Saturday, December 28, 2013

சுனாமி அலையடித்த கடலோரம் ஒரு இசை மழை



  சுனாமி நினைவலைகள் - மூன்றாம் பகுதி

நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிகழ்வோடு நமது நிவாரணப் பணிகள் நிறைவுற்று இருக்க வேண்டும். ஆனால் முழுமையாக கணக்கு போட்டு பார்த்த போது இன்னும் கொஞ்சம் நிதி இருந்தது. அதை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த போது பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி நம்மை ஈர்த்தது. சுனாமியின் போது தமிழகத் திரைப்படத்துறையிலிருந்து பலரும் நிதி உதவி செய்தார்கள். ஆனால் அவர்களின் உதவி என்பது முதலமைச்சரைப் பார்த்து காசோலை கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு முடிந்தது. ஆனால் ஹிந்தி திரைப்பட நடிகர் திரு விவேக் ஓபராய் நேரடியாக கடலூர் வந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட தேவணாம்பட்டிணம் கிராமத்தில் பல உதவிகளை நேரடியாக செய்தார். அதுமட்டுல்லாது உலகப் புகழ் பெற்ற ட்ரம்ஸ் இசைக்கலைஞர் திரு சிவமணி அவர்களின் இசை நிகழ்ச்சியையும் நடத்தினார். அது அந்தப்பகுதி மக்களால் வரவேற்கப்பட்டது. இந்த செய்தியை படிக்கும் போது நாமும் ஏன் இப்படிப்பட்ட  நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற சிந்தனை ஏற்பட்டது.  

மூன்று இடங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கவுன்ஸிலிங் நடத்தலாம் என்று திட்டமிட்டோம். சிதம்பரத்தில் கிள்ளை, கடலூரில் புதுக்குப்பம், புதுவையில் பிள்ளைச்சாவடி என்று மூன்று மையங்கள் தேர்வு செய்யப்பட்டன. ராணிப்பேட்டையில் உள்ள கீதாஞ்சலி என்ற இசைக்குழு  ஓரளவு குறைந்த கட்டணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டனர். கோட்ட நிர்வாகத்தோடு பேசியதில் இசைக்குழுவிற்கான கட்டணத்தை தாங்கள் ஏற்பதாக ஒப்புக் கொண்டனர். பிப்ரவரி 9, 2005 முதல் பிப்ரவரி 11, 2005 வரை நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகளிலும் முதுநிலைக் கோட்ட மேலாளர் திரு வி.தாமோதரன், கலந்து கொண்டு உரையாற்றினார்.

இசை நிகழ்ச்சி என்பது உண்மையிலேயே ஒரு பரவசமான அனுபவமாகத்தான் இருந்தது. துயரத்தில் மூழ்கிப் போயிருந்த மக்கள் தற்காலிகமாகவாவது தங்கள் கவலைகளிலிருந்து கவனத்தை திசை திருப்ப இசை நிகழ்ச்சிகள் பயன்பட்டன. சிறுவர்கள் உண்மையிலேயே குதூகலித்தனர். இசையின் வல்லமையை, சக்தியை நன்றாகவே உணர முடிந்தது. கடலூர் மாவட்டத்தின் துணை ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  கிள்ளை நிகழ்ச்சியில் பேசுகையில் “இப்பகுதியில் நாங்கள் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நாங்கள் யோசித்திருந்த வேளையில் நீங்கள் நடத்தி விட்டீர்கள் “ என்று பாராட்டினார். மறுநாள் புதுக்குப்பம் நிகழ்ச்சிக்கான தயாரிப்புக்கள் நடந்து கொண்டிருந்த போது மாவட்ட ஆட்சித்தலைவர் ககன்தீப்சிங் பேடியோடு அங்கே வந்த அவர் ‘ இவர்களெல்லாம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், நேற்று கிள்ளையிலும் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள் “ என்று அறிமுகம் செய்தார். உங்கள் சங்கம் செய்து கொண்டிருக்கும் பணிகள் பற்றி நான் அறிவேன் என்று சொன்ன மாவட்ட ஆட்சியர் நீங்கள் தேவனாம்பட்டிணத்திலும் அக்கரைப்பேட்டையிலும் கூட நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று உரிமையோடு சொன்னார்.

புதுக்குப்பம் நிகழ்ச்சியையும் மக்கள் ரசித்துப் பார்த்தார்கள். அந்த கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஒரு வாலிபன் மேடைக்கு வந்து பாடியது என்பதே நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு சான்று. பல பாடல்களை மக்கள் விரும்பி பாடச்சொன்னது அவர்கள் நிகழ்ச்சியில் இரண்டறக் கலந்ததற்கான அடையாளம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் இணைச்செயலாளர் தோழர் ஆர்.கோவிந்தராஜன் அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று  வித்தியாசமான பாணியில் பேசினார். வங்கித்தோழர் மருதவாணன் அன்று கண்களில் கண்ணீரை வரவழைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த மகளிர் தோழர்கள் எஸ்.ஜெயஸ்ரீ, ஜெயந்தி, பத்மா ஆகிய கடலூர் கிளைத்தோழர்கள் அங்கிருந்த குழந்தைகளை கடற்கரைக்கு வருமாறு அழைத்த போது முதலில் அச்சத்தோடு மறுத்தவர்கள், தோழர்களின் இயல்பான பழகுதலுக்குப் பிறகு அவர்கள் கரம் கோர்த்து கடற்கரையில் கால் நனைத்து விளையாடியது நெகிழ்ச்சிகரமான ஒரு சம்பவம் ஆகும்.

புதுவை பிள்ளைச்சாவடி நிகழ்ச்சியும் வித்தியாசமாகவே அமைந்திருந்தது. நமது நிவாரணப்பணிகளை கண்ணுற்ற திருமதி ஜெயலட்சுமி நாயக் என்ற அதிகாரி, அவரது உறவினர் அளித்த இருபதாயிரம் ரூபாயை நம்மிடம் அளித்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கூறி இருந்தார். அதற்கும் பொருட்கள் வாங்கப்பட்டு சுமார் முப்பது குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அறிவியல் இயக்கத் தோழர்கள் அன்று வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசி கவுன்ஸிலிங் அளித்தது பாராட்டத்தக்கது.  அன்றைய கலை நிகழ்ச்சிக்கு புதுவை முதல்வர் திரு என்.ரங்கசாமி வருவதாக ஒப்புக் கொண்டாலும் கடைசி வரை வரவேயில்லை. தகவலும் தெரிவிக்கவில்லை. அவரது உதவியாளர்கள் தொலைபேசி அழைப்புக்களைக் கூட எடுக்கவில்லை. பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடக்க, நடக்க உற்சாகமாகி நடனமாடவே தொடங்கி விட்டனர். தென் மண்டலத் தலைவர் தோழர் சி.ரவீந்திரநாதன் மேடையில் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசியதை ஆரவாரமாக வரவேற்றார்கள். கீழே நடனமாடிய தீபக் என்ற சிறுவனை அவர் மேடையில் நடனமாடச் செய்ததும் அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. சிறுவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து சங்கப் பொறுப்பாளர்களையும் நடனமாட கையை பிடித்து இழுத்துச் சென்றார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களை  வேலு என்பவரது வீட்டில் அமர்ந்து சாப்பிட்டோம். அவர் சொன்னதை இங்கே அப்படியே பதிவு செய்வது சரியாக இருக்கும்.

“ ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்குதான் சிரிச்சிருக்கோம், சுனாமி வந்ததுலேந்து என் பையன் டவுன்ல் இருக்கிற சொந்தக்காரங்க வீட்டிலதான் தூங்குவான். இன்னிக்குத்தான் அவன் பயம் இல்லாமல் எங்க வீட்டிலெயே தூங்கியிருக்கான்”

நெகிழ்ச்சியோடு புறப்பட்டோம்.

நம்மிடமிருந்த நிதி முழுதும் நிறைவடைந்திருந்தது. ஆனால் ஒரு பணி இன்னும் பாக்கி இருந்தது.

ஆம் சுனாமியில் தந்தையை இழந்திருந்த பாக்கியலட்சுமி என்ற மாணவியின் கல்வி குறித்து சங்கம் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் கடமை பாக்கியிருந்தது.

1 comment:

  1. சுனாமி நிவாரனத்தின் போது என்னால் நேரடியாக பங்கு கொள்ள முடியாவிட்டாலும் ராமருக்கு அணில் உதவியது போல சிறு துளியேனும் அதில் என் பங்கு அச்சு கோர்ப்பதில் இருந்தது என்பதை நினைக்கும்போது என் மனம் நிறைவு கொள்கிறது !

    ReplyDelete