Thursday, December 26, 2013

வெண்மணியும் சுனாமியும்



25.12.2004 மற்றும் 26.12.2004 ஆகிய இரு நாட்களுமே வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நாட்களாகி விட்டது. நிலப்பிரபுத்துவ திமிரால் சாம்பலாக்கப்பட்ட வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அந்த வருடம்தான் முதன் முதலாக கீழ்வெண்மணி சென்றிருந்தேன்.  கோட்டச் சங்கப் பொறுப்பாளர்கள் மட்டும் அந்த வருடம் சென்றோம்.  அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தமிழகத்தின் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த பெருமளவில் கலந்து கொள்கின்றார்கள். நேற்றைய நிகழ்வில் எழுநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கு பெற்றார்கள்.

நாற்பத்தி நான்கு தோழர்கள் எரிக்கப்பட்ட இடத்தில் தோன்றும் உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் கிடையாது. கொண்ட கொள்கைக்காக உயிரை தியாகம் செய்த அந்த வீரத் தோழர்களின் நினைவகத்தில் நிற்கிற போது நாமெல்லாம் சிறு துரும்பு என்ற எண்ணம் மட்டுமே ஏற்படும். இவர்களின் தியாகத்திற்கு நாம் செலுத்துகிற உண்மையான அஞ்சலி செங்கொடி இயக்கத்தை வலிமைப்படுத்த நம்மால் இயன்ற பணியை செய்ய வேண்டும் என்ற உணர்வு அங்கே வருகிற ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக உருவாகும்.

நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னும் அஞ்சலி செலுத்த ஒவ்வொரு ஆண்டும் வருகிற தோழர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. வெண்மணியில் வெந்து மடிந்த தோழர்களின் தியாகத்தை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்பதற்கான சான்று அது.

2004 ம் வருடம் வெண்மணி சென்று திரும்பி வருகையில் பூம்புகார் சென்று விட்டு நாகை கடற்கரை வழியாக வேலூர் திரும்பினோம். பூம்புகார் கடற்கரையில் இருந்த மீனவர் குடியிருப்புக்களின் வாசல் வரை அலை தொட்டுச் சென்றதைப் பார்த்து புயல் அடித்தால் இவர்கள் நிலைமை என்னவாகும் என்று பேசிக் கொண்டோம்.

மறுநாள் செயற்குழுக் கூட்டம் இருந்ததால் வேளாங்கண்ணி செல்லலாம் என்ற ஒரு தோழரின் விருப்பத்தை நிராகரித்து வேலூர் திரும்பினோம். விழுப்புரத்தில் எங்கள் வாகனம் பழுதானதால் அக்கூட்டத்தை ரத்து செய்தோம் என்பது வேறு விஷயம்.

அதிகாலை வீடு திரும்பி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது திருவண்ணாமலையில் நாங்கள் இறக்கி விட்ட தோழரின் தொலைபேசி அழைப்பு தூக்கத்தை கலைத்தது. நேற்று நாம் சென்ற பகுதிகள் எல்லாம் அழிந்து போய் விட்டது என்று பதட்டத்துடன் அவர் குரல் ஒலித்தது.

நாம் சென்றிருந்த நேரம் சுனாமி வந்திருந்தால்?
ஒரு வேளை வேளாங்கண்ணியில் தங்கியிருந்தால்?

இந்த கேள்வி ஒவ்வொரு வருடமும் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment