால் அவரது முதலமைச்சர் பதவி பறிபோனது. ஆனால் இறுதியில் நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தது. பல பல ஆண்டுகளுக்குப் பின் மத்தியமைச்சர் பதவி கிடைத்தது. மாலேகான் குண்டு வெடிப்பில் சங் பரிவார அமைப்புக்களுக்கு தொடர்பு உண்டு என சொன்னதற்காக அவை அவர் மீது ஆத்திரம் கொண்டது. 26/11 மும்பை தீவிரவாதச் செயலில் உயிர் நீத்த மும்பை காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே வின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என அந்துலே சொன்னதை வைத்து பிரச்சினையை உருவாக்கி அந்துலேவை பதவி விலக வைத்து விட்டார்கள்.
ஆனால் அதே கேள்வியை கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே எழுப்பியதும், தரமற்ற குண்டு துளைக்காத கவசம் காணாமல் போனதும் மாலேகான், சம்ஜ்யுக்தா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மெக்கா மசூதி ஆகியவற்றில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவங்களில் சங் பரிவார அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும் ஊழல் பேர்வழியாக இருந்தாலும் கூட, அந்துலே இந்த விஷயத்தில் சரியாக இருந்துள்ளார் என்பதை உணர்த்துகின்றது.
( எங்கள் சங்க மாத இதழ் சங்கச்சுடரில் வெளியாகும் ஊழல்களின் ஊர்வலம் தொடருக்காக எழுதியது )
அருமையான பதிவு.
ReplyDelete