Monday, December 9, 2013

கம்யூனிஸ்ட் கட்சிக்கு காசு கொடுத்தா கடவுள் கண்ணை குத்திடுமா?



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக வீடு வீடாக சென்று உண்டியல் வசூல் செய்யும் பணி வேலூர் நகரத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

மக்களிடம் செல்வது எப்போதுமே அனுபவங்களை அள்ளித் தரும் பொக்கிஷமாகத்தான் இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கு இருபத்தி ஐந்து பேர் நிதி அளிப்பார்கள் என்றால் இப்போது நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது என்ற அளவில் வரவேற்பு உள்ளது. உற்சாகமும் அளிக்கிறது. பல வித்தியாசமான அனுபவங்களும் கிடைக்கிறது. அப்படி ஒரு நாள் முழுதும் மனதில் அசை போட வைத்த அனுபவத்தின் பகிர்வு இது.

நேற்று நாங்கள் வசூலுக்கு சென்ற இடத்தில் ஒரு சகோதரி முதலில் தயங்கினார். எங்களோடு வந்தவர்களில் ஒரு தோழர் அப்பெண்ணின் சகோதரருக்கு நண்பர் என்பதால் ஐம்பது ரூபாய் கொடுத்தார். பிறகு அந்தப் பணத்தை டீ செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள், நிதியில் சேர்க்க வேண்டாம் என்றார். நாங்கள் புறப்பட்டதும் அந்த தோழரை மீண்டும் அழைத்து கட்சி நிதியில் சேர்க்காமல் டீ செலவிற்கு மட்டுமே பயன்படுத்துங்கள் என்று வற்புறுத்தினார். நாங்கள் வந்து விட்டோம்.

அரை மணி நேரம் கடந்திருக்கும். இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி இருப்போம். அந்த சகோதரி எங்களை தேடி வந்து விட்டார். கடவுள் இல்லை என்று சொல்கிற கம்யூனிஸ்ட் கட்சிக்கு பணம் கொடுத்து விட்டேன் என்று குற்ற உணர்வு என்னை தாக்குகிறது. மன சாட்சி உறுத்துகிறது என்று சொல்லி அந்த ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விட்டார். பணத்திற்காக அவர் சொல்லவில்லை என்பது நன்றாக புரிந்தது. கடவுள் இல்லை என்று சொன்ன கட்சிக்கு காசு தந்து விட்டோமே என்ற உணர்வுதான் மேலோங்கி இருந்தது.

அந்த சகோதரியை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யார் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத படி மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளோம் என்பதைக் கூட அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. கடவுளின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் நடத்தும் தாக்குதலில் இருந்து அவர்களுக்கு காவல் அரணாக இருப்பது கம்யூனிஸ்ட் கட்சிதான் என்று கூட தெரியாத அந்த சகோதரிக்கு அவர்கள் நம்பும் கடவுள்தான் நல்ல புத்தி தர வேண்டும்.

பின் குறிப்பு : அவசரம் அவசரமாக உண்டியல் வசூலை கிண்டலடித்து பின்னூட்டம் போட நினைக்கும் அனானிகள் விலகிப் போய் விடுங்கள். மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்கள் கொடுக்கும் தொகை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதை பெறுவதை பெருமையாக நினைக்கிறோம். உங்கள் நக்கல், நையாண்டிகள் எங்களை எதுவும் செய்யாது. கொள்ளையடிக்கும் கட்சி அல்ல, கொள்கைப் பிடிப்பு உள்ள கட்சி. ஆகவே பிரசுரமாக வாய்ப்பில்லாத பின்னூட்டத்தை எழுதி உங்கள் நேரத்தை விரயம் செய்யாதீர்கள். என்னுடைய நேரத்தையும்.

1 comment:

  1. கம்யூனிஸ்ட் தோழர்கள் உண்டியல் ஏந்துபவர்கள் தான். ஆனால் மக்களின் "உண்டி"யை கொள்ளை அடிப்பவர்களை "உண்டி" வில் கொண்டு துரத்தி அடிப்பவர்கள் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிரார்கள் ?

    ReplyDelete