சுனாமி நினைவலைகள் இரண்டாவது பகுதி
இந்த
தருணத்தில் நமக்கு சில தகவல்கள் வந்திருந்தன. கோவைக் கோட்டத்தின் மகளிர்
துணைக்குழு நிவாரணப்பணிகளுக்காக உடனடியாக ரூபாய் பத்தாயிரம் அனுப்பியிருந்தனர்.
மறு நாளே சேலம் மற்றும் மதுரைக் கோட்டங்களின் தோழர்கள் நிவாரணப் பொருட்களோடு
வருவதாக சொல்லி இருந்தார்கள். அதன்படியே 29.12.2004
அன்று சேலம் மற்றும் மதுரைக் கோட்ட தோழர்கள், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ்
தோழர்கள் கடலூர் வந்தனர். தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன், இணைச்
செயலாளர் தோழர் எம்.கிரிஜா ஆகியோரும் வந்திருந்தனர்.
மார்க்சிஸ்ட்
கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.தனசேகரன் அவர்களின் வழி
காட்டுதலோடு கடலூர் நகரில் இருந்த சில
முகாம்களுக்கு சென்று அங்கே இருந்த மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. சாமியார்
தோப்பு, பெரிய குப்பம், புதுக்குப்பம் போன்ற ஊர்களுக்கும் சென்றோம். அங்கே எல்லாம்
முகத்தில் முகமுடி அணியாமல் செல்லவே முடியாத நிலைதான் இருந்தது. சடலங்கள்
புதைக்கப்பட்டிருந்தாலும் காற்றில் அதன்
வாடை அடித்துக் கொண்டே இருந்தது. அன்று காலை புறப்படும் முன்னே தடுப்பூசி போட்டுக்
கொண்டுதான் எல்லோரும் செல்ல வேண்டும் என வலியுறுத்திய தோழர் தனசேகரன் அதற்கான
ஏற்பாட்டையும் செய்திருந்தார். அது எவ்வளவு அவசியம் என்பது பெரும் இழப்பு ஏற்பட்ட
கிராமங்களுக்கு சென்ற போதுதான் தெரிந்தது. கடலூர் கிளைச்சங்க தோழர்கள் பலரும்
அன்றைய தினம் நிவாரணப் பணிகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். உணவு,
உடை என்ற அளவில் முதற்கட்ட பணிகள் முடிந்தது.
அன்றைய
தினம் கடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டிருந்த மக்களை பார்க்க
சென்றிருந்தபோது தந்தையை சுனாமியில் இழந்திருந்த பாக்கியலட்சுமி என்ற மாணவி தனக்கு
உடைகள் எதுவும் தேவையில்லை, என்னை படிக்க வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
சங்கமும் அவருக்கு எல்லா உதவிகளையும் கண்டிப்பாக செய்கிறோம் என உறுதியளித்தது.
ஒரு
குடும்பம் நடத்துவதற்கான அத்தியாவசியமான பொருட்களை அடுத்த கட்டமாக வழங்குவது என்று
முடிவெடுக்கப்பட்டது. அடித்துச் சென்ற அலை வீட்டில் உள்ள பொருட்களையும் அல்லவா
எடுத்துச் சென்றிருந்தது! இதற்கிடையில் ஒரு நாள் ஊதியம் என்ற வேண்டுகோளை ஏற்று
தோழர்கள் அளித்த நிதியும் கோட்டச் சங்கத்திற்கு வந்து கொண்டே இருந்தது. எல்.ஐ.சி
நிர்வாகமும் சுனாமி நிவாரணத்திற்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு பங்களிப்பு
செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. அப்படி நிர்வாகத்தின் மூலம்
ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு. அப்படி
இருப்பினும் நமது தோழர்கள் வருமான வரி விலக்கு என்பதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல்
தங்களின் பங்களிப்பு நேரடியாக பாதிக்கப் பட்ட மக்களை சென்றடைய வேண்டும் என்றால்
அது சங்கத்திடம் அளித்தால் மட்டுமே சாத்தியம் என்ற தெளிவான புரிதலோடு தோழர்கள்
நிதி அளித்தார்கள். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் நாடு முழுதும் உள்ள
தோழர்களிடம் நிதிக்கான வேண்டுகோள்
விடுத்திருந்தது.
தோழர்களிடமிருந்து
கிடைத்த நிதி மட்டுமல்லாது மக்களிடமும் செல்வோம் என்று முடிவெடுக்கப்பட்டு மக்கள்
மத்தியிலும் சென்றோம். அது ஒரு வாழ்நாள் அனுபவம் என்பதை இந்த வசூல் இயக்கத்தில்
பங்கேற்றவர்கள் என்றைக்கும் நினைவு கொள்வார்கள். சுனாமி வந்து கிட்டத்தட்ட பத்து
நாட்கள் பின்பே நாம் மக்களிடம் சென்றோம். அதற்குள்ளாக ஏற்கனவே அரசியல் கட்சிகள்,
தொண்டு அமைப்புக்கள் ஆகியோர் மக்களிடம் சென்றிருந்தனர். அப்படி இருந்தும் மக்கள்
நாம் சென்ற போதும் நம்மிடமும் பணமாகவோ, பொருளாகவோ உதவிகளை வழங்கினார்கள். மக்களிடம்
சென்ற எல்லா மையங்களிலும் நம்மிடம் இல்லை என்று சொல்லாமல் மக்கள் வாரி
வழங்கினார்கள். சில சம்பவங்களை மட்டும் இங்கே பதிவு செய்வது அவசியமாகும்.
வேலூர்
நகரத்தில் மக்களிடம் செல்கையில் மக்களிடம் கையேந்தி தனது வாழ்க்கையை ஓட்டி வருகிற
ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி, தன் கைவசம் இருந்த பத்து ரூபாயையும் நம்மிடம்
அளித்தது நெகிழ்ச்சியூட்டியது. அது போல இன்னொரு மூதாட்டி, நடைபாதையில் வடை சுட்டு
வாழ்வை நடத்தும் அந்த பெண்மணியும் தன் கைவசம் இருந்த பணத்தை அப்படியே கொடுத்தார்.
அடுத்த நாளை எப்படி எதிர்கொள்வோம் என்ற பிரச்சினையில் உழலுபவர்கள் கூட பெரும்
துயரத்தில் தவிப்பவர்களுக்கு தங்களால் இயன்றதை செய்வோம் என்று முன்வந்தது
மனிதாபிமானம் இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை
உணர்த்தியது. அதே போல சிறிய அளவில் ஆயத்த உடை விற்பனைக் கடை வைத்துள்ள ஒரு வணிகர்
ஐம்பது ஆடைகளை அப்போதே கொடுத்து விட்டு, அதன் பிறகு அவரே அலுவலகம் வந்து இன்னும்
ஐம்பது ஆடைகளை கொடுத்து விட்டுச் சென்றார். அதே போல் இன்னொரு சிறு வணிகர் நூறு
பிளாஸ்டிக் குடங்களை அன்பளிப்பாய் அளித்து விட்டுச் சென்றார்.
திருவண்ணாமலை,
திருக்கோயிலூர், விழுப்புரம் ஆகிய கிளைகளின் தோழர்கள் அவர்களே நேரடியாக கடலூர்
சென்று கடலூர் கிளைச்சங்கத் தோழர்களின் உதவியோடு பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக
பொருட்களை வழங்கி விட்டு வந்தார்கள். திருப்பத்தூர் கிளையில் மக்களிடம் வசூலான
பொருட்களோடு அப்போதைய கிளைச்சங்கப் பொறுப்பாளர்கள் தோழர்கள் டி.ஸ்ரீதரன் மற்றும்
கே.ரவி நள்ளிரவு நேரத்தில் ஆட்டோவில் வேலூர் வந்து அவற்றை கொடுத்து விட்டு போனார்கள்.
தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவில் எண்பது கிலோ மீட்டர் நள்ளிரவில் பயணம் செய்வது
என்பது ஆபத்தானது. ஆனால் உணர்வு வேகத்தில் இந்த தோழர்கள் ஆபத்தையும்
பொருட்படுத்தாது உற்சாகத்தோடு வந்தார்கள்.
மொத்தமாக
ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒரு ஸ்டவ், ஒரு பக்கெட், ஒரு குடம், ஒரு குவளை, சமையல்
பாத்திரங்கள், அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள், ஒரு காலண்டர் போன்றவை கொண்ட ஒரு பை தயாரித்து வழங்குவது என்று முடிவு
செய்யப்பட்டு அதற்காக பொருட்களை சேகரிக்கும் பணி தொடங்கியது. முன்னூறு
குடும்பங்களுக்கு இந்த உதவியை செய்வது
என்று நாம் யோசித்திருந்தோம். கோவைக் கோட்டச்சங்கமும் இந்த பணியில் இணைந்து
கொண்டது. இருநூற்றி ஐம்பது குடும்பங்களுக்கு தங்கள் கோட்டம் சார்பில் பொருட்கள்
வழங்க கோவைக் கோட்டம் முன்வந்தது. ஐந்நூற்றி ஐம்பது குடும்பங்களுக்கு இந்த
பொருட்களை தயார் செய்வது மிகப் பெரிய சவால் என்பது பணியில் இறங்கிய பின்புதான்
தெரிந்தது.
எவர்சில்வர்
பாத்திரங்களும் சரி, அலுமினிய பாத்திரங்களும் சரி ஒரே கடையில் கிடைக்கவில்லை,
பிளாஸ்டிக் பொருட்களின் நிலையும் இதுதான். பல கடைகள் ஏறி இறங்க வேண்டியிருந்தது.
ஒரே தரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக பெரும் பிரயத்னங்கள் மேற்கொள்ள வேண்டி
இருந்தது. நாம் எந்த நோக்கத்திற்காக இந்த பொருட்களை வாங்குகிறோம் என்று விளக்கும
போது அவர்கள் குறைவான லாபத்திற்கே நமக்கு பொருட்களை அளித்தார்கள்.
சிக்கலே
ஸ்டவ்வில்தான் வந்தது. ஐந்நூற்றி ஐம்பது ஸ்டவ்கள் தேவை இருக்கையில் வேலூர் முழுதுமே
இருந்தது என்பது வெறும் ஐம்பது மட்டும்தான். அதுவும் தரம் குறைந்ததாக இருந்தது.
சென்னையில் கிடைக்கும் என்றார்கள். ஆனால் வியப்பளிக்கக் கூடிய விதத்தில்
சென்னையிலும் நாம் எதிர்பார்த்தது போல கிடைக்கவில்லை. அங்கே இருந்த வணிகர்களே
இரண்டு உற்பத்தியாளர்களின் விபரங்களைக் கொடுத்து பார்க்க சொன்னார்கள்.
அதிலே
ஒருவர் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். இருமுடி கட்டிக்
கொண்டிருந்த கோயிலுக்கே சென்று அவரை சந்தித்த போது தன்னிடம் கையிருப்பு இல்லை
என்றும் குறுகிய காலத்திற்குள் தயாரிப்பது சாத்தியமில்லை என்று கைவிரித்து
விட்டார். அடுத்தவரிடம் ஒரு இருநூறு ஸ்டவ் கையிருப்பு இருந்தது. அவரோடு பேசி பேசி
மீதமுள்ளதை ஐந்து நாட்களில் தயாரித்துத் தரவும் ஒப்புக் கொண்டார்.
ஸ்டவ்
தவிர மற்ற எல்லா பொருட்களுமே கோட்ட அலுவலக வளாகத்தில் வந்து இறங்கியது. மன மகிழ்
மன்றம் நிரம்பி வழிந்தது. அலுவலகத்தின் முன்னறையிலும் நடப்பதற்குத்தான் இடம்
இருந்தது. அடுத்த கட்ட பணி என்பது பாத்திரங்கள், அரிசி, மளிகைப் பொருட்களை
பிரித்து குடும்ப வாரியாக பிரிப்பது என்பது.
கோட்ட
அலுவலகக் கிளையின் உறுப்பினர்கள் மற்றும் அன்று தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி
இன்று நிரந்தர ஊழியர்களாக உள்ள தோழர்கள் ஆகியோரின் பணி மிகவும் சிறப்பானது. இந்த
சமயத்தில் பல தோழர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்திற்கும் மேலாக 25 கிலோ அரிசி
முட்டைகளை வழங்கினார்கள். 50 கிலோ
சர்க்கரை மூட்டை கூட அன்பளிப்பாய் வந்தது. அரிசி, சர்க்கரை, பருப்பு
வகைகள், மற்ற பொருட்கள் ஆகியவற்றை தனித்தனி பாக்கெட்டுக்களில் போடும் வேலையும்,
பின் பாத்திரங்களோடு சேர்த்து ஒரே பையில் போடும் வேலையும் கிட்டத்தட்ட இரண்டு
நாட்கள் நடந்தது. இதற்காக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இலச்சினையோடு
கூடிய பிரத்யேக பை ஒன்றும் தயாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலை போல இந்த
பணி நடந்தது. பொங்கலுக்கு முன்பு இந்த பொருட்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று
முடிவு செய்தோம்.
கோட்ட
அலுவலகத்தில் நடந்த சிறு நிகழ்ச்சியில் முது நிலை கோட்ட மேலாளர் திரு வி.தாமோதரன்
வாழ்த்துரை வழங்க பொருட்கள் ஏற்றப்பட்ட
வாகனங்கள் சுனாமி பாதிக்கப்பட்ட
பகுதிகள் நோக்கி புறப்பட்டன. கடலூர் மாவட்டத்திலும் புதுவையிலுமாக இந்த பொருட்களை
பிரித்து அளிப்பது என்று முடிவு
செய்திருந்தோம். இன்னும் ஒரு நூறு குடும்பங்களுக்கும் பொருட்கள் இருந்தால்தான்
புதுவையில் பிள்ளைச்சாவடி பகுதியில் அனைவருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல்
நிவாரண உதவி வழங்க முடியும் என்று அங்கே இருந்த மார்க்சிஸ்ட் கட்சி பொறுப்பாளர்கள்
கருத்து தெரிவித்தனர். என்ன செய்வது என்று
யோசித்த தருணத்தில் இன்னும் நூறு குடும்பங்களுக்கான
நிவாரணப் பொருட்களுக்கான செலவினத்தை நாங்கள் ஏற்கிறோம் என்று கோவைக் கோட்டச்சங்கம்
உடனடியாக ஒப்புக் கொண்டது.
எனவே
அன்று நிவாரண உதவிகளை கடலூர் மாவட்டத்தில் மட்டும் அளித்தோம். கடலூர் மாவட்டத்தின்
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், தோழர் எஸ்.தனசேகரன், தோழர் மூசா, தோழர் மாதவன்,
தோழர் கற்பனைச்செல்வம், வங்கி சங்கத் தலைவர் தோழர் மருதவாணன் ஆகியோருடைய அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய
ஒத்துழைப்பால், அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு பயனாளிகளை கண்டறிந்ததால் நம்மால்
எளிதாக மக்களிடம் அவற்றை சேர்க்க முடிந்தது. தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர்
ஆர்.டி.தரணிபதி, துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன், இணைச்செயலாளர்கள் தோழர்
எஸ்.சந்தானம், தோழர் எம்.கிரிஜா, கோவைக் கோட்டச்சங்க பொதுச்செயலாளர் தோழர்
ஜி.சுரேஷ் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார்கள்.
சிதம்பரம் கிள்ளைக்கு இரண்டாம் முறையாக சென்றோம். இந்த முறை நெரிசலில்
சிக்கவில்லை. அதற்கு தோழர்கள் செய்து வைத்திருந்த முன்னேற்பாடுதான் காரணம்.
ஒரு
லாரிலிருந்து இன்னொரு லாரிக்குப் பொருட்களை மாற்றுவது, லாரியில் இருந்து நிவாரணம்
வழங்கும் இடத்திற்கு பொருட்களை கீழே இறக்குவது என்று கடினமான, மிக அதிகமான
உடலுழைப்பு தேவைப்படும் பணிகள். ஆனால் இவையெல்லாம் நம் தோழர்கள் வெகு எளிதாக
செய்து முடித்தார்கள். தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் கூட
மூட்டைகளை தூக்கி வந்து தானும் ஒரு தொண்டர்தான் என்பதை சொல்லாமல் சொன்னார்.
மற்றவர்களுக்கான உதாரணமாக இருந்தார். வியர்வை கொட்டிக் கொண்டிருந்தாலும் முகத்தில்
சோர்வே இல்லாமல் உற்சாகமாக பணியாற்றினார்கள். இந்த உற்சாகத்தால்தான் நாம் ஒரு
கிராமத்திலிருந்து அடுத்த கிராமம் என்று வேகம் வேகமாக செல்ல முடிந்தது. இரவு
நேரமும் கூட பணி தொடர்ந்தது. நிவாரணப் பொருட்களை முழுமையாக அளித்து முடித்த பின்பு
அத்தனை தோழர்களின் முகத்திலும் களைப்பையும் மீறி
“ நம்மால் இயன்றதைச் செய்தோம் “ என்ற நிறைவு இருந்தது. கிட்டத்தட்ட நாற்பது தோழர்கள் இந்நிகழ்வில்
பங்கேற்றனர். வேலூரிலிருந்து சில பெண் தோழர்களும் வந்திருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
கோவைக்
கோட்டம் கூடுதலாக நூறு குடும்பங்களுக்கு
வழங்குவதாகச் சொன்னதால் அதற்கான பொருட்களை சேகரிக்கும் பணி தொடங்கியது. முந்தைய
அனுபவத்தால் இம்முறை பணி சற்று எளிதாகவே இருந்தது. ஜனவரி மாதத்திலேயே ஒரு விடுமுறை
நாளன்று புதுவை நோக்கிய பயணம் தொடங்கியது. அதற்கு முதல் நாள் சுனாமி
நிவாரணப்பணிகளில் கலந்து கொண்ட, கடுமையான் உழைப்பை நல்கிய தோழர்களுக்கு ஒரு
பாராட்டு விழா நடைபெற்றது. தென் மண்டல துணைத் தலைவர் தோழர் கே.சுவாமிநாதன்,
இணைச்செயலாளர் தோழர் எம்.கிரிஜா ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள். தற்காலிக
ஊழியர்களாக இருந்தாலும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினரகளுடைய
உணர்வோடு உள்ளீர்கள் என்று அவர்கள்
பாராட்டினார்கள். இன்று அந்த தோழர்கள் நிரந்தர ஊழியர்களாகவே, சங்க
உறுப்பினர்களாகவே உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
புதுவை
பிள்ளைச்சாவடி கடற்கரையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுவை
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தோழர்கள் டி.முருகன், வி.பெருமாள், எஸ்.ராஜாங்கம்
ஆகியோருடைய வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்போடு இருநூற்றி ஐம்பது குடும்பங்களுக்கு
நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. தென்
மண்டல துணைத்தலைவர்கள் தோழர் கே,சுவாமிநாதன், தோழர் என்.ஆனந்த செல்வி,
இணைச்செயலாளர்கள் தோழர் எம்.கிரிஜா, எஸ்.சந்தானம் ஆகியோரோடு கோவைக் கோட்டப்
பொருளாளர்களும் பங்கேற்றனர். வேலூரிலிருந்து இரு மகளிர் தோழர்கள், தோழர்
ஜி.உதயபானு, தோழர் ஆர்.அமுதா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
( நாளை தொடரும்)
மீண்டும் ஒருமுறை என்னை நினைவலைகளோடு மூழ்க வைத்த நிகழ்வு !
ReplyDelete