Friday, December 20, 2013

தேவயானி கைது விவகாரம் – ஒரே குழப்பமா இருக்குதே!



 
நேற்றைய பதிவில் சொன்னது போல இந்திய தூதரக அதிகாரி திருமதி தேவயானி கோபர்கடேவை அமெரிக்கா கைது செய்த விவகாரத்தில் இந்திய அரசு காண்பித்துள்ள வீரம் நம்ப முடியாததாக இருக்கிறது. மன்மோகன் சிங்கே வாய் திறந்து கண்டித்து விட்டார், அதுவும் அமெரிக்காவை. காங்கிரஸ்காரர்கள் அமெரிக்க தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தி விட்டார்கள்.

அமெரிக்கா தனது நடவடிக்கையை நியாயப்படுத்தும் போதுதான் கொஞ்சம் உதைக்கிறது. தொழிலாளர்கள் நலனை பாதுகாப்பது போல பேசுகிறார்கள். அப்படி தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கிற அரசா அமெரிக்க அரசு?

உலகப் பொருளாதார நெருக்கடியில் ஊக வணிகத்தில் பல ட்ரில்லியன் டாலர்கள் காணாமல் போனது தொழிலாளர்களின் பென்ஷன் நிதிதான். பெயில் அவுட் பேக்கேஜ் என்று ஜார்ஜ் புஷ் அரசும் பிறகு ஓபாமா அரசும் அள்ளித் தந்தது நிலை குலைந்து போன  பன்னாட்டுக் கம்பெனிகளை தூக்கி நிறுத்த மட்டுமே, தெருவில் நின்ற தொழிலாளர்களை பாதுகாக்க அல்லவே...

அமெரிக்க தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பணிகளை எல்லாம் இந்தியா போன்ற மூன்றாவது உலக நாடுகளின் தொழிலாளர்களுக்கு அடிமாட்டு ஊதியம் கொடுத்து லாபத்தை அதிகரிப்பது குறித்து அமெரிக்க அரசு என்றாவது கண்ணீர் சிந்தியுள்ளதா?

ஒரு இந்தியத் தொழிலாளியின் உரிமைக்காக கவலைப்படுகிற அமெரிக்க நாட்டின் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்கிற போது இந்திய நாட்டின் தொழிலாளர் உரிமைகளை, தொழிற்சங்க உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறதே....

இந்த குழப்பம் எல்லாம் அமெரிக்காவின் நேர்மையால் உருவானது.

இந்திய அரசின் நேர்மையும் குழப்பத்தை உருவாக்கி விட்டது.

தேவயானி கோபர்கடே என்ற வெளியுறவு  அமைச்சக அதிகாரி பற்றி இவ்வளவு கவலைப்படுகிறவர்கள், அவரால் அழைத்துச் செல்லப்பட்ட அந்த சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற பணிப்பெண் பற்றி ஏன் கொஞ்சமும் கவலைப்படவில்லை? அவரது கணவர் அளித்த புகாரை யார் வாபஸ் பெற வைத்தார்கள்?

மக்களுக்கு தெரியாத மர்மம் ஏதாவது இந்த விவகாரத்தில் உள்ளதா? இல்லை அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரை காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கை மட்டும்தானா? சொல்லுங்க சார் சொல்லுங்க, யாராவது சொல்லுங்க, ரொம்ப ரொம்ப குழப்பமா இருக்கு...

6 comments:

  1. ஆதர்ஷ் விவகாரத்தில் ஆதாயம் அடைந்தவர்களில் தேவயானியும் ஒருவர் என்று செய்தி வந்திருக்கிறதே ...?

    ReplyDelete
  2. ஒன்று அதிகர வர்கத்தை காப்பாற்றும் ஈடுபாடு. அதை தவிர பல காரணங்கள் இங்கு சாத்தியம்.
    - எதையோ மறைக்க இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்குதல் (அதே நேரத்தில் நடந்த இந்திய அளவிலான வங்கி வேலை நிறுத்த காரணம் பற்றி எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் ?)
    - பாராளுமன்றம் சத்தமில்லாமல் சில முடிவுகளை எடுத்திருக்கலாம்
    - தேர்தலுக்கு முன் வீரனாக காட்டிக்கொள்ள ஒரு எளிய, உணர்ச்சி வயமான, மிகைப்படுத்தப்பட்ட பிரச்சினை
    - நமக்கு தெரியாத திரை மறைவு காரணங்கள்

    ReplyDelete
  3. ரொம்பத்தான் கொழப்பறீங்க!!!!!!!!!!

    ReplyDelete
  4. இதை பற்றிய ஒரு கருத்து மோதல் திரு கார்த்திக் பாலாஜி எல் எனும் மருத்துவரின் முக நூல் பக்கத்தில் உள்ளது. அதை பார்த்தால் ஒரு தெளிவு கிடைக்கும் என்பது என் எண்ணம் தோழரே !

    ReplyDelete
  5. அமெரிக்க அரசு தொழிலாளர் நலன் என்பதற்கு மட்டுமின்றி போலி விசா, போலி ஆவணங்கள் போன்றவற்றையும் கொடுத்ததால் தான் தலைமை நீதித்துறை அதிகாரியின் உத்தரவில் தேவயானி கோபர்கடேவை கைது செய்துள்ளது. ஆனால் இந்திய அரசின் இத்தனை முனைப்பும் சந்தேகத்தை கிளப்பிக் கொண்டே உள்ளது.



    --- விவரணம் --- 

    ReplyDelete
  6. என்னத்தை சொல்ல? எழை தொழிலாளி சங்கீதாவுக்காக அமெரிக்கா கண்ணீர் சிந்த மறு பக்கம் தமிழங்க சிலர் இந்தியா அமெரிக்காவை தாக்கிவிட்டதே என்று இந்தியாவுக்கு எதிராக பொங்கியெழ ஒரே பரபரப்பாக உள்ளதுங்க.
    தேவயானியே மாதந்தம் 4500 டாலர் ஊதியம் பெறமாட்டார், அப்படியிருக்க சங்கீதாவுக்காக அவர் அமெரிக்காவிடம் விசா விண்ணப்பித்த போது சங்கீதாவுக்கு நான் மாதம் 4500 டாலர் ஊதியம் வழங்குவேன் என்று சொன்னதை தொழிலாளி நலன்களின் மீதான அளவற்ற அக்கறை காரணமா அமெரிக்கா அப்படியே நம்பி ஒரு ஏழை தொழிலாளி சங்கீதாவாவது நல்லாவரட்டுமே என்று விசா கொடுத்தது ஒரு நல்லெண்ணம் பாருங்க. அமெரிக்கா கிரேட்.

    ReplyDelete