Tuesday, December 10, 2013

காங்கிரஸின் வீழ்ச்சி என்பது சரிதான். மோடியின் எழுச்சியா இது?




ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் அனல் பறக்கும் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

மகிழ்ச்சியும் கவலையும் நம்பிக்கையும்  அளிக்கும் முடிவுகளாய் நாம்  பார்க்க வேண்டியுள்ளது.

ராஜஸ்தான், டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து மிசோரமில் மட்டும் ஆறுதல் பரிசாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. மத்தியப் பிரதேசத்திலும் சட்டிஸ்கரிலும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட பாஜக ராஜஸ்தானை கைப்பற்றியுள்ளது. டெல்லி இழுபறி மாநிலமாக மாறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இறுதி அத்தியாயம் நாடாளுமன்றத் தேர்தலில் எழுதப்படும் என்பதற்கான துவக்கமாக இம்முடிவுகள் அமைந்துள்ளது. காங்கிரஸ் கண்டிப்பாக வீழ்த்தப்பட வேண்டிய ஒரு மோசமான சக்தி என்பதால் இம்முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. மக்களுடைய வாழ்வை கேள்விக்குறியாக மாற்றிய உலகமயக் கொள்கைகளை உடும்புப் பிடியாகக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. அதிலே அதன் எலும்புகளே நொறுங்கிக் கொண்டிருக்கிறது.

வரலாறு காணாத ஊழல் சாதனைகளை படைத்து மக்களிடமிருந்து வெகு தூரம் விலகிச் சென்று விட்டது என்பதையும் உணர்த்தியுள்ளது. நேரு குடும்ப ஸ்டண்ட், தியாகப் பரம்பரை ஸ்டண்ட், குடிசையில் கூழ் குடிக்கும் ஸ்டண்ட் என்று ராகுல் காந்தி மேற்கொண்ட எந்த ஒரு உத்தியும் எடுபடவில்லை. மக்கள் ராகுல் காந்தியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது தெளிவாகி விட்டது.

ஆனால் பாரதீய ஜனதாவின் வெற்றி கவலையளிக்கிறது. “ இன்னுமாடா இந்த ஊர் நம்மை நம்புது” என்ற வடிவேலுவின் வசனங்களை அவர்களின் கட்சிக்காரர்களே மனசுக்குள் சொல்லிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தாலும் மத்தியப் பிரதேசத்திலோ இல்லை சட்டிஸ்கரிலோ எந்த முன்னேற்றமும் கிடையாது. நரேந்திர மோடி போல புள்ளி விபர மோசடி செய்வதற்குக் கூட வாய்ப்பில்லாத அளவிற்கு அங்கே நிலைமை உள்ளது.

தெரியாத தேவதையை விட தெரிந்த சாத்தான் மேல் என்பார்கள். இந்த மக்களுக்கு தேவதையைப் பற்றி தெரியவில்லை. கண்ணுக்கு தெரிந்த காங்கிரஸோ, பாஜகவை விட இன்னும் மோசமான சாத்தான். துர்தேவதை. அதன் பலன் சிவராஜ் சவுகானுக்கும் ராமன் சிங்கிற்கும் இன்னொரு வாய்ப்பு கிட்டியுள்ளது. அவர்களும் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள்தானே என்று பாஜகவிற்கு உள்ளேயே மோடிக்கு எதிராக கலகக் குரல் எழுப்ப மெல்லிய வாய்ப்பும் கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பலவீனமும் காங்கிரஸ் கட்சி மீதான வெறுப்பும் காங்கிரஸ் கட்சியின் மீதான நம்பிக்கையின்மையும் பாஜக ஆதரவு வாக்குகளாக மாறியுள்ளது. அதை மோடி அலை என்றோ மோடிக்கு ஆதரவான வாக்காகவோ பார்க்கக் கூடாது, முடியாது. ஆனாலும் இதனை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை வைத்துக் கொண்டே ஊதிப் பெருக்கும் வேலைகளை பாஜக செய்யும். செய்யத் தொடங்கி விட்டார்கள். இதை முறியடிக்க வேண்டிய கடமை இடதுசாரிகளுக்கு    இருக்கிறது.          

காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எதிராக ஒரு மாற்று இருந்தால் அதனை மக்கள் ஆதரிக்கத் தயாராக உள்ளார்கள் என்பதை டெல்லி  முடிவுகள் காண்பிக்கின்றன. பாரதீய ஜனதாவிற்கோ, காங்கிரசிற்கோ பதிலாக வலிமையான மாற்று இருக்குமானால் அந்த மாற்றை ஆதரிக்க மக்கள் தயாராக உள்ளார்கள் என்பதுதான் இந்த தேர்தல் முடிவுகள் கொடுத்துள்ள பாடம்.

தனி நபரை மட்டுமே முன்னிறுத்துகின்ற இவ்விரு கட்சிகளுக்கும் கொள்கைகளில் எந்த மாறுபாடும் கிடையாது. விலைவாசியைக் குறைப்பது பற்றியோ இந்தியாவின் பொதுத்துறைகளை பாதுகாப்பது பற்றியோ, அமெரிக்காவை சாராத சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை வேண்டும் என்பது பற்றியோ விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பது பற்றியோ எந்த கவலையும் கிடையாது. மாறுபட்ட கொள்கைகளும் கிடையாது.

ஆனால் இவை அனைத்திலும் மக்கள் நலன் சார்ந்த, தேச நலன் சார்ந்த மாற்றுக் கொள்கைகளை இடதுசாரிகள் முன் வைக்கிறார்கள். அவர்களின் வலிமை அதிகரிப்பதே மக்களுக்கு நல்லது என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய பணி உழைக்கும் மக்கள் இயக்கங்களுக்கு உண்டு. கடுமையான பணிதான். ஆனால் சாத்தியமான பணியும்தான்

3 comments:

  1. உங்கள் பதிவை படித்தவுடன் தோன்றுவது இதுவே..

    “First they ignore you, then they ridicule you, then they fight you, and then you win.”--Mahatma Gandhi..

    ReplyDelete
  2. நாங்கள் சங் பரிவாரங்களுக்கு எதிராக எப்போதுமே போராடிக் கொண்டிருக்கிறோம். இறுதி வெற்றி யாருக்கு என்பதை காலமும் மக்களும் தீர்மானிப்பார்கள்

    ReplyDelete
  3. பாஜக வென்றது இருக்கட்டும் ! ஆனால் நோட்டா பட்டனை 2 இலட்சம் வாக்காளர்கள் அழுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அல்லவா ? வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதன் சதவீதம் இன்னும் அதிகரித்தால் உச்ச நீதிமன்றம் இதை பற்றி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க நேரிடலாம் அல்லவா ? எதுவும் வாக்காளர்கள் கையில்தான் உள்ளது என்பது திண்ணம்

    ReplyDelete