Saturday, December 28, 2013

கல்வி அளிக்க உயர்ந்த கரங்கள்



சுனாமியில் தந்தையை இழந்திருந்த பாக்கியலட்சுமி என்ற மாணவியின் கல்வி குறித்து சங்கம் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் கடமை பாக்கியிருந்தது.

சுனாமி நிவாரணப்பணிகள் குறித்த ஒரு ஆவணப்படம் தயாரித்து அதனை சி.டி யாக்கி விற்பனை செய்வது, அந்த தொகை மூலம் பாக்கியலட்சுமியின் கல்விச் செலவை சமாளிப்பது என்று முடிவு செய்யப்பட்டு ஆவணப்படம் தொகுக்கும் பணி தொடங்கியது. நம்முடைய இயக்கத்தில் ஒருவராகவே கலந்து போன ஆடியோ சேகர் இப்பணியில் நமக்கு மிகவும் உதவினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இருபதாவது பொது மாநாடு பெங்களூர் நகரத்தில் துவங்க இருந்ததால், சி.டி விற்பனைக்கான உரிய இடமும் காலமும் அதுதான் என்பதால் அதற்குள் பணியினை முடிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் கிடையாது. நாம் குடும்பங்களுக்கு நிவாரணப் பை அளிக்க சென்ற போது வந்திருந்த பத்திரிக்கையாளர் எடுத்திருந்த சில வீடியோ காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், புகைப்படங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது. ஒளி, ஒலி இவை இரண்டிலுமே தெளிவில்லாவிட்டாலும், நம் நோக்கத்தில் தெளிவு இருந்தது. தமிழ், ஆங்கிலம் ,ஹிந்தி என்று மூன்று மொழிகளில் குரல் பதிவு செய்யப்பட்டு தனித்தனியாக தயாரிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் தோழர் எஸ்.ராமனும் தமிழில் தோழர் ஏ.நாராயணனும் குரல் கொடுக்க ஹிந்தியில் குரல் கொடுக்க  அன்றைய தொழிலுறவு மேலாளர் திரு டி.எஸ்.சுப்ரமணியன் முன் வந்தார்.

அகில இந்திய மாநாட்டில் சுனாமி நிவாரண சி.டி க்களை அகில இந்தியத் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் வெளியிட பொதுச்செயலாளர் தோழர் கே.வேணுகோபால் முதல் பிரதிகளை பெற்றுக் கொண்டார். இந்த சி.டி க்கான நோக்கத்தை தலைவர்கள் இருவருமே விளக்கி மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகள், பார்வையாளர்கள் வாங்கி உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். மாநாட்டு வரவேற்புக்குழு சி.டி விற்பனைக்காக அரங்கத்தின் நுழைவாயிலிலேயே ஒரு கேந்திரமான இடத்தை ஒதுக்கித் தந்து உதவினார்கள். பிரதிநிதிகளாகவும் பார்வையாளர்களாகவும் வந்திருந்த நமது கோட்டத் தோழர்களே இடைவேளை நேரங்களில் விற்பனையை கவனித்தார்கள். மாநாட்டு கண்காட்சியிலும் நிவாரணப்பணிகளின் புகைப் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தோழர்கள் மத்தியில் சி.டி க்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஹிந்தி மற்றும் ஆங்கில சி.டி க்கள் பெரும்பாலும் விற்றுப் போயிருந்தது. மாநாட்டின் இறுதி நாளில் நமக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

மாநாட்டு அரங்கில் நாம் தயாரித்த ஆவணப்படத்தை திரையிட வேண்டும் என்ற நமது விருப்பத்தை நிறைவேற்றிய வரவேற்புக்குழுத் தோழர்கள் இன்னொரு இன்ப அதிர்ச்சியும் அளித்தார்கள். பாக்கிய லட்சுமியின் கல்விச் செலவிற்காக ரூபாய் பத்தாயிரம் வரவேற்புக்குழுவின் சார்பில் அளிக்கப்பட்டது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம். வேறு பல தோழர்களும் தேடி வந்து நிதி அளித்தார்கள். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான மூத்த தலைவர், தோழர் சந்திர சேகர போஸ் அவர்கள் ரூபாய் ஐநூறு அளித்த போது பதில் பேச யாருக்கும் வார்த்தைகள் எழவில்லை. வேலூர் கோட்டத் தோழர்களின் பணிக்கு இதை விட வேறு அங்கீகாரம் வேண்டுமா என்ன?

திரட்டப்பட்ட நிதி கொண்டு செல்வி பாக்கியலட்சுமியின் கல்விக்கான செலவை பதினொன்றாவது மட்டும் பனிரெண்டாவது வரை கடலூர் செயிண்ட் ஜோசப் பள்ளியில் படிக்க வைத்தோம். பின்பு அவர் இளங்கலை ரசாயணம் படிக்கவும் மூன்று ஆணடுகளும் முழுமையாக கட்டணம் செலுத்தி புத்தகம் வாங்கிக் கொடுக்கவும் செய்தோம். இந்த பணியை கடலூர் கிளைச்சங்கத் தோழர்கள் மிகவும் செம்மையாக செய்தார்கள். இன்று அவர் பட்டதாரியாக திகழ்வதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான் காரணம் என்பது நமக்கு பெருமையளிக்கிற ஒன்று.

இந்த பணியை  அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் சங்கம் கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டு அறிக்கையிலும் பின் வருமாறு பதிவு செய்திருந்தது.

With Voluntary contributions received, the ICEU, Vellore Division, ably assisted by its Cuddalore Branch Unit is continuing to take care of the educational expenses of Kumari  Bakkialakshmi. In 2004, when, Tsunami hit their village, she was a 10th Standard student and for the Higher Secondary Course, she was admitted in a reputed school at Cuddalore and she secured 73 % marks in the 12th Standard Public Examination. Now she has been admitted in B.Sc (Chemistry) Course in St John’s College, Cuddalore. All the amounts required for college fees and for purchase of books were funded by the ICEU, Vellore Division. The Divisional Union is committed to take care of all expenses required  by her to complete her college studies.

இந்தப் பணிக்காக திரட்டப்பட்டு மீதமிருந்த தொகையும் இரு மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த பின்னர் பயன்படுத்தப்பட்டது.

வேலூர் கோட்டத் தோழர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் கடுமையான உழைப்பும்  முழுமையாக வெளிப்பட சுனாமி நிவாரணப் பணிகள் காரணமாக இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்களின் முழுமையான வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் இருந்ததால் மட்டுமே நம்மால் உதவிகளை தகுதியான பயனாளிகளுக்கு செய்ய முடிந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சுனாமி நிவாரணப் பணிகளில் வேலூர் கோட்டம் ஆற்றிய பணிகளுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒரு சிறப்பான அங்கீகாரத்தை அளித்தது. ஆம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர நிவாரணமாக ஒரு சமுதாயக் கூடத்தை கட்டித் தரும் பொறுப்பு வேலூர் கோட்டத்திற்கு கிட்டியது.

அந்த பணி குறித்து விரிவாக இன்னொரு அத்தியாயத்தில் காண்போம்.  

No comments:

Post a Comment